இந்த பதிவு எப்போதோ எழுத ஆரம்பித்தாலும், இது போலவே ஆனால் இன்ன்னும் கொஞ்சம் காரமாக ஒரு மின்னஞ்சல் உலவிக் கொண்டிருந்ததனால் (சீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா? தமிழனின் உயிர்.............)
உடனடியாக இதையும் போட்டிக்கு பதிவேற்ற விரும்பவில்லை.. எனினும் இப்போது இந்தியாவின் தேர்தல் காலம்.. இலங்கை பற்றி ஏட்டிக்கு போட்டியாக கருத்துகள் வரும் வேளையிலும் என்னுடைய மனக் குமுறல்களைப் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்..
84ல் இந்தியாவில் இந்திராகாந்தியின் கொலையைத் தொடர்ந்து எழுந்த வன்முறை அலையும் - பலியான எண்ணற்ற சீக்கியர்களும் வரலாற்றில் மறக்கமுடியாத துயரம்!
கொலையாளிகள் அந்த இனத்தவர் என்பதற்காக ஒட்டுமொத்த வன்முறையும் அவர்களைக் குறிவைத்து நடத்தப்பட்டதும், பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டு – பற்பல சொத்துக்கள் சூறையாடப்பட்டதும் மனிதத்திற்கு அப்பாற்பட்ட – மனிதகுலமே வெட்கப்படவேண்டிய இழிசெயல்!
CBI அறிக்கையும் - இந்திய நாடாளுமன்றத் தேர்தலும் 25 ஆண்டுகால ரணங்களை மீண்டும் கீறிவிட
அமைச்சர் ப.சிதம்பரம் மீது சப்பாத்து வீச்சு
ஊடகவியலாளர் ஜர்னனல் சிங்கின் கொதிப்பும். தன் இனத்தின் பாதிப்பு பற்றிய உணர்வும், சீக்கியரின் 25 ஆண்டு காலம் மாறாத காயத்தின் பிரதிபலிப்புகள், ஆர்ப்பாட்டங்கள்.
84 வன்முறைகளின் காரணகர்த்தாக்கள் / பின் நின்றவர்கள் என்று குற்றஞ்சாட்டப்பட்டு வருகின்ற காங்கிரஸ் முன்னணித் தலைவர்களான ஜக்தீஸ் டைட்லர் மற்றும் சஜ்ஜான் ஆகியோர் மீது பரவலாக எழுந்த கண்டனங்களும், இம்முறை தேர்லில் அவாகளைப் போட்டியிட வாய்ப்பை காங்கிரஸ் கட்சி வழங்க்ககூடாது என்றும் எழுந்த ஆவேசக் குரல்களின் உறுதி காங்கிரசையே பணியச் செய்திருக்கிறது.
ப.சிதம்பரத்தின் சீக்கியர்களுக்கான அனுதாபமும், டைட்லர் சீக்கிய சமூகத்திடமும் முழு இந்தியாவிடமும் கேட்ட மன்னிப்பும் சில சேதிகளைச் சொல்லியுள்ளது.
25 வருடம் முன்பு இடம்பெற்ற வன்செயல்களுக்கும், படுகொலைகளுக்கும் நீதி கிடைத்ததோ இல்லையோ, அந்த செயல்கள் அநீதியானவை, வருந்தத்தக்கவை என்ற உண்மையை வெளிப்படையாக இந்திய அரசும், அமைச்சர்களும் ஏன் முழு இந்தியாவுமே ஏற்றுக்கொண்டுள்ளது.
என்னதான் இருந்தாலும் இந்தியாவில் மதச்சார்பின்மையும், ஜனநாயகமும் ஓரளவாவது செத்துவிடாமல் உயிர்த்திருக்கின்றன என்பதற்கு வேறு சான்று தேவையா?
அதுவும் ஒரு சீக்கியரையே தமது பிரதமராக மீண்டும் தெரிவுசெய்யக்கூட இந்தியர்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் கருத இடமுண்டு.
( எனினும் இம்முறை அத்வானி பிரதமராக வந்தால் மாற்றமொன்று கிடைக்கும் என்று மனசு சொல்கிறது. இந்தியர்களின் எண்ணம் எப்படியோ? )
எனினும் 83இல் எம் இலங்கையில் , குறிப்பாக கொழும்பிலும், மலையகத்திலும் இன்னும் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்த தமிழருக்கு நடந்த அநீதிக்கு?
இதுவரை மன்னிப்பு சிற்சில தடவைகள் அரசியல் லாபங்களுக்காகக் கோரப்பட்டாலும், இழைக்கப்பட்ட கொடுமைகள், அநீதிகளுக்கான தர்மம் இன்னமும் கிடைக்காமலேயுள்ளது.
83 கறுப்பு ஜூலையின் சில கோரக் காட்சிகள்
அந்த வடுக்கள் மறையாமலேயே மேலும் மேலும் பல ரணங்கள் - பல நிரந்தரமானவை!
83க்கே இன்னமும் நியாமும் நீதியும் கிடைத்தபாடில்லை.
அப்படியிருக்கையில் இன்று வரை நடக்கும் அழிவுகள், சுத்திகரிப்புக்களுக்கு எப்போது நியாயம் கிட்டும்? (முதலில் முற்றுப்புள்ளி எப்போதுன்னு சொல்லுங்கப்பா )
இல் கப்பலேறி, வள்ளம் ஏறி தென்னிந்தியக் கரைகளில் அடைக்கலம் தேட ஆரம்பித்த ஈழ அகதிகளின் அவல வாழ்வு இன்று வரை இருபத்தாறு ஆண்டுகளாக தொடர்கிறது..
84ல் ராஜிவ் காந்தி சீக்கியர் மீதான கட்டவிழ்த்துவிடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறைகளுக்குப்பின் சொன்னாராம்.
"ஒரு ஆலமரம் வீழ்ந்த பிறகு அதன் விளைவுகள் இப்படித்தான் இருக்கும் என்று அனைவரும் அறிந்துகொள்ளட்டும்"
சரி அதைத்தான் தாயின் படுகொலையால் மனம் நொந்து போன மகனின் கூற்றாகவே எடுத்துக்ககொண்டாலும், இதே விளைவுகளைப் பின்னர் இலங்கையிலும் தமிழர்களை அனுபவிக்க வைத்தவர் ராஜிவ். (ஆலமரம் எதுவும் சாயாமலேயே)
இதற்காக நான் எப்போதுமே ராஜிவ் காந்தியின் கொலையை நியாயப்படுத்தப் போவதில்லை.
அதன் ஏராளமான பின் விளைவுகள் இன்றுவரை தொடர்நது கொண்டேயிக்கின்றன. ஈழத்தமிழர்களுக்கே இதன் பாதிப்புக்கள் அதிகமெனினும் - ஆலமரமாக ராஜிவ் காந்தியே வீழ்ந்த பின்தான் பயங்கர விளைவுகள் அதிகமாகி இன்று விஷவாயு வரை வந்துள்ளதாக தெரிகிறது.
83 ஜீலைக் கலவரம் இலங்கையில் இடம்பெற்ற பின் அப்போதைய இலங்கையின் ஜனாதிபதி J.R.ஜெயவர்தன உதிர்த்த முத்துக்கள். "கொதிப்படைந்திருந்த சிங்களவரின் மன உணர்வுகள் இப்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன"
3வது நாளில் தான் அவரது கருத்துக்கள் இவ்வாறு வெளியாகின.
கலவரம் கட்டுக்குள் கொண்டுவரப்பட ஒரு முக்கிய காரணி அன்னை இந்திரா என்று எப்போதுமே ஈழத் தமிழரால் அன்போடும் நன்றியோடும் நினைவு கூறப்படும் அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கை ஜனாதிபதிக்கு கொடுத்த நிர்பந்தமும்,எச்சரிக்கையும் தான்...
அந்த ஆலமரம் சாய்ந்தபோது தங்கள் உறவே பிரிந்தது போல அழுது அரற்றினார்கள் அத்தனை ஈழத் தமிழர்களும்.
சிங்களவரின் பொறுமை, பெருந்தன்மை அதிகரித்ததோ அல்லது தமிழர் தொகை கொழும்பிலும், மேல் மாகாணத்திலும் அதிகரித்ததோ 26 ஆண்டுகளாக மீண்டுமொரு இனக்கலவரம் இல்லை.
இனி அப்படியொன்று வராது என்று உறுதியாகத் தெரிகிறபோதும் வந்தாலும் யாரும் தலையிட முடியாது.. தலையிட்டால் "Mind your own business"
பதில் வரும் என்று ஐ.நா முதல் அமெரிக்கா, இந்தியா வரை அனைவருக்குமே தெரியுமே..
ஆனால் பொதுவாகப் பழகுகின்ற சிங்களவர்களுக்கும் இப்போது உயிரின் மதிப்பு,அருமை தெரிகிறது..