October 15, 2008

கலைஞரின் அறிவிப்பு - நன்றிகள்,சில சந்தேகங்கள்,சில கேள்விகள்


நேற்று கலைஞர் கருணாநிதி கூட்டிய சர்வகட்சிக் கூட்டமும் அதன் பின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பும் தான் நேற்று மாலையிலிருந்து பரபரப்பு விடயங்கள்.நீண்ட காலமாகவே இலங்கைத் தமிழர்கள் தமிழகப் பக்கமிருந்து ஆக்கபூர்வமான,பாரிய தாக்கத்தை உருவாக்கக் கூடிய நடவடிக்கை ஒன்றினை எதிர்பார்த்தவண்ணம் இருந்தனர். 

நெடுமாறன் ஐயா உள்ளிட்ட ஏராளமானோர் மிக நீண்டகாலமாகவே இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தவண்ணம் இருந்துள்ளனர்.ராஜிவ் காந்தி கொலைக்குப் பின்னர் தமிழகத்தில் புலிகள் எதிர்ப்பு வலுவடைந்து,அது பின்னர் ஈழத் தமிழர் மீதான எதிர்ப்பாக மாறியபின்னரும் தொடர்ச்சியாக ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த பலர் இருக்கின்றனர்.(அவர்கள் இதனால் பல அவதிகளில் மாட்டியதும் உண்டு)

இதிலே இருக்கின்ற பெரிய சிக்கல் நிலை என்னவென்றால்,பலபேரும் விடுதலைப் புலிகள் ஆதரவையும்,ஈழத் தமிழ் மக்கள் மீதான அக்கறையையும் வேறுபடுத்தத் தெரியாமல் நிறையப் பேர் குழம்புவது தான்.

விடுதலைப் புலிகள் தான் ஈழத் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள். இது அனேகமாக உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து.சரி,இதில் உடன்பாடு இல்லாதோரும் இருக்கலாம்.இல்லாவிட்டால் விடுதலைப்புலிகளைப் பிடிக்காதொரும் இருக்கலாம்.அப்படியானவர்கள் ஈழத் தமிழருக்காகவாவது குரல் எழுப்பி இருக்கலாம் என்றே நானும்,என் போன்ற பலரும் கருதி வந்திருந்தோம்.காரணம் யார் குரல் எழுப்பினாலும் சிற்சில மட்டங்களில் இருந்து குரல் வரும்போது அவை கூரிய கவனம் பெறும்.

அண்மையில் கலைஞர் மீது காட்டமாக ஏராளமானோர் (அடியேனும் தான்) பாய்ந்ததற்கான காரணம் இது தான்.கலைஞர் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டது போல,அரை நூற்றாண்டு காலமாக இலங்கைத் தமிழருக்காகக் குரல் எழுப்பிவந்த அவர் சில காலமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் மௌனம் சாதித்து வந்தார்.

எனினும் திடீரெனக் கிளர்ந்து எழுந்த கலைஞர் அடுத்தடுத்து எடுத்துவரும் அதிரடி நடவடிக்கைகள் இலங்கைத் தமிழருக்குக் கொஞ்சமாவாது நம்பிக்கை தருவனவாக அமைந்து இருக்கின்றன.
தந்தி விவகாரத்துக்குப் பரவலாக கிண்டல்கள்,நக்கல்கள் எழுந்திருந்தன.காரணம் கலைஞரால் அதை விடக் காத்திரமாக பல விடயம் செய்யமுடியும் என்று எல்லோருக்குமே தெரியும்.

ஆனால் அதன் பின் கலைஞர் எடுத்த இந்த நடவடிக்கைகள் உண்மையில் ஆச்சரியத்தையும்,கொஞ்சம் மகிழ்ச்சியையும் அளித்திருக்கின்றன. துணிந்து காரியத்தில் அதிரடியாக இறங்கிய கலைஞருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.. காரணம் இவரது குரலும்,ஆதரவும் இந்தக் காலகட்டத்தில் கட்டாயம் எமக்குத் தேவையான ஒன்று!(தமிழகத்திலும் திமுக ஆட்சி,இந்தியாவின் மத்தியிலும் கிட்டத்தட்ட திமுகவின் ஆட்சி.)
இந்த வரிகள் எந்தவிதத்திலும் கலைஞரை முந்தைய என் பதிவுகளில் சாடியதற்கு சமாளிக்க அல்ல.நான் நக்கீரன்(பத்திரிக்கை அல்ல) பரம்பரை. நல்லது செய்தால் நன்றி சொல்வேன்;இல்லையென்றால் சாடுவேன்.
நேற்றைய மாநாட்டில் கலைஞரின் அரசியல் எதிரிகள் கலந்து கொள்ளாதது எம்மைப் பொறுத்தவரையில் ஏமாற்றமே..
 
எங்கே இதை மீண்டும் தமிழக அரசியல் புயலில் சிக்க வைத்து விடுவார்களோ என்று சந்தேகமும் எழுந்தது.ஆனால் அனைத்துக் கட்சி மாநாட்டுக்குக்ப் பின் கலைஞர் அளித்த ஊடக செவ்வியில் எந்த விதத்திலும் எதிராளிகளைத் தாக்காமல்,நாகரிகமாகக் கலைஞர் பேசியது மிகவும் வரவேற்கத் தக்கது.
 
"அவர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரானவர்கள் அல்லர்;எனக்கு அரசியல் ரீதியில் எதிரானவர்கள்"

"அவர்கள் இலங்கை பிரச்சினையிலே பின்னடைவு கொண்டு வரவில்லை என்று கருதத் தேவையில்லை.
என்னுடைய பிரச்சினையிலே அவர்களுக்குள்ள அதிருப்தியின் காரணமாகத் தான் வரவில்லையே தவிர, இலங்கையிலே தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும், அவர்களை சிங்கள வெறியர்களுக்கு களப்பலியாக ஆக்கக் கூடாது, அவர்கள் சிங்கள ராணுவத்திற்கு பலியாகி மாண்டு மடியக் கூடாது என்பதில் எல்லோரையும் போலவே ஒத்தக் கருத்து உடையவர்கள் தான் என்றாலுங்கூட, இன்று வராத காரணத்தால் அவர்களுக்கு உடன்பாடு இல்லை என்று சிங்கள வெறியர்கள் நினைத்து விடக் கூடாது.

இந்த கூட்டத்தின் மூலமாக எடுத்துச் சொல்லப்பட்ட அந்த மறுப்புக் கருத்துகள் அவர்கள் காதுகளிலே விழுமேயானால்- இது சிங்கள வெறியர்களுக்கு ஒரு ஊக்கமாக, ஆக்கமாக அமைந்து விடக் கூடாது. அமைய விடவும் மாட்டோம்.

யார் நம்மிடமிருந்து விலகிச் சென்றாலுங் கூட இந்த பிரச்சினையிலே அவர்களையெல்லாம் அழைத்து வைத்து, இழுத்து வைத்து ஓரணியிலே நாம் திரண்டு மத்திய அரசை வலியுறுத்தி நம்முடைய தமிழ் மக்களை இலங்கையிலே காப்பாற்றுகின்ற அந்த முயற்சியிலே வெற்றியடைவோம் என்பதை மாத்திரம் தெரிவித்துக் கொள்கிறேன்."
- கலைஞர்

மூன்று முக்கிய அம்சங்கள் இந்தக் கூட்டத்தின் தீர்மானத்தில் முழு வடிவம் பெற்றுள்ளன:

1. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம். தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கைப் படைகள் வாபசாக வேண்டும். பாதுகாப்பு வேண்டி வெளியேறிய தமிழர்கள் மீண்டும் அங்கே குடியேற வழிவகைகள் செய்யப்பட வேண்டும்.

2. உடமைகளை இழந்துள்ள தமிழர்களுக்கு வெளிநாட்டு உதவிகள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பொது சேவை அமைப்புகள் மூலம் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

3. இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதை இந்தியா உடனடியாக நிறுத்த வேண்டும்.

இரண்டு வாரங்களில் இந்த நடவடிக்கைகளை எடுக்குமாறுஇந்திய அரசு இலங்கை அரசைப் பணிக்காவிட்டால், தமிழகத்தை சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகுவர் என்று மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர்களுடன் சேர்ந்தே அறிக்கைவிட்டிருப்பதானது இந்த நடவடிக்கையின் தீவிரத்தைக் காட்டுகிறது.
  
நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றவர்கள்:

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எம்.எல்.ஏ. சுதர்சனம்
 பாமக தலைவர் ஜி.கே.மணி
 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன், பி.சம்பத் 
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், ஆர். நல்லகண்ணு 
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கலி பூங்குன்றன்
விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், எம்எல்ஏ ரவிகுமார், 
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன்
திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
 லட்சிய திமுக சார்பில் விஜய டி.ராஜேந்தர்
ஜனநாயக முன்னேற்ற கழக நிறுவனர் ஜெகத்ரட்சகன்
தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், சையத் சத்தார்
போட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன்,செஞ்சி ராமச்சந்திரன்
தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தலைவர் ஜவாஹிருல்லா
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், வி.ராஜ்குமார்
இந்திய சமூக நீதி இயக்கம் தலைவர் பேராயர் எஸ்றா சற்குணம் 
புரட்சி பாரதம் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி
அகில இந்திய பார்வர்டு பிளாக் பொதுச்செயலாளர் பி.வி.கதிரவன்
உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் கு.செல்லமுத்து
புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி
தமிழ் மாநில தேசிய லீக் பொதுச் செயலாளர் திருப்பூர் அல்தாப்
தமிழ்நாடு விவசாயிகள் கட்சி பொதுச் செயலாளர் கே.ஆர்.கிருஷ்ணன் 


இன்று பல்வேறு இணையத் தளங்களிலும்,வலைப்பூக்களிலும் காணப்பட்ட இன்னுமொரு செய்தி இந்திய மாணவர்களும் கல்விப் பகிஷ்கரிப்பில் இறங்குவதாக.. 

எதிர்வரும் 19ஆம் திகதி தமிழ்த் திரையுலகம் தனது பங்குக்கு ஈழத் தமிழர் ஆதரவைக் காட்ட போராட்டம் ஒன்றுக்கு ஏற்ப்பாடு செய்துள்ளது.உலக வாழ் இலங்கைத் தமிழர்களையும் நம்பி இருக்கும் தமிழ்த் திரையுலகத்தின் கடப்பாடு இது.(உங்களைக் கடவுள் போலக் கொண்டாடும் மக்கள் இலங்கையிலும்,புலம் பெயர் நாடுகளிலும் உண்டு.. கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்ததனாலேயே 'தலைவர்' என்று விஜயகாந்தைச் சொல்லும் மக்களும் உண்டு) 

"தமிழ் சினிமாவை வாழவைக்க ஈழத் தமிழன் கஷ்டப்பட்டு பணம் தருகிறான். அவனது தயர் துடைக்க குரல் கொடுக்க ராமேஸ்வரம் வரைக்கும் நடிகர்-நடிகைகளால் வர முடியாதா?" என உணர்ச்சிவசப்பட்டுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

இப்போது வைகோவும் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் இரு வாரகாலக் கெடுவில் பதவி விலகத் தயார் என்றும் அறிவித்திருக்கிறார்.

இன்னுமொரு தகவலின் படி,கலைஞரின் புதல்வி கனிமொழி இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தி திமுக ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
             
(கனிமொழியின் இந்தப் பதவி விலகல்,தமிழக அரசியல் வட்டாரங்களில் ஏற்கெனவே எதிர்பார்க்கப் பட்டதேனக் கூறப்படுகிறது.குடும்ப,கட்சி உட்பிரச்சினைகளை சமாளிக்கவும் இது உதவும் போல் தெரிகிறது)

ஈழத்தமிழர் பிரச்சினைடில் தமிழகக் கட்சிகள் ஒன்றுபடுவது உண்மையில் சர்வதேச மட்டத்தில் ஒரு மாபெரும் அழுத்தத்தை இலங்கை அரசுக்கு வழங்கும் என்பது நிச்சயம். 
எனினும் இங்கு சில முக்கிய விடயங்களும்,சந்தேகங்களும் இருக்கின்றன.. 

நேரடியாக இந்தியா இந்தப் பிரச்சினையில் தலையிடுமா?

இது வரைக்கும் மகிந்த அரசுடன் நட்புணர்வு பாராட்டிவரும் இந்தியா கண்டித்து அல்லது கட்டாயப்படுத்தி யுத்தத்தை நிறுத்தச் சொல்லுமா?

இந்த செயற்பாடுகள் இதயசுத்தியோடு இருக்குமா?

ஆயுதங்கள்,ராடார்கள் கொடுப்பதை உண்மையாக இந்தியா நிறுத்துமா?

மூன்று லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளார்கள்.  
பருவபெயர்ச்சி மழையும் ஆரம்பமாகிவிட்டது.இந்நிலையில் என்னவிதமான உதவிகளை இந்திய மத்திய அரசு உடனடியாக மக்களுக்கு வழங்கும்? 

யுத்த நிறுத்தம் என்று மறுபடி பேச்சு வார்த்தைக்கு வருமாறு இந்தியா புலிகளுக்கு அழுத்துமா?புலிகள் ஏற்றுக் கொள்வாரா?
முதலில் யுத்தத்தில் வெற்றி என்று பிரசாரம் செய்துவரும் மஹிந்த இதை ஏற்றுக் கொள்வாரா?(இப்போதும் இந்திய விரோதப் போக்கு ஒன்று கடும்போக்கு சிங்களவர் மத்தியில் நிலவி வருகிறது) 

ஈழத் தமிழர் மீதான இந்த ஈடுபாடும்,அனுதாபமும் உண்மையில் தேர்தலைக் குறிவைத்ததல்லவே?

புலிகள் மீதான இந்திய அரசுக்கும்,காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கும் (மறைமுக)கசப்பு,சந்தேகம் இந்தப் பிரச்சினையில் தீர்வு விடயத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதே?

ராஜீவ்-ஜெயவர்தன ஒப்பந்தம் போல அல்லது அதே ஒப்பந்தம் திணிக்கப்பட மாட்டாதா?

பிரச்சினையில் நேரடியாக சம்பந்தப் பட்டுள்ள ஈழத் தமிழ் மக்களின் கருத்துக்கள் இந்தியாவினால் கருத்தில் எடுத்துக்கொள்ளப்படுமா?

புலிகளின் தடை எதிர்காலத்தில் நீக்கப்படுமா?

ஜனநாயக நீரோட்டத்தில் கலக்கிறோம் என்ற போர்வையில் இலங்கை அரசின் கரத்தைப் பலப்படுத்தி,மாகாண,நாடாளுமன்ற,அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள இலங்கையின் முன்னாள் போராளிக் குழுவினரை இந்திய மத்திய அரசு(குறிப்பாக RAW)எப்படி நோக்குகிறது?

இலங்கைத் தமிழருக்கு குறைந்தபட்சம் கூடிய அதிகாரங்களோடு சுயாட்சி அலகாவது கிடைப்பதை இந்தியா விரும்புமா?(தமிழ்நாடுக்குப் பக்கத்திலேயே தனித் தமிழ் ஈழம் உருவாவதை இந்தியா தனது நலன்களுக்குப் பாதகமானது என்று நினைப்பது எல்லோருக்குமே தெரியும்.எதிர்காலப் பிரிவினைக்கு இது வழி வகுக்கும் என்பது இந்திய அரசின் எண்ணம்)


இது எனக்கிருக்கும் சந்தேகங்கள் தான்.. எல்லாம் அப்பாவி இலங்கைத் தமிழருக்கு நல்லபடி நடந்தால் எனக்கும் சந்தோசம் தான்.. நிச்சயமாக கலைஞர்,திமுக ,இந்திய மத்திய அரசு என்று இந்த சுமுகத் தீர்வுக்கு(கிடைத்தால்) வழிவகுத்த எல்லோருக்கும் கோடானுகோடி நன்றிகள்..

(இரண்டு வாரங்கள் நானும் காத்திருப்பேன்.. அடுத்த பதிவு இது பற்றி வரும்! எச்சரிக்கை அல்ல வழமை போல் புலம்பல் தான்.. )


 




16 comments:

Unknown said...

Good Post!

இறக்குவானை நிர்ஷன் said...

லோஷன் அண்ணா,
(இந்த "அண்ணா" என்ற வார்த்தை சில விடயங்களை வெளிப்படையாக சொல்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது. தவிர்க்கலாமா?)

நம்மவர்களுக்கான தமிழ்நாட்டு உறவுகளின் ஒட்டுமொத்த எழுச்சியும் போராட்டமும் வரவேற்கத்தக்கது. ஆனால் இந்த விடயம் இந்திய மத்திய அரசின் போக்கினை முழுமையாக மாற்றிவிடும் எனச்சொல்லிவிட முடியாது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல இலங்கையில் தனித் தமிழ் மண் உருவாவதை இந்திய அரசாங்கம் விரும்பாததைப் போன்றே இந்தியாவில் தமிழர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசை ஆட்டங்காணவைக்கும் நிலையொன்றை தோற்றுவிக்கவும் இந்தியா விரும்புவதில்லை.

என்னைப் பொருத்தவரையில்,

இறுதியாக இந்தியப் பிரதமரிடமிருந்து ஓர் அறிக்கை வரும். இலங்கை ஜனாதிபதி அல்லது பாதுகாப்பு அமைச்சு செயலருடன் தொலைபேசியில் பேசியதாகவும் இதற்குத் தீர்வு காண அவர்கள் ஒத்துக்கொண்டதாகவும் கண்துடைப்பு செய்யப்படும்.

என்ன சொல்கிறீர்கள்?
நிகழ் அரசாங்கத்தின் அடுத்த ஆண்டுக்கான யுத்த நிதி ஒதுக்கீடே இதற்கு நல்ல எடுத்துக்காட்டு.


//துணிந்து காரியத்தில் அதிரடியாக இறங்கிய கலைஞருக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்.. //

எனது நன்றிகளும்.

தமிழகத் தலைவர்களினதும் ஏனைய ஆர்வலர்களினதும் தற்போதைய இணைவு அல்லலுறும் எம்மவர்களுக்கு சாதகமான தீர்வினை தரவேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பு. இருவாரங்கள் தானே காத்திருப்போம்.

//இப்போதும் இந்திய விரோதப் போக்கு ஒன்று கடும்போக்கு சிங்களவர் மத்தியில் நிலவி வருகிறது//

இதற்கு மற்றுமொரு காரணமும் உண்டு. இடதுசாரி கொள்கை எனப் பெயருக்காக சொல்லிக்கொள்ளும் பேரினவாதக் கட்சிகள் தமது அரசியல் நிலைப்புக்காக இந்தியாவைத்தவிர்ந்த ஏனைய ஆசிய நாடுகளிடம் தங்கியுள்ளமையும் காரணமாகும்.

//இந்திய மத்திய அரசு(குறிப்பாக RAW)எப்படி நோக்குகிறது?
//
என்னதான் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்திருந்தாலும் RAW வின் சந்தேகப்பார்வையில் மாற்றமிருக்காது என நினைக்கிறேன்.

(இன்னும் சொல்லலாம். பின்னூட்டம் நீண்டுவிட்டது போல. லோஷன் அண்ணா, இவை எனது தனிப்பட்ட கருத்துக்களே)

Anonymous said...

நல்லாக் கேட்டீங்க லோஷன்.எங்க மீனவர்கள் சாவதைப் பற்றியே இப்ப தான் கேக்கிறாரு..இவர் என்னத்தக் கேட்டு அவரு(மன்மோகன்)என்ன செய்யப் போறாரு?
பேசாம நீங்க புஷ் கிட்ட கேட்டா அவரு ஏதாவது செய்வாரு..
போக முதல்ல.

மருது

TAMIZHAN said...

Mgr's concubine and her associates would be having a heart-burn today.She is the one threw the Tamil lovers in jail under Pota. Vaicko is the only great leader, when getting out of DMK was followed by the elect and was respected. Unfortunately, he does not have any 'SAY" in MGR's concubine's decision. He is only a bi-stander. She is not a Tamilian and she does not care about Tamilians, except Sasikala, of course. Navalar is forgotten completely. He was one of the Five pilllars of DMK, when he followed MGR's concubine. HE WAS IGNORED, WHILE ALIVE AND HE IS BEING IGNORED EVEN AFTER HIS DEATH.The same kind of treatment is levelled against Vaiko now who is hanging on with Annie-turned Amma!!!. It is time for Vaicko to get out of her grips. Now she has got a new friend "CHO", who will save her wealth and her girl friend SASIKALA.

kuma36 said...

லோஷன் அண்ணா இந்த கட்டுரைய விமர்சிக்கும் அளவிற்கு இன்னும் வளர்ந்து விடவில்லை (அதுவும் உங்களை) உங்கள் கருத்துக்களிருந்து கற்றுக்கொண்டேன்.நன்றி
உஙகளை பின் தொடருவேன்...

Anonymous said...

Lets pray for a peaceful solution for th Tamils in Sri lanka.
Good review sir!

Suresh(Singapore)

Anonymous said...

புதிய முயற்சிகள் பலனளிக்கட்டும்!
தன்னடக்கத்துடன் கருமமே கண்ணாகி
செய்திருக்கும் செயலுக்கு அனைத்துத் தமிழர்களும் நன்றியும்,பாராட்டுக்களும் தெரிவித்துக் கொள்வோம்.

மோகன் காந்தி

Anonymous said...

ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும் பெரும் பான்மையான மக்கள் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்பது உண்மையல்ல!அனுதாபம் அனைவருக்கும் உண்டு. அரசியல்வாதிகள் ஓட்டுக்காக விளம்பரம் படுத்துகிறார்கள் வேறு சிலர் காசு சம்பாதிக்கிறார்கள்.

தமிழ்பிரியன்-மயிலாடுதுறை

Unknown said...

ஈழத்தவனை ஊறுகாய் போல தொட்டுச் சுவையேற்றிக் கொள்கின்றனர் எல்லோரும்.
சாப்பாடு முடிந்ததும் தள்ளி வைத்து விடுகின்றனர் - கவிஞர் புதுவை இரத்தினதுரை

இந்தக் கவிதை தான் ஞாபகம் வருகிறது.
இரண்டு வாரங்களுக்குப் பிறகு வர இருக்கும் உங்கள் பதிவுக்காகக் காத்திருக்கிறேன்.

ப்ரியா பக்கங்கள் said...

உங்கள் பதிவுகளை பார்த்தேன்.
"மத்திய மற்றும் தென்னிந்திய அரசியல் நாடகங்கள்" பற்றி நன்கு அறிந்து கொண்டேன்.

இருந்து பார்ப்போம்.. என்ன தான் நடக்க போகுது என்று
நண்பரே உங்கள் அரசியல் ஞானம் நல்லாகவே உள்ளது .
எதிர்கால அரசியல் வாதி.......

ARV Loshan said...

நன்றி Xavier, நிர்ஷன்,மருது,TAMIZHAN ,இராகலை - கலை,Suresh,மோகன் காந்தி,தமிழ்பிரியன்,shobha & பிரியன்

//(இந்த "அண்ணா" என்ற வார்த்தை சில விடயங்களை வெளிப்படையாக சொல்வதிலிருந்து என்னைத் தடுக்கிறது. தவிர்க்கலாமா?)

தாராளமாக.. இந்த அண்ணா,கண்ணா மரியாதை எல்லாம் தேவையில்லை.. திட்டலாம்,இல்லை குட்டலாம்.. பிடித்திருந்தால் முதுகிலே தட்டலாம்.. (மெதுவா)

நிர்ஷன், நீங்க சொன்ன மாதிரியே மன்மோகன் சொல்லி இருக்கிறார்.இரண்டு வாரத்துக்குள் இன்னும் என்ன நடக்கிறது பார்ப்போம்.

ARV Loshan said...

thanx Thamizhan,
you have a very good knowledge in TN politics and also u know well about Madam J.
I enjoyed reading ur comments,specially the word CONCUBINE..

tc

Anonymous said...

நல்ல பதிவு..
மறுமுறை ஒருதரம் படித்துவிட்டு வருகின்றேன்..

ARV Loshan said...

பிரியன் ஆனால் இதெல்லாம் ரொம்ப ஓவரு ஆம்மா.. அப்புறம் அழுதிருவேன்.

ARV Loshan said...

தூயா, நன்றி.. என்ன ஆச்சர்யம் இப்போது தான் உங்கள் பதிவை வாசித்துக் கொண்டிருந்தேன்.."இப்ப நிம்மதியா....."

ஆனால் அந்தப் பக்கம் இடியா நடுவே இல்லாமல் பொய் வேறொரு பக்கத்துக்குப் போகிறதே? எனக்கு மட்டும் தான் அப்படியா?

Anonymous said...

புரியலை?!!! எது?

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner