
சபிக்கப்பட்ட எம் இனத்துக்காக
சாவை முத்தமிட்டவனே
முத்துக்குமரா
எமது நீண்டதொரு
விடிவுக்கான யாத்திரையில்
விதைகளாக விழுந்தோரின் பட்டியலில்
நீயும் இப்போது
ஒருவனாக..
தீக்குளிப்பதை பூக்குவியலில் குதிப்பது போல
புன்னகையுட ஏற்றுக் கொண்டாயாமே ..
எம் நெஞ்சம் துடித்துக் கலங்கியது..
இன்னொரு தமிழன்..
இன்னொரு மனிதன்..
இன்னொரு இன்னுயிர்..
யுத்தமே,இன வெறியே உன் கோரப்பசி
இன்னும் அடங்காதா?
சகோதரா முத்துக்குமரா,
யாரோ ஒருவனாக
இருந்த நீ நேற்றுமுதல்
நம்மில் ஒருவனாக..
முகமறியாத உன்னைப் பற்றியே
நேற்று முதல்
நாமெல்லோரும் உண்மையாகவே
கவலைப்பட்டோம்
யார் நீ?
எம்மேல் ஏன் இத்தனை கரிசனம்?
உதிரம் கொடுத்து,உயிர் தந்த
உன் பெற்றோரைவிடவா
இலங்கையில் இன்னல் பட்டு
தினம்தோறும்
இறந்துபோகும் எம்
இலங்கைத் தமிழர்
பெரிதாய்ப் போய்விட்டோம்?
தனிப்பெரும் தலைவர்கள்
தானைத் தளபதிகள்
'அம்மா' என்ற பெயரை வைத்துக்கொண்ட
அவமானச் சின்னங்கள்
காந்திவழி நிற்கிறோம் என்று
பெருமை பேசியும்
பிணமாகிப் போகும் தமிழ் சகோதரர் மீது
இரக்கமே காட்டாத
பாசாங்கு அகிம்சாவாதிகள்..
இவர்கள் எல்லாம் வாய்மூடி,
வாய் வீரம் மட்டும் பேசி,
வசூலையும்,வாக்கையும் மட்டும் தேடி,
தத்தம் நலன் பற்றி மட்டுமே யோசித்து நிற்கையில்
நீ மட்டும் ஏன் இப்படி?
உன் குடும்பத்தின் கதி?
எத்தனையோ இலங்கைத் தமிழருக்கே
இல்லாத உணர்வு
உனக்கு வந்ததே..
ஆனால் உயிரின் மதிப்பு உனக்குத் தெரியாததா?
உன் இறுதி அறிக்கை பார்த்தேன்.
உணர்ச்சிவசப்பட்டு உயிரை தீக்கு இரையாக்கி
நீ தியாகியானாய்..
ஒரு சில தினங்களில்
மற்ற தியாகிகள் எங்கள் வாழ்வில்
எம்மக்களால் எப்படி மறக்கப் பட்டனரோ
அப்படியே உன்னையும் மறந்து விடுவர்..
போரும்,அழிவும் தொடரும்..
புலம்பெயர்வும்,அகதி அவலமும் தொடரும்..
ஈழத்தில் இறுதி தமிழன் அழிந்த பிறகும்
உங்கள் தமிழ்நாடு தமிழனை வாழவைக்கும்..
எங்கோ ஒரு புலம்பெயர் தேசத்தில்
எதோ ஒரு மூலையில்
யாரோ ஒருவன் உன் பெயர் சொன்னால்
அப்போது நானும் மகிழ்வேன்..
ஒவ்வொரு தமிழனின் உயிரும் முக்கியமே..
எமக்காக அநியாயமாக மாயாதீர்..
திருந்தாத அரசியல் ஜென்மங்கள்-இரங்காத தலைமைகள்
உங்கள் இறப்பினாலும் திருந்தாது..
நாளை தமிழன் விடிவுக்காக
இன்று உங்கள் குடும்பங்கள் நடுத் தெருவுக்கு வருவதா?
வேண்டாம் தற்கொலைகள்.. தீக்குளிப்புக்கள்..
பல மரணம் பார்த்துவிட்டோம் இங்கே..
அங்கேயும் வேண்டாம் உயிர்ப் பலிகள்..
வேதனையான இன்னொரு விடயம், இன்று இந்தியாவின் தேச பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட நினைவுதினம்.. எத்தனை பேருக்கு இது ஞாபகமோ?
நேற்றொரு தியாகம், இன்று இந்தியாவில் தியாகிகள் தினம்.. இனியும் வேண்டாம் தற்கொலைத் தியாகங்கள்.. நடப்பது நடக்கட்டும்..