October 07, 2008

ஊடகத்துவம் - கவியரங்கக் கவிதை


27-11-2004 அன்று இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் விருது வழங்கும் விழாவில் கவியரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் நான் வாசித்த கவிதை இது.  
2004ஆம் ஆண்டின் அந்தக் கால கட்டத்தின் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை மறைமுகமாகவும்,நேரடியாகவும் குறிப்பிட்டுள்ளேன்.  
அந்தக் காலப் பகுதி,இலங்கையில் இடம் பெற்ற நிகழ்வுகள்,மாற்றங்கள் பற்றி அறிந்தோருக்கு நன்றாகவே இவை புரியும்...

ஊடகத்துவம்
 
உயிர்களை முதலீட்டு உணர்வுகளால் உரமிட்டு 
ஊதியத்தை ஊதி உதறி 
உங்களுக்காக உழைக்குஊடகவியலாளருக்கான நாள் இன்று! 
பல உண்மைகளை உணர்வுபட சொன்ன
நேற்றைக்குப் பின் இன்று!  

குருதி வாசம்,சதை நாற்றம்,நரம்புகளின் உறைவு தாண்டி 
வெளிவரும் நாற்புற செய்திகளும் உருவெடுக்கும் 
உழைப்பாளரின் உணர்வுகளுக்கு 
அங்கீகாரம் அளிக்கும் நாள் இன்று! 
ஊடகத் தத்துவத்தை ஊடகமாக்கி 
உண்மைகளை வெளிச்சம் போடும் அரங்கமிதில் 
பாவுக்கு நாயகமாக எங்கள் நாவுக்கு நடுவராக
நாலுமறிந்த கவிவேந்தராக
நல்லறிஞர் சோ.பாவை வணங்கி மகிழ்கிறேன்!  

செல்லப்பர் சொன்னவற்றை 
சொல்லப் போகிறோம் நாமிங்கு! 
அவர் சித்தர்- கொஞ்சம் பித்தர் 
நாங்கள் கொஞ்சம் சித்தர் ஆனாலும் பித்தர்
பலர் பலவிதத்தில் எத்தர்!  

எல்லாம் மறந்து மெய் சொல்லும் இளைய அப்துல்லா 
பொல்லாப்பொன்றில்லை என்றே 
பொருள் சொல்லும் அண்ணன் பிரசாந்தன் 
நாமறியோம் என்றே நாலுவித மெய் சொல்லும் 
அண்ணன் சிவா 
எப்பவோ முடிந்த காரியம் என்றே 
யாரும் எண்ண முடியாத எழுந்தே ஏற்ற 
தனித்தன்மை வாய்ந்த தயா அண்ணா
என் சக கவிஞர்கள் - 
உங்களையும் கவிபாடும் இவன் துதிகள்!  

வானலை அரசின் மைந்தனின் 
வணக்கங்கள் அனைவருக்கும்! 

பாடல் போட்டு பலகதை பேசி 
செய்திகள் கூறும் நான் இன்று 
பாப்பாட வந்தேன் இங்கே!  

ஊடகத் தத்துவம் சொல்ல வந்தேன் 
நான் 
ஊடகத் தத்துவத்தை மட்டுமன்றி 
ஊடகத்து அத்துவத்தையும் சொல்வேன் 
ஊடகத்து அத்துவம் 
ஊடகத்தில் ஒன்றுபட்ட இரண்டறாத் தன்மை 
ஏனெனில் என் தலைப் பொருள் முழுதும் உண்மை.  

இன்று நான் இவ்விரங்கிலே சொல்பவை 
நான் சொல்பவையே! 
நாம் சார்ந்த நான் சொல்பவையே!  
நாலாக மடித்து- எட்டாக வளைந்து 
நாணிக்கோணி சொன்னதற்கெல்லாம் யெஸ் போட்டு
சோற்றுக்குப் படிபெற்று
சொன்னபடி ஆடி பின்
சோக்கிற்கு வந்து பொருளிற்கு
சும்மா கவி சொல்ல,கதை சொல்ல 
எனக்கு உடன்பாடில்லை!  
காரணம் என் தலைப்பொருள் முழுவதும் உண்மை!  

பல விஷயம் சொல்வேன் இன்று 
நீவிர் அறிந்தது கொஞ்சம்; 
அறியாமல் மறந்தது கொஞ்சம் 
எனவே நீங்கள் 'அப்பிடியே சங்கதி' 
எனக் கேட்டுக்கொள்ளலாம். 
ஏனெனில் - என் தலைப்பு முழுவதும் உண்மை! 
அப்படியென்றாலும் நானல்ல பொறுப்பாளி! 
காரணம் என் தலைப் பொருள் முழுவதும் உண்மை!  

இலத்திரன் ஊடகம் என்றால் 
அங்கே இலக்கியம் இல்லை 
எம் தமிழும் நாளை இல்லாதொழியும் என்போரே- 
அஃதெனின் 
களப்பிரர் காலத்தில் 
தமிழ் காணமலன்றோ போயிருக்கும்!  
களப்பிரரும் கரண்டி முள் கொண்டு உணவுண்ணும் 
கடல் கடந்து நாடு பிடிக்க வந்தோரும் 
விட்டு வைத்ததையா 
இன்று Electronic mediaவும் - internetம் அழித்துவிடும்? 

அதுபோல் வளர்ப்போம்,தமிழ் வளர்ப்போம் என்பவரே
கம்பனும் பாரதியும் வளர்க்காததையா
நீங்கள் வளர்க்க முடியும்? 
அன்றொருவன் சொன்னது போல் 
நீவிர் வளர்ப்பதற்கும் மழிப்பதற்கும் 
தமிழொன்றும் தாடி மீசை யன்று! 
இருக்கும்- அது அப்படியே இருக்கும்! 
நாம் இருக்கும் வரை! 
நம்பர் வன்(நம்மவன் ) - அவன் இருக்கும் வரை! 
நம்மை ஆள்பவன் இருக்கும் வரை!  

முதலில் ஒரு தன்னிலை விளக்கம்! 
எம் தனியார் ஒலியலைகளின் தனிப்பிரகடனம்! 

சொல்வதெல்லாம் சொல்! 
தருவதெல்லாம் செய்தி!
ஒரு வழி வந்து மறுபக்கம் பதிலின்றி 
எதிர்விளைவு எதுவுமின்றி
எங்கோ பெய்த மழைபோல 
இருந்த நிலை மாறி
நிலை மாற்றி
எல்லோர் குரலும் ஒலித்திட (voice cuts)  
எல்லா உண்மையும் வெளித்திட 
நீரும் நாமும் இணைந்திட 
நேயரின் கருத்தும் நேரடியாக வர 
ஆதி சங்கரர் சொன்ன அத் வைதத்தை 
ஊடகத்தில் அத்துவப்படுத்தி 
புது ஊடகத்து தத்துவம் -  
புது ஊடகத்து அத்துவம் - ஊடகத்தில் இணைவு 
இரண்டறக் கலத்தலை 
நிகழ்த்தியோர் நாமே! 
அத்துவத்தை தத்துவமாக்கி 
புது ஊடகத்து அத்துவம் 
நிகழ்த்தியோர் நாமே!  

ஒரு தெளிவாக்கல்
செவிக்குப் பிந்திய கொம்பு - செவியை முந்தும்! 
வளர்ச்சியிலும் கூர்மையிலும் 
முடிக்கும் பின்வரும் மீசையும் தாடியும் 
வழுக்கையாய் உதிர்வதில்லை!
பிந்தி வரும் fashion தான் மவுசு கூட!  

காத்திருந்து வரும் பேச்சுதான்- நேற்று(Nov 26
கனவிஷயம் - கனமான விஷயம் தரும்! 
பிந்திய செய்திகள் தான் 
சுடச்சுட வருகிறது! 
பிந்தி வருவன 
வளர்ச்சியில் முந்தியே இருக்கும்! 
பிந்தி வருவன – முந்தையதை விட 
அறிவில் முதிர்ந்தே இருக்கும்! 
பழையதை விட வலியதாயே இருக்கும்! 
வளர்ச்சியிலும் இருந்ததை முந்தும்! 
வலியுறுத்தித் தொடர்கிறேன்!  

எல்லாத் தொழிலும் 
எட்டே மணிநேரம் 
ஒருமணி கூடினும் ஓவர்டைம்! 
ஒருமணி கூட்டினும் ஒலங்கள்! 
ஒயாத போராட்டங்கள்! 
ஆனால் நாங்களும்- நலம் காக்கும் வைத்தியரும் 
போலீஸூம்- நம்மவரும் தான் 
நாள் முழுவதும் நாழிகை முழுவதும் 
நாட்காட்டி காட்டும் வருடம் முழுவதும் 
ஒயாமல் தொழில் செய்வோர்!  
கடிகாரம், காற்றுப் போல் 
ஒயாமல் தொழில் செய்வோர் 
ஆமாம்.. officeஇல் off ஆனாலும் 
எங்கள் தொழிலில் off ஆகாமலேயே இருக்கிறோம்! 
ஒயாமலேயே இருக்கிறோம்! 
உண்மைகளை ஒழிக்காமலேயே – 
ஒளிக்காமலேயே உரைக்கிறோம்! 
அதனால் தான் ஒழிக்கவும்படுகிறோம். 
அடிக்கடி off செய்யவும் படுகிறோம்!  

கால் மேல் கால் போட்டு – A/C போட்டு 
9மணிக்கு ஒரு signஉம் 
டாணென்று மணி 5 அடிக்க 
மற்றொரு signஇட்டு 
பஸ்பிடித்து,காரெடுத்து சென்று 
உடைமையையும் தொழிலையும் 
கழற்றிப்போட்டு ஒய்வெடுக்க 
ஊடகவியலாளர் ஒன்றும் 
பத்தோடு பதினொன்றாகத் தொழில் புரிவோரன்று! 
படுத்தாலும் விழித்தாலும் 
பசித்தாலும் நசித்தாலும் 
கழுத்தின் மேல் நாள் முழுதும் 
கத்தி தொங்குதென்றே தெரிந்து கொண்டே 
பேனா பிடித்தோ - மைக் பிடித்தோ 
உண்மை விதைப்பவர்! 
பின் அறுவடை செய்யப்படுபவர்! 
உண்மை விதைப்பதால் 
உயிர்கள் அறுவடை செய்யப்படுபவர்!  

புதிய தத்துவம் கேட்பீர்- 
இருப்பதை தான் இல்லாதாக்க முடியும்!
உண்மையான இருப்பைத்தான் 
அழிக்கமுடியும்!
இல்லாதொன்று இருக்காது!
இல்லை என்பது அழியாது! 
அதனால் தான் 
உண்மைகள் சொல்பவர் 
இல்லாதாக்கப்படுகிறார்! 
இல்லையேல் 
உள்ளதை உள்ளபடி சொல்லாமல்
ஊமையாக்கப்படுகிறார்! 

நிற்க 
உள்ளே உடைவா? உட்கட்சி அரசியலா... 
உட்கார்ந்து பேசினால் தீர்வா.. 
உடனே பேசினால் தீர்வா 
கணித்துச் சொல்பவர் சிலர் 
உண்மையைச் சொன்னால் உள்ளே எரியும்
சில பேருக்கு
சிங்கப்பூர் மருந்தும் சில காலத்தொடர்பும் 
சேர்த்து வச்ச பணமும் பற்றிச் சொன்னாலும் 
சினம் வரும்!  

இங்கு வான்கோழிகளும் 
வீர உரை நிகழ்த்தும் வேடிக்கை உண்டு! 
ஒரிஜினலுக்கும் போலி தயாரித்து 
மூக்கு உடைபட்ட கதையும் உண்டு! 
இதைச் சொன்னாலும் 
கையும் கத்தியும் நீளும்!  

கடிக்கும் நாயை அடித்தால் அது பக்கச் சார்பு! 
கட்டியணைத்தால் பக்கச்சார்பு! 
தட்டிக் கொடுத்தால் பக்கச் சார்பு! 
தட்டிக் கேட்டாலும் பக்கச் சார்பு! 
அப்போது எது கேட்டாலும் 
நாய் கடித்ததாக நாலுபேர் தெரிவித்ததாக 
நமது செய்தியாளர் தெரிவித்தார்! 
காவற்துறை விசாரணை -  
நாய் இது பற்றி 
"கடிக்கவில்லை பல் பட்டும் படாமலும் பட்டது" என்றும்
கடிபட்டவர் வேண்டுமென்றே தான் நாய் பாய்ந்தது என்றும் 
பந்தி பந்தியாக நாலு கோணத்தால் சொன்னால் 
அதுவே நடுநிலைமையாம் ! 

சார்ந்து சார்ந்தே சொன்னதால் 
சந்தி நிலைக் கொள்கைளே 
இங்கு நடுநிலைச் சமத்துவமாகி 
நடுநிலைகள் சாய்ந்தே இருக்கின்றன.  

எல்லாம் சமமாக இருந்து 
பனங்காயும் கித்துளும் 
பகிர்ந்தே பழகப்பட்டு 
வடக்கும் தெற்கும் 
கிழக்கும் மேற்கும்
சமமானால் மட்டுமே 
நடுநிலைமை இங்கு தராசு முள்ளாகும் 
இது சத்தியம் தான்!  
சாஸ்வதம் தான்! 

அப்போது வெள்ளை என்பது 
வெள்ளைதான் 
கருமை என்றால் கறுப்புத்தான் 
ஆனால் 
அடக்குமுறைகள் அடங்கும் வரை 
இனவாதம் விதைப்பதை விடும்வரை 
காகம் சாம்பலானாலும் 
சிலநேரம் வெள்ளையானாலும் கூட 
அதுவும் நடுநிலைதான்!  

எளிதிற்கு வலிமை தர 
சூதுகவ்விய தம் வாழ்வை 
மீண்டும் வெல்லவைக்க
மீண்டும் வென்றிட 
இங்கு எம் சார்புநிலை 
தலை சார்ந்த (சாய்ந்த அல்ல)நிலை
நடுநிலை தான்! 

சர்வதேச ஊடகங்கள் நடுநிலைகாட்டும்! 
ஊடகத் தத்துவத்தை உறுதிப்படுத்தும்!  

ஆமாம்! 
இங்கிலாந்து இளவரசியின் அந்தரங்கம் 
அவை அப்படியே தரும்! 
photos ஓடு! 
Clinton லீலை அவர்களுக்கு 
மற்றொரு கிருஷ்ணலீலா! 
Monicaவே தலைப்புச் செய்தி! 
அதுதான் அங்கு தர்மம்!
நினைத்த இடத்தில் 
குண்டு போட்டு 
சமாதானம் காக்கும் Bush Hero
Iraqஇல் ஆட்சியையும் 
ஐக்கிய நாடுகள் சபை கூட்டி 
அவருடைய Afghanஇல் ஆள்பவரையும் 
toss போட்டு தெரிவு செய்வர் - அவர் ஹீரோ! 
சதாம் சர்வதேச வில்லன்!  

சுய நிர்ணயமாய் நிற்க 
தன்நாடு தன்மக்களுக்கு கேட்டு நின்றவன் 
பயங்கரவாதி! 
நான் அரபாத்தை சொல்கிறேன்! 

நவீன ஊடகத் தத்துவம் 
சர்வதேச மீடியாவுக்கு 
நாசமாய்ப் போக அந்த நடுநிலை! 

சொல்கிறேன் கேளும் 
நாம் சார்ந்த இனத்துக்கு 
நல்லது நடக்குமாயின் 
நாலு பேருக்கு நன்மை கிட்டுமாயின் 
சிலரைத் தட்டித் தருவோம் 
சிலரை வெட்டி- ஒட்டித் தருவோம் 
அதுவும் 
இங்கு ஊடகத் தத்துவம்! 

காம்புகள் கோடாரிகளாக 
புதிய இரும்பு பூண்டு 
எம் விருட்சங்களை 
விழுதுகள் பூண்ட வேர்களை 
அறுக்க முனைந்த போதுகளில் 
சார்பு தர்மங்களே சத்தியங் கூறின! 
சத்தமாக எழுந்த 
சகலவிதமான பொய்களையும்
சுக்கு நாறாக்கின! 
கீழ்த்திசை இருள்வதில்லை 
எனக் கூறின! 

காற்றிடுதல் 
எல்லைகள் கீறிடுதல் 
எம்மவர் இடம்,நிறம் மாறிய 
அனைத்தையும் 
அறிந்து,உணர்ந்து 
அறிவித்தவர் நாமே! 
மெய் கூறி மாண்டவர் 
உண்மை சொல் வழி நின்று 
நடுநிலை தாண்டவரே 
ஊடகத்து தத்துவத்தில் 
ஒன்றாக இணைந்தனர் 
இறப்போடு இணைந்தவரே! 
இல்லையேல்
பக்ஸ்இல் வரும் அறிக்கை பார்த்தெழுதி
கோலில் அன்னவர் ஆ சொல்ல ஆ.. 
இ சொல்ல ஈ -  
இன்னும் என்னென்ன சொன்னாலும்
அவையெல்லாம் எழுதி 
அப்படித்தான் சொன்னார் அவர் 
அதையே தான் எழுதினேன் 
அவ்வாறே வாசித்தோம் 
உள்ளதை நல்லபடியாக 
நாலுபேர் சந்தோசப்படச் சொன்னோம் 
என்றே சொல்வீரானால் 
அங்கு நட்ட கற்களும் 
நடேசன்,நிமலராஜன் நினைவுகளும் 
நியாயங்களும் 
நாளை நின்று பேசும் கவனம்!
!

3 comments:

இறக்குவானை நிர்ஷன் said...

//காம்புகள் கோடாரிகளாக – புதிய இரும்பு பூண்டு எம் விருட்சங்களை – விழுதுகள் பூண்ட வேர்களை அறுக்க முனைந்த போதுகளில் சார்பு தர்மங்களே சத்தியங் கூறின! சத்தமாக எழுந்த சகலவிதமான பொய்களையும் சுக்கு நாறாக்கின! கீழ்த்திசை இருள்வதில்லை எனக் கூறின! காற்றிடுதல் எல்லைகள் கீறிடுதல் எம்மவர் இடம்,நிறம் மாறி அனைத்தையும் அறிந்து,உணர்ந்து அறிவித்தவர் நாமே!//

உண்மைதான்.
நன்றாயிருக்கிறது. நிகழ்வுக்கு வரமுடியாதபடியால் உங்கள் குரலில் எப்படியிருந்திருக்கும் என கற்பனை செய்துகொண்டேன்.

Anonymous said...

''சுய நிர்ணயமாய் நிற்க
தன்நாடு தன்மக்களுக்கு கேட்டு நின்றவன்
பயங்கரவாதி!
நான் அரபாத்தை சொல்கிறேன்!''

அழகிய மொழி நடையில் ஊடகத்துறை பற்றிப் பூடகமாகச் சொல்லியிருக்கிறீர்கள். சிலேடையாகச் சில விடயங்கள் வார்த்தைகளுக்கூடாகச் சிதறி விழுந்துள்ளன. வானொலி உலகிலும் சரி எழுத்துலகிலும் சரி உங்கள் பணி தனித்துவமானது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக் காட்ட்டு.

FakeNews.lk said...

*//எல்லாத் தொழிலும்
எட்டே மணிநேரம்
ஒருமணி கூடினும் ஓவர்டைம்!//

//சுய நிர்ணயமாய் நிற்க தன்நாடு தன்மக்களுக்கு கேட்டு நின்றவன்
பயங்கரவாதி!
நான் அரபாத்தை சொல்கிறேன்!//

அருமையான வரிகள்.......

உள்ளத்திலிருந்து உரைக்கிறேன்....
பல நாற்கள் உண்டிகாணா உடலுக்கு பாயசத்துடன் பஞ்சகவ்வியம் சேர்த்து விருந்தளித்தது போல் இருந்தது உமது கவிதை

நன்றி சகோதரரே......

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner