November 03, 2008

18 ஆண்டு காலப் பயணத்தின் பின்..

நேற்று அவுஸ்திரேலிய இந்திய அணிக்களுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இறுதிநாள் ஆட்டப் பொழுதில் கும்ப்ளேயின் ஒய்வுபெறும் முடிவு வெளியானது. அந்த அறிவிப்பு வெளியானபோது தொலைக்காட்சி திரையில் அணில் கும்ப்ளே சிரித்த முகத்துடன் உற்சாகமாக சக வீரர்களுடன் பேசிக் கொண்டிருந்த காட்சி தெரிந்தது.
யாருக்குமே ஆச்சரியம் தராத அறிவிப்பு இது!

இதற்கு பல காரணங்கள்
கும்ப்ளே கடைசி 9 டெஸ்ட் போட்டிகளில் கைப்பற்றியது வெறுமனே 19 விக்கட்டுகள் அதுவும் அவுஸ்திரேலியாவுடன் கும்ப்ளே விளையாடிய 2 போட்டிகளில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே..

கும்ப்ளேயின் பாணியிலேயே லெக் ஸ்பின் வீசக்கூடிய மிஷ்ராவின் சிறப்பான பந்துவீச்சு
அடிக்கடி கும்ப்ளேக்கு ஏற்பட்டு வரும் உபாதைகள் ஒருநாள் போட்டிகளில் தோனியின் தலைமையில் இந்தியா கண்டுவரும் வெற்றிகளும் தோனியின் தலைமைத்துவம் நோக்கிய துரித வளர்ச்சியும் கொடுத்துள்ள அழுத்தம்.

கும்ப்ளே விளையாடாத இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிஷ்ராவின் சிறப்பான பந்து வீச்சும் தோனியின் தலைமையிலான இந்தியாவின் சாதனை வெற்றியும் அதனைத் தொடர்ந்து இந்திய ஊடகங்கள் கும்ப்ளேயின் மீது திணித்த ஒய்வு பற்றிய அழுத்தமும்.

ஆனாலும் கும்பிலே விலகுகிறார் என்றவுடன் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகருக்குமே (அவர் இந்திய ரசிகராக இல்லாவிட்டாலும் கூட) மனத்தில் ஒரு சொல்ல முடியாத சோகம் கப்பியிருக்கும்.

தனது 19 வயதில் இந்த நெடும் பயணத்தை ஆரம்பித்த பொறியியல் கற்கும் கண்ணாடி அணிந்த பையன் தான் இப்போது பலரது மனத்தையும் தான் அர்ப்பணிப்புடன் கூடிய விளையாட்டினால் வென்றெடுத்து விடை பெறும் அணில் கும்ப்ளே.
93 இல் இங்கிலாந்து அணியை மண் கவ்வச் செய்த மகிழ்ச்சியோடு ராஜூ,சௌகாணுடன்


அனில் கும்ப்ளே இந்தியாவின் தலைசிறந்த பந்துவீச்சாளர்

டெஸ்ட் போட்டிகளில் கூடிய விக்கெட்டுக்களை வீழ்த்தியோரில் மூன்றாமிடத்திலுள்ளார் (619 விக்கட்டுக்கள்)

93ஆம் ஆண்டிலிருந்து தனியொரு நபராக இந்தியாவுக்காக அதிக வெற்றிகளைப் பெற்றுத் தந்த அபூர்வ match winner.

மிக நீண்டகாலம் எதிரணிகளின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வந்த ஒரே இந்தியப் பந்துவீச்சாளர்.
(கபில் தேவுக்குப் பிறகு ஸ்ரீநாத்,பிரசாத்,மனீந்தர் சிங் என்று மற்ற எல்லோரும் சொற்ப காலமே அச்சுறுத்தியவர்கள்.ஹர்பஜன் இப்போதுதான் உலகத்தரமான பந்துவீச்சாளராகத் தனித்து மிரத் தொடங்கியுள்ளார். கும்ப்ளே இல்லாத நேரங்களிலேயே ஹர்பஜன் சிங்கின் தனித்துவம் அதிகமாக வெளிப்பட்டிருக்கிறது.)
ஒருநாள் போட்டிகளில் ஓட்டங்களைக் கட்டுப்படுத்துவதிலாகட்டும் டெஸ்ட் போட்டிகளில முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்துவதிலாகட்டும் கும்ப்ளேக்கு நிகர் அவரே.

இலேசில் எதிரணி வீரர்களுடன் கோபப்பட்டதோ முரண்பட்டதோ வாக்குவாதத்தில் ஈடுபட்டதோ அல்லது வேறெந்த சர்ச்சைகளில் அகப்பட்டதோ கிடையாது.இது வரை தனது 18 வருட காலத்தில் ஒரு தடவை தானும் தண்டனைகளுக்கோ,விசாரணைகளுக்கோ உட்படாத ஒரு அபூர்வமான நல்ல மனிதர்.

டெஸ்ட் கிரிக்கட் போட்டியொன்றில் ஒரே இனிங்சில் எதிரணியின் பத்து விக்கெட்டுக்களையும் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளர் (இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் தான் முதலாமவர்)

கும்ப்ளே பத்து விக்கட்டுக்களை நேற்றுத் தனது ஒய்வை அறிவித்த அதே டெல்லி Ferosz shah Kotla மைதானத்திலேயே பாகிஸ்தானுக்கெதிராக வீழ்த்தியிருந்தார்(10/74)

தேவையான நேரங்களில் தன் துடுப்பாட்டத் திறமை மூலமாகவும் இந்தியாவுக்கு கை கொடுத்திருக்கிறார். (உதாரணம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பெற்ற சதம்)
ஓவல் மைதானத்தில் சதம் பெற்ற மகிழ்ச்சியில்..

500 விக்கட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய பந்து வீச்சாளர்களில் சதம் அடித்த ஒரே ஒரு வீரர் கும்ப்ளே மட்டும் தான்.

காயமேற்பட்டு நேற்று கையில் கட்டுடனும் பிடியொன்றை லாவகமாகப் பிடித்த கும்ப்ளே இந்தியாவின் தலைசிறந்த களத்தடுப்பாளர்களில் ஒருவர்.

14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியுள்ளார்.. இதில் 3 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி.
(தானாக வாய் விட்டு கேட்டிருக்காவிட்டால் கும்ப்ளேக்கு அணித் தலைமைப் பதவியும் கிடைத்திருக்குமா என்பது கேள்விக் குறி தான்)
பெருமையுடன் தம் தலைவனைக் காவும் இந்திய வீரர்கள்

சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த படியாக நீண்டகாலம் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார் கும்ப்ளே
(90ஜூன் முதல்)
இப்போதிருக்கும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களில் கும்ப்ளேயை விட அதிக காலம் விளையாடிய வீரர்கள் இருவர் தான்.. சச்சின் டெண்டுல்கர், சனத் ஜயசூரிய .

கும்ப்ளேயின் முதலாவது டெஸ்ட் போட்டி சச்சினின் 9வது.

619 டெஸ்ட் விக்கட்டுகள்
337 ஒருநாள் சர்வதேச விக்கெட்டுக்கள்

18 வருடத்துக்கும் மேலான கிரிக்கெட் பயணம்
கும்ப்ளெ விளையாடிய 53 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கும்ப்ளே இந்தியாவில் இரண்டாவது அதிகூடிய டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரராவர்

எனினும் யாரையும் நோகடிக்காத மனதுடைய நல்ல மனிதர் கும்ப்ளே தனது ஓய்வை அறிவித்த விதமும் பாராட்டுதற்கு உரியது.. எந்த வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் உணர்ச்சிவசப்படாமல்,ஒதுக்கப் படாமல் விலகிச் செல்கிறார்.
தனது மனைவி,குழந்தையுடன்

எப்படியும் இந்தத் தொடரின் இறுதியில் தான் ஓய்வு பெறுவதாக முடிவெடுத்திருந்ததாக கும்பிலே சொல்லி இருக்கிறார். காயத்தோடு தான் அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தால் இந்தியாவை தான் ஏமாற்றி இருப்பேன் என்று தெரிவித்துள்ள கும்பிலே,நல்ல நிலையில் தான் அணியை விட்டு செல்வதாகவும் திருப்தி கொண்டுள்ளார்.எனினும் தான் விளையாடாமல் விட்டாலும் கூட நாக்பூர் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியினருடன் சேர்ந்திருக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.லக்ஷ்மனின் 100வது டெஸ்ட் போட்டி என்பதோடு கங்குலியின் இறுதிப்போட்டியாக நாக்பூர் டெஸ்ட் போட்டி அமையவுள்ளதே இதற்கான காரணங்கள்.

நெடுங்காலம் இந்திய அணியின் வெற்றிக்கு வழி கோலிய கும்பிலே இப்போது ஓய்வு பெறுவது இந்திய அணிக்கு இப்போது பாதிப்பை ஏற்படுத்தா விட்டாலும் கூட,எதிர்காலத்தில் இவரைப் போல ஒரு போராளி எந்த அணிக்காவது கிடைப்பாரா என்பது சந்தேகமே..

மேற்கிந்திய அணிக்கெதிராக உடைந்த தாடையொடு அண்டிகுவாவில் பந்து வீசிய கும்ப்லெயை யாரும் மறக்க முடியாது..
ஹர்பஜந் இந்திய அணிக்கு விளையாட ஆரம்பிக்காத காலகட்டத்தில் தனியொருவராக கும்ப்ளே பந்து வீசிய ஓவர்கள் எத்தனை?

அமைதியான போராளிக்கு இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டையும்,மைதானங்களையும் கௌரவித்ததற்கும்,எங்களை மகிழ்ச்சிப்படுத்தியதற்கும் நன்றி சொல்லி விடை கொடுப்போம்.

கும்ப்ளேயின் நல்ல நண்பரும் அவரது மாநிலத்தை சேர்ந்தவரான திராவிட் சொல்வது போல
கும்ப்ளே ஒரு 100 வீத கிரிக்கெட்டர் - 100% cricketer

5 comments:

kuma36 said...

//தேவையான நேரங்களில் தன் துடுப்பாட்டத் திறமை மூலமாகவும் இந்தியாவுக்கு கை கொடுத்திருக்கிறார். (உதாரணம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் போட்டியில் பெற்ற சதம்) //

இதோடு சேர்த்து டைய்டன் கப் (சச்சின் இன் முதலாவது தலைமையிலான் போட்டி) தென் ஆபிரிகாவிற்கு எதிராக இறுதி போட்டியில் ஸ்ரீநாத்துடன் இணைந்து வெற்றிக்கு காரணமாய் இருந்தது.
அவ்வளவாக நினைவில்லை சரியா லொஷன் அண்ணா?

''அமைதியான போராளிக்கு இத்தனை ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாட்டையும்,மைதானங்களையும் கௌரவித்ததற்கும்,எங்களை மகிழ்ச்சிப்படுத்தியதற்கும் நன்றி சொல்லி விடை கொடுப்போம்.''

சி தயாளன் said...

ஒரு சிறந்த வீரர். ஜெண்டில்மேன் கப்டன்..

Anonymous said...

ஹாய் லோஷன், திறமையான கும்ப்ளே தனது ஓய்வை மிக சரியான நேரத்தில் அறிவித்து, எல்லோருடைய (20T விரும்புவர் கூட) மனதிலும் நீங்க இடம் பிடித்து விட்டார். நல்ல மனிதர் நாட்டுக்காக செலவிட்ட நாட்கள் போக மீதம் இருக்கும் நாட்களை தனது இனிய குடும்பதிற்கு செலவழிக்கட்டும்.

வந்தியத்தேவன் said...

நல்லதொரு அலசல் லோஷன். கும்ளே தமிழ் மொழியிலும் பேசுவார். ஒருமுறை எஸ் எஸ் சி மைதானத்தில் நண்பர்களுடன் சென்று ஆட்டோகிடாப் வாங்கியபோது தமிழில் கதைத்தார்.

சரியான நேரத்தில் எடுத்த சரியான முடிவு, கங்குலி, கும்ளே என இந்திய அணியின் தூண்கள் விலகுகின்றன. அதேபோல் இலங்கை அணியிலும் விரைவில் ஜெயசூர்யா, வாஸ், முரளி என சில தூண்கள் விலகலாம் அல்லது விலக்கப்படலாம்.

புதியன புகுதலும் பழையன கழிதலும் கிரிக்கெட்டிலும் நடக்கும்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கும்ப்ளே என்றும் கடைசி வரை போராடும் ஓர் போராளி, எனக்கு இன்னும் கும்ப்ளே என்றால் நினைவுக்கு வருவது ஹீரோ கப் இறுதி போட்டி தன் அப்பொழுது நாங்கள் எல்லாரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தீவிர ஆதரவாளர்கள், ஆனால் அந்த நேரத்தில் உலகையே கலக்கி வந்த வெஸ்ட் இண்டீஸ் Batsman களின் கோட்டையை தனது பந்து வீச்சால் சின்னா பின்னா மாக்கினர், எனக்கு கிட்ட தட்ட 2 வாரம் தூக்கம் இல்லை, காரணம் வெஸ்ட் இண்டீஸ் மட்சில் lost ஆனதும் மற்றும் நான் ஸ்கூல் நண்பனிடம் போட்டிருந்த சவாலில் தோற்றதும், எப்படியோ இந்தியா கிரிக்கெட் அணி ஒரு சிறந்த போராளியை இழந்து விட்டது, கடைசிவரை இந்தியா அணியில் விளையாடி உணர்ச்சிவசபடமல் எதிர் அணியில் உள்ளவர்களோடு சர்ச்சை இல்லாமல் விளையாண்ட மிக சில வீரர்களில் இவர் முக்கியமானர், I wish him all the best in the future....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner