October 08, 2008

மீள் வருகை மன்னன் ஓய்வு !


கங்குலி ஆஸ்திரேலியத் தொடருக்குப் பின் ஓய்வு.. இது தான் நேற்றும் இன்றும் ஒவ்வொரு விளையாட்டு ரசிகனினதும் பேச்சு. அவரது ஓய்வு அல்லது விலகல் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றே.
இராணி கிண்ண அணியிலிருந்து கங்குலி கழற்றி விடப்பட்ட உடனேயே கங்குலி இனி ஓரங்கட்டப் படுவார் அல்லது ஓய்வுபெறுவார் என்ற ஊகங்கள் கிளம்பின.
               
ஆனால் மீள்வருகை மனிதன்(Comeback man) என்று அழைக்கப்படும் கங்குலி,போராடி மீண்டும் உள்ளே வருவேன் என்று சூழுரைத்தார்.

ஸ்ரீக்காந்த் தலைமையிலான புதிய தேர்வுக்குழுவும் கங்குலியை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்காக குழுவில் இணைத்தனர்.இத்தனை விமர்சகர்கள் வேறு கோணத்தில் பார்த்தனர்.இந்திய அணியின் தலை சிறந்த அணித்தலைவராக விளங்கியவரை அணியை விட்டு நீக்கி,அவமானப்படுத்தி அவரது கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவராமல்,ஒன்றிரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்புக் கொடுத்து தானாக ஓய்வு பெறச் செய்வதே திட்டம் என்று கருத்துக்கள் பரவின.

கங்குலி,ஸ்ரீக்காந்த்,கும்ப்ளே என்று அனைவருமே இதை மறுத்தனர்.

Fab 5 என்று (தமிழில் பஞ்ச பாண்டவர் என்று சொல்லுவோமே) அழைக்கப்படும் ஐவருமே (சச்சின் - 35வயது,லக்ஸ்மன் - 33வயது,டிராவிட்- 35வயது,கும்ப்ளே- 38வயது) விமர்சகர்களால் இப்போது குரிவைக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்று மட்டும் நிச்சயம்.. ஆஸ்திரேலியா அணியுடன் இந்தியா டெஸ்ட் தொடரில் தோற்றால் இந்த ஐவருமே ஓய்வு பெறுவர் அல்லது நீக்கப்படுவர்.

இந்த நிலையில் தான் கங்குலி திடீரென தான் ஓய்வு பெறுவதாக பெங்களூரில் வைத்து அறிவித்துள்ளார்.ஸ்ரீக்காந்த்தும் இதற்கென்றே காத்திருந்தது போல கங்குலி பொருத்தமான முடிவையே எடுத்துள்ளார் என்று கருத்துத்தெரிவித்துள்ளார்.அத்துடன் இந்தியாவுக்குத் தலைவராகவும்,துடுப்பாட்ட வீரராகவும் அறிய சேவைகளை கங்குலி ஆற்றியுள்ளார் என்றும் கூறியுள்ள ஸ்ரீக்காந்த்,தன்னுடனும் ஹிர்வானியுடனும்(மற்றுமொருதேர்வாளர்) நீண்ட நேரம் கலந்து பேசிய பின்னரே இந்த முடிவை கங்குலி எடுத்ததாக சொல்லி இருக்கிறார்.இதிலே இன்னுமொரு விடயம் தெளிவாகிறது.கங்குலி மனதில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விளையாட விரும்புவதாகவும் பேசியுள்ளார்.எனவே மறைமுக ஒப்பந்தம் ஒன்று (இதை கிரிக்கெட் என்றும் சொல்லலாம்)போடப்பட்டுள்ளது.

கங்குலி தனது முடிவை அறிவித்த விதம் சுவாரஸ்யமானது.. ஊடகவியலாளர் சந்திப்பு நிறைவுபெறும் வேளையில்,"நண்பர்களே,இன்னொரு விஷயத்தை உங்களுக்குச் சொல்லவேண்டி இருக்கிறது.. இந்தத் தொடர் தான் எனது இறுதித் தொடர்"என்று ரொம்பவே சாவதானமாக சொன்னாராம் கங்குலி..

சுனில் கவஸ்கருக்குப் பிறகு கௌரவமான முறையில் தனது ஓய்வை அறிவித்துள்ள ஒரே இந்திய வீரர் கங்குலி தான்.
கவாஸ்கர் தனது ஓய்வு பெறும் முடிவினையும் பெங்களூரில் வைத்தே அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது(இரு தசாப்தங்களுக்கு முன்னர்) ரவி சாஸ்திரி,கபில் தேவ்,திலிப் வெங்க்சர்கார்,முஹம்மத் அசருடின்,ஜவகல் ஸ்ரீநாத் என்று பிறகு ஓய்வு பெற்ற (அல்லது ஓய்வு பெற நிர்ப்பந்திக்கப்பட்ட)அனைவருமே,தாங்க முடியா சுமைகளாக,தவிர்க்கப்பட வேண்டியவர்களாகத் தான் இறுதிக் காலகட்டத்திலே ரசிகர்களாலும்,சக வீரர்களாலும் கருதப்பட்டார்கள் என்பது முக்கியமான விடயம்.(இப்போதுள்ள பஞ்ச பாண்டவருக்கும் இதே நிலை தானா என்பது ஒவ்வொருவரும் தனித் தனியாகக் கேட்கவேண்டிய விடயம்)

 ஆனால் இவர்கள் அனைவருமே இந்தியாவுக்கும் கிரிக்கெட்டுக்கும் அளப்பெரிய சேவைகளை வழங்கி இருக்கிறார்கள் என்பது மறக்கக் கூடாத விஷயம்.
ஆனால் கங்குலியின் ஓய்வுத் தீர்மானம்,ஏனைய நான்கு மூத்த வீரர்களுக்கும் அழுத்தத்தைக் கொடுக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் சில முக்கிய கட்டங்கள்..

11.01.1992இல் ஆஸ்திரேலியா சுற்றுலாவின் போது ஒரு நாள் சர்வதேச அறிமுகம். முதல் போட்டியில் பெற்ற 3 ஓட்டங்களோடு நீக்கப்படுகிறார்.
96 ஜூன்- டெஸ்ட் அறிமுகம்.லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில்,இங்கிலாந்து அணிக்கெதிராக சதத்துடன் அமோக அறிமுகம்.அடுத்த போட்டியிலும் சதம்.கங்குலியின் வருகை..
96 Oct தனது 11வது ஒரு நாள் போட்டியில் ஆரம்பத் துடுபாட்டவீரராக சச்சினுடன் களம் இறங்கி அரைச் சதம்.சத இணைப்பாட்டம்.
(சச்சினும் கங்குலியும் ஒரு நாள் போட்டிகளில்,இணைப்பாட்டமாக 136 இன்னிங்சில் 6609 ஓட்டங்களைக் குவித்திருக்கின்றார்கள்) 
97 Aug தனது 32வது ஒரு நாள் போட்டியில் இலங்கைக்கெதிராக கன்னி சதம்.தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சதம்(147).
97 Sept டோரோண்டோவில் பாகிஸ்தானுக்கெதிராக,ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் நான்கு போட்டிகளில் சிறப்பாட்டக்காரர் விருது. 222ஓட்டங்கள் & 15விக்கெட்டுக்கள்.தொடரின் சிறப்பாட்ட வீரரும் இவரே.
97 Nov/Dec இலங்கைக்கெதிராக மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்கள்.சொந்த மண்ணில் போட்டித் தொடரின் சிறப்பாட்ட விருது.
98 Jan தாக்காவில் பாகிஸ்தானுக்கெதிராக 124 ஓட்டங்கள்.சுதந்திரக் கிண்ண இறுதிப் போட்டியில்.
98 July இலங்கையில் நிதகஸ் கிண்ண இறுதிப் போட்டியில் சச்சினுடன் 252 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவுக்கு வெற்றியைக் கொடுக்கிறார். கங்குலி109, சச்சின் 128.
99 May மீண்டும் இலங்கைக்கு மரண அடி. உலகக் கிண்ணப் போட்டியில் திராவிடுடன் இணைந்து சாதனை இணைப்பாட்டம். 318ஓட்டங்கள்.உலக சாதனை இணைப்பாட்டம்.கங்குலி 183,திராவிட் 145.
99 Sept சச்சின் காயத்தினால் ஓய்வு பெற மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக முதல் தடவையாகத் தலைவராகிறார்.
மீண்டும் அதே அணிக்கெதிரான DMC கிண்ணத் தொடரில் 2-1 என்ற வெற்றியை இந்தியா பெறுகிறது.
2000 Feb சச்சின் பதவி விலகல்.தென் ஆபிரிக்க அணிக்கெதிரான ஐந்து ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடருக்கு தலைவர் ஆகிறார்.அதிகூடிய ஓட்டங்களைக் குவித்தவர் கங்குலி.இந்தியா தொடரை வெல்கிறது.கங்குலி நிரந்தரத் தலைவராக்கப் படுகிறார்.
2001 Mar உலக டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியா அணியை கங்குலியின் இந்திய அணி இந்திய மண்ணில் தோற்கடிக்கிறது.(2-1)
2001 Nov தென் ஆபிரிக்காவில் போட்டித் தீர்ப்பாளரோடு மோதல்.அணியை கட்டுப்பாட்டோடு நடத்தவில்லை என குற்றஞ் சாட்டப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட தடை.தொடரும் தோல்வி.
2002 July இங்கிலாந்தில் NatWest கிண்ண வெற்றி.இந்தியாவுக்கு 83 உலகக் கிண்ணத்துக்குப் பின் கிடைத்த ஒரு முக்கிய ஒரு நாள் கிண்ணம்.
2003 Mar அரை இறுதியில் சதத்துடன்,உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு இந்தியாவை அழைத்துச் செல்கிறார்.
2003 Dec ஆஸ்திரேலியா சுற்றுலாவைத் தலைவராக பிரிஸ்பேன் போட்டியில் சதத்தோடு ஆரம்பித்து வைக்கிறார்.
2004 Apr பாகிஸ்தானில் வைத்து டெஸ்ட் தொடரை வென்ற முதலாவது இந்திய அணித்தலைவர் என்ற பெருமை. 15டெஸ்ட் போட்டிகளை வெற்றி பெற்றதோடு அதிக டெஸ்ட் போட்டிகளில் வென்ற இந்தியத் தலைவர் ஆகிறார்.ஒருநாள் தொடரிலும் இந்தியா வெல்கிறது.
2004 Oct சரிவு ஆரம்பம்.சொந்தமண்ணில் வைத்து ஆஸ்திரேலியா அணியிடம் முதல் டெஸ்ட் போட்டிடில் இமாலயத் தோல்வி.கங்குலி துடுப்பாட்டத்திலும் சொதப்புகிறார்.கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காயத்தோடு விலகிக் கொள்ள விமர்சனங்கள் தாறுமாறாக எழுகின்றன.ஆஸ்திரேலியா தொடரை வெல்கிறது.(2-1)
2005 Mar சரிவு தொடர்கிறது.பாகிஸ்தானுக்கு எதிராக துடுப்பாட்டத்தில் கங்குலி மிக மோசமாக ஆடுகிறார்.
(48 ஓட்டங்கள்- சராசரி 9.60)வெற்றிகர கங்குலி-ரைட் இணைப்பாட்டம் தகர்கிறது.
2005 Apr மோசம் மிக மோசமாகிறது.பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் நான்காவது போட்டியில் (அப்போது போட்டித் தொடர் 2-2 என்று சம நிலையில் இருந்தது.)பந்துவீச்சாளர்கள் பந்துவீச நீண்ட நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்று கங்குலிக்கு ஆறு போட்டிகளுக்கான தடை விதிக்கப்படுகிறது.
   இந்தியா தொடர் தோல்வி 4-2
2005 Sept ஜிம்பாப்வே சுற்றுலா.கங்குலியின் ஆமை வேக சதமும்,சப்பெல்லின் கடிதமும்,கங்குலியின் பகிரங்கப் பொங்கி வெடித்தலும் பரபரப்பாகின்றன..
தொடரை இந்தியா வெல்கிறது(ஜிம்பாப்வேயை வெல்லா விட்டால் வேறு யாரை வெல்ல முடியும்?)
கங்குலியை பதவி நீக்குமாறு உள்நாட்டில் கோரிக்கைகள் எழுகின்றன.
சாப்பெல்-கங்குலி மோதல் தற்காலிக சமரசம்.
2005 Oct பலம் வாய்ந்த அணிக்கெதிராக கிண்ணப் போட்டியில் சதம் அடித்து தான் இன்னும் 'சாகவில்லை' என்று காட்டுகிறார். 
2005 Nov ஐந்து வருடகால அணித் தலைவர் பதவியை தேர்வாளர்கள் முடிவுக்குக் கொண்டுவருகிறார்கள்.இலங்கைக்கெதிரான டெஸ்ட் தொடருக்கு டிராவிட் தலைவராக்கப் படுகிறார்.
2006 Jan,Feb,Mar பாகிஸ்தானில் நடந்த தொடரில் பெரிதாகப் பிரகாசிக்காத கங்குலி,உள் நாட்டில் இடம்பெற்ற இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கும் தெரிவாகவில்லை.
2006 Dec தென் ஆபிரிக்காவில் ஒரு நாள் தொடரில் தோற்ற இந்திய அணிக்கு பலமூட்ட டெஸ்ட் தொடருக்குத் தெரிவாகிறார்.
பயிற்சிப் போட்டியில் பெற்ற 83 ஓட்டங்கள் டெஸ்ட் அணிக்கு அவரைத் தெரிவு செய்ய வைக்கின்றன.
இந்தியா பெற்ற அரிய டெஸ்ட் வெற்றியில் கங்குலியின் பங்களிப்பு,ஒரு அரைச் சதம் மற்றும் பந்துவீச்சு.
தொடரில் அதி கூடிய ஓட்டங்கள் பெற்றவர் கங்குலி.
2007 Jan மீண்டும் ஒரு நாள் பிரவேசம் மேற்கிந்தியத் தீவுகளுக்கேதிராக ஓட்டங்கள்.
2007 May வங்கதேசத்துக்கேதிராக சிட்டகொங் மைதானத்தில் டெஸ்ட் சதம்.
2007 July இங்கிலாந்தில் வைத்து இந்தியாவின் சரித்திர பூர்வ டெஸ்ட் தொடர் வெற்றி..
 தொடரில் கங்குலி குவித்த ஓட்டங்கள் 249.இரு அணிகளிலுமே தன் இடத்தைக் கைப்பற்றுகிறார்.
2007 Nov தன் சொந்த மண் கொல்கட்டாவின் Eden Gardens மைதானத்தில் முதலாவது டெஸ்ட் சதம்.அடுத்த டெஸ்ட் போட்டியில் பெங்களூரில் வைத்து இரட்டை சதம்.பாகிஸ்தானுக்கெதிரான அந்த டெஸ்ட் தொடர் கங்குலியை மீண்டும் உச்சத்தில் ஏற்றுகிறது. 3 டெஸ்ட் போட்டிகளில் 89 என்ற சராசரியுடன் 534ஓட்டங்கள்.போட்டித் தொடரின் சிறப்பாட்டக்காரரும் கங்குலியே தான்.
2007 Jan ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சாதாரண சராசரியுடன்  இரண்டே இரண்டு இரட்டை சதங்களை மட்டுமே பெற்ற கங்குலி முக்கோண ஒருநாள் தொடர் அணியிலிருந்து நீக்கப்படுகிறார்.
2008 Apr தென் ஆபிரிக்காவுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரை சமப்படுத்த கான்பூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் கங்குலி பெற்ற 87 ஓட்டங்கள் உதவுகிறது.
                              
கங்குலியின் சில முக்கிய சாதனைகள்..

இந்தியாவின் தலைசிறந்த இடது கை துடுப்பாட்ட வீரர்.
அதிக டெஸ்ட் போட்டிகளில் தலைமை தாங்கிய இந்திய அணித் தலைவர்.(49) 
அதிக டெஸ்ட் வெற்றிகள் (21)
ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 10000ஓட்டங்களையும்,100விக்கெட்டுகளையும்,100பிடிகளையும் எடுத்த மூன்று வீரர்களில் ஒருவர்.(சச்சின் டெண்டுல்கர்,சனத் ஜெயசூரிய ஆகியோரே ஏனையோர்)மீள்வருகையின் பின் கங்குலி குவித்த ஓட்டங்கள் 1571  சராசரி 50.67 
இன்னும் டெஸ்ட் போட்டிகளில் ஓட்டங்களைப் பூர்த்தி செய்ய அவருக்கு ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.
 எனினும் இலங்கையில் இறுதியாக ஆறு இன்னிங்சில் கங்குலி பெற்றது ஓட்டங்கள் மட்டுமே.

கௌரவமாக உச்சத்தில் இருக்கும்போதே விலக முடிவெடுத்திருக்கும் கங்குலிக்கு வாழ்த்துக்களைத் தெரிவிப்போம்.. (எனக்கு தனிப்பட்ட முறையில் எப்போதுமே கங்குலியைப் பிடிக்காது.. ஆனாலும் அவரது தன்னம்பிக்கை,போராட்ட குணம் ஆகியவற்றில் மதிப்பு உண்டு)

அவரது இறுதித் தொடரில் நீக்கப் படாமல் விளையாடுவாரா எனக் காத்திருந்து பார்ப்போம்.

கங்குலி தொடங்கி வைத்துள்ளார்.. அடுத்து யார்?

ஆதாரங்கள் - cricinfo

5 comments:

Raja said...

அருமையான பதிவு. டைட்டில் "மீள் வருகை மன்னன்" பொருத்தமான ஒன்று.

Anonymous said...

நல்ல பதிவு. சில இடங்களில் ஓட்டங்களென மட்டுமே உள்ளது அந்த இலக்கங்களை காணவில்லை. சரி போகட்டும்.

கங்குலி கொல்கத்தா இளவரசன். எனக்கும் கங்குலியை கண்ணிலே காட்டக்கூடாது. காரணம் அவரது அருவருக்கத்தக்க போராட்ட குணம். அவர் போட்ட ஆட்டங்கள். குதிப்புகள். விட்ட அறிக்கைகள். இவற்றிற்காகத்தான் அவர் சொதப்பிய வேளைகளில் அவ்வளவு 'கொமண்ட்ஸ்' ஜோக்காக வந்தது. Maggi நூடிலஸ் கங்குலி நூடில்ஸ் என்ற் அழைக்கப்பட்டதும் உண்டு. உங்கள் "....ராகங்களில்" கங்குலியை இழுத்து ஒரு பகிடி விடாவிட்டால் உங்களுக்கு கண்ணுறங்காதே! ஆனால் மிகச்சிறந்த வீரர். சதம் அடித்த உடன் எல்லாப் பந்தையும் ஆறாகவும் நான்காகவும் மாற்றும் வல்லமை படைத்தவர். டெண்டுல்காரை இவர் வேண்டும் என்றே பல இடங்களில் ஓரம் கட்டியதாக நான் உணர்கிறேன். ஏன் 'ரன்-அவுட்' கூட ஆக்கியிருக்கிறார். கொஞ்சம் சுயநலம் கொண்ட வீரர். ஓய்வு காலத்தில் தன்னும் அமைதியாக இருக்கட்டம்.

ARV Loshan said...

நன்றி விசாகன்,நன்றி ராஜா

தவறுகள் இப்போது திருத்தப்பட்டுவிட்டன.

ம்ம்ம்ம் என் பார்வையிலும் இவர் ஒரு சுயநலவாதியாகவே பல இடங்களில் தெரிகிறார்.

யோ வொய்ஸ் (யோகா) said...

எனக்கும் கங்குலி ஒரு சுயநலவாதியாக தெரிந்தாலும் சச்சினை விட ஒரு சிறந்த Match Winner என்பதை மறுக்க முடியாதது, போராட்ட குணம் மிக்க ஒரு வீரரை இந்தியா இழந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும், சச்சின் டிராவிட் உடன் ஒப்பிடும் போது கங்குலி மிக சிறந்த வீரர் என்பது எனது கருத்து, ஆனாலும் எனக்கு தனிப்பட்ட முறையில் கங்குலியை பிடிக்காது

ஹரன்பிரசன்னா said...
This comment has been removed by the author.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner