October 22, 2009

மை நேம் இஸ்...




தமிழராக இருக்கிற அநேகருக்கு இருக்கும் பிரச்சினை பெயர்..
தமிழராக இருப்பதே பிரச்சினை எனும்போது பெயர் எல்லாம் எந்த மூலைக்கு என்று உங்களில் பலர் கேட்பதும் புரிகிறது..

surname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.

தமிழர் பெயர் எழுதும்போது இந்தக் குழப்பத்தை (full name,surname,family name) இல்லாமல் செய்ய எல்லோரும் ஒரு பொதுவழி நின்றால் தானுண்டு..முரளீதரனைக் கூட இன்றும் முத்தைய்யா என்று அவரது அப்பா பெயரால் அழைக்கிற சிங்கள நண்பர்கள் நிறையப்பேர் உண்டு..

சிங்களவர்களும் ஆங்கில வழக்கப்படி குடும்பப் பெயர்களையே பின்னால் எழுதுவதால் அவர்களது குடும்ப பரம்பரைகளைக் கண்டுபிடிப்பது இலகுவாகிறது.. மாறாக எங்களது மரபில் எனது பாட்டனாரின் பாட்டனாரின் பெயர் கதிர்காமர் என்றால் என் பெயரை வைத்து நான் கதிர்காமரின் (லக்ஷமன் கதிர்காமர் அல்ல) பரம்பரை என்று அறியமுடியாதே..

அதிகமான சிங்களவர்களின் பெயர்கள் பெரேரா,சில்வா,பெர்னாண்டோ எனவே முடிவதாக இருக்கும்... இல்லாவிட்டால் சிங்க,தாச,ரத்னே..

எனவே அதிகமான இனிஷல்களை அவர்கள் தெளிவாக வைத்துக் கொள்வார்கள்.

பழைய வரலாறுகளில் பெயர்கள் பற்றி தெளிவாக அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் அரசர்களைப் பொறுத்தவரை இரண்டாம் குலோத்துங்கன், மூன்றாம் பெருவழுதி என்றெல்லாம் வரும்போது ஓரளவாவது அவர்களின் பரம்பரைகளைப் பின்தொடர முடிகிறது.

(சில நம்மவர்களும் புலம்பெயர் தேசங்களில் மட்டுமல்லாமல் இங்கேயும் குடும்பப் பெயர்களைப் பொதுமைப் படுத்தியுள்ளனர்.)

கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் குடும்பப் பெயர்களையே அதிகமாகப் பயன்படுத்துவதால் பல சுவாரஸ்யமான குழப்பங்களை அடிக்கடி சில நண்பர்கள்,நேயர்களுக்கு வரும்.

அன்றொரு நாள் ஒருவர் எஸ்.எம்.எஸ் அனுப்பி இருந்தார் "மைக்கேல் கிளார்க்கும், ஸ்டுவார்ட் கிளார்க்கும் அண்ணன் தம்பியா " என்று..

அவருக்கு வந்த சந்தேகத்தில் என்ன தப்பு?

ஹசிக்கள் இருவரும் சகோதரர்கள் என்றால் என் கிளார்க்குகள் இருவர் சகோதரர்கள் ஆக இருக்கக் கூடாது?

எனக்கு அடிக்கடி இந்தப் பிரச்சினை வங்கி விஷயங்களிலும், credit card விஷயங்களிலும் தான் சிக்கலைத் தரும்.வீட்டுக்கே தொலைபேசி அழைப்பெடுத்து அப்பாவின் பெயரை சொல்லி இன்னமும் இந்த மாத credit card கட்டணம் கட்டவில்லை என்று இனிமையான குரலில் ஒரு பெண் முறையிடுவாள். அப்பாவி அப்பா ஒழுங்காகக் கட்டணம் கட்டி இருப்பார். (தனது credit card க்கு) ஆனால் நம்பாமல் அம்மா திட்டுவது அப்பாவுக்குத் தான்..

அதுபோலத் தான் ஒரு தடவை (ஒரே தடவை தான்) ஐரோப்பா சென்ற போதும் எல்லா இடங்களிலும் அப்பாவின் பெயர் தான் என் திரு நாமம் ஆனது. ;)

ரொம்பக் கஷ்டப்பட்டு எல்லா இடங்களிலும் ஒவ்வொரு விதமாக எனது அப்பாவின் பெயரைப் போட்டுப் படுத்தி எடுத்தார்கள்..
இன்னுமொரு விஷயம்.. பள்ளி நாட்களில் இருந்து இன்றுவரை எனது முழுப்பெயரை பிழையில்லாமல் சரியாக உச்சரித்தவர்கள் மிக,மிகக் குறைவு.(ஆங்கிலத்திலோ,தமிழிலோ)

என் பெயர் அப்படி.. அதுவும் அப்பாவின் பெயரையும் சேர்க்கும் போது தொலைந்தார்கள் என்னை அழைப்பவர்கள்..

ரகுபதிபாலஸ்ரீதரன் வாமலோசனன்.

இந்த அழகான பெயரை எல்லோரும் சிறுவயது முதலே தாங்கள் விரும்பிய மாதிரியெல்லாம் அழைத்தும்,உச்சரித்தும் பாடாய்ப்படுத்தியதாலேயே, நான் வானொலித்துறைக்கு வந்தவுடனே என்னை வீட்டில் அழைக்கப் பயன்படுத்தும் 'லோஷன்' என்பதை என் பெயராக்கிக் கொண்டேன்.. (அப்பாடா ஒரு பெரிய வரலாற்று ரகசியம் சொல்லியாச்சு..)

எங்கள் அப்பாவின் குடும்பத்தில் எல்லோருக்குமே இப்படி நீளமான,மிக நீளமான பெயர்கள் தான்..

அப்பாவின் அப்பா ஒரு தமிழ்ப் பண்டிதர்.அந்தக் காலத்திலேயே சென்னை போய் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் பாண்டித்தியம் பெற்றவர்.எனவே தனது பிள்ளைகளின் பெயர் விடயத்திலும் தன் புலமையைக் காட்டி விட்டார்.

பெயர்களைப் பாருங்கள்..

சபாபதி பால கங்காதரன்
இரகுபதி பால ஸ்ரீதரன்
பூபதி பால வடிவேற்கரன்
அமர சேனாபதி பால கார்த்திகைக் குமரன் (எப்படித் தான் சின்ன வயதில் தன் பெயரை இவர் எழுதினாரோ??)
ஸ்ரீபதி பால முரளீதரன்

இவர்களில் என் அப்பா தவிர ஏனைய எல்லோரும் வெளிநாடுகளில்.பாஸ்போர்ட்டில் இந்த ஒரு கிலோ மீட்டர் பெயர்கள் கொள்ளாது என்ற காரணத்தால் குட்டிப் பெயர்களோடும் ,அதற்கு முன் ஏராளமான இனிஷல்களோடும் வாழ்கின்றனர்.

பாடசாலை நாட்களில் பரீட்சைத் தாளில் இவர்கள் பெயர்கள் எழுதிமுடிக்க முதல் பரீட்சை முடிந்து விடுமோ தெரியாது.

ஆண்பிள்ளைகள் தான் இவ்வாறேன்று இல்லை.. எனது மாமிமார் இருவரதும் பெயர்கள்..
அருந்ததி ஆனந்த கௌரி
காயத்திரி ஆனந்த ரமணி

அவதானித்துப் பார்த்தால் எனது பாட்டனார் தனது மகன்களின் பெயர்கள் ஒவ்வொன்றிலும் பால,பதி என்ற சொற்களும்,மகள்களின் பெயர்களில் ஆனந்த என்ற சொல் இடம்பெறுமாறும் பார்த்துக் கொண்டார்.

அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)

இவ்வளவு நீளமான பெயர்களைத் தன் பிள்ளைகளுக்கு வைத்த அவரது பெயர் ஆனந்தர்!!!

மறுபக்கம் எனது அம்மாவின் குடும்பத்தில்,எனது தாத்தாவான இலங்கை வானொலி புகழ் - சானா என்றழைக்கப்பட்ட (எவ்வளவு சின்னப் பெயர் பாருங்கள்) சண்முகநாதன் (லண்டன் கந்தையா) எனது மாமன்மாருக்கும்,அம்மா,பெரியம்மாவுக்கும் சின்னப் பெயர்களாகத் தேடிப் பார்த்து வைத்துவிட்டார்.

ஆண் பிள்ளைகளுக்கு நான்கு எழுத்துப் பெயர்களும்,பெண்களுக்கு மூன்று மற்றும் இரண்டு எழுத்துகளிலும் பெயர்கள்..

அசோகன்
தேவகன்
அமலன்
ராகுலன்
ஜனகன்

உமா
சுமதி

ஆனால் இரண்டு குடும்பங்களிலுமே ஐந்து ஆண்களும்,இரண்டு பெண்களும்..

இது தான் வேற்றுமையில் ஒற்றுமையோ?

நான் பாடசாலையில் படிக்கும் நாட்களிலும் சரி பின் வேலை புரிகின்ற நாட்களிலும் சரி என்னுடைய நீளமான பெயர்கள் பலருக்கு சிரமம் கொடுத்திருக்கின்றன.
குறிப்பாகப் படிவங்கள் நிரப்பும் போது, அடையாள அட்டைகள்,போலீஸ் பதிவு எழுதும் போது (அண்மையில் நிறையப் பேருக்கு வேண்டாமென்று போய் விட்டது.) என்று பல சந்தர்ப்பங்கள்..

கடந்த நவம்பர் சிக்கல்களுக்கு பிறகு பலவிதமாக பலவிடங்களில் பயன்படுத்தப்படும் என் பெயர்களை எல்லாம் ஒரு சட்டத்தரனியைக் கொண்டு இவை அனைத்தும் குறிப்பது என்னையே என்றொரு அத்தாட்சி தயார் செய்தும் வைத்துள்ளேன்.. எதற்கும் தயாராக இருப்பது நல்லதல்லவா?

அதிலும் இப்போது வேலை புரியும் இடத்தில் முதல் மாத சம்பளம் வாங்கும்போது (இங்கே மட்டும் வங்கியில் சம்பளம் போடாமல் கை நிறைய,வெள்ளைக் கடித உறையில் இட்டு கொடுப்பார்கள்) எங்கள் வெற்றி பிரிவில் மட்டும் ஆண்களில் எங்களுக்கு சம்பளம் வழங்கப் படாமல் எங்கள் தந்தைமாரின் பெயர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது. நான் வேடிக்கைக்காக எங்கள் பிரதான காசாளரிடம் "வீட்டில் இருக்கும் எங்கள் அப்பாமாருக்கு சம்பளம் கொடுத்தீங்க,பரவாயில்லை..ஆனால் வேலை செய்த எங்களுக்கும் கொடுக்கத் தானே வேணும்" என்றேன்.. ஆளுக்கு முதலில் எதுவும் புரியவில்லை.. பிறகு விளக்கிச் சொன்னவுடன் சிரித்தார்.

என் பெயரை எங்கள் குடும்பவழக்கதிற்கும் மாறாக (வழமையாக எங்கள் வீட்டில் அனைவரது பெயர்களையும் பாட்டா- அப்பாவின் அப்பா தான் வைப்பார்) தாத்தா தான் வைத்தார்.. சமஸ்கிருத மொழியில் அழகிய கண்களையுடையவன் என்று அர்த்தமாம்.. (பாருங்கப்பா.. அப்பவே என் அழகைப் பார்த்து தீர்க்க தரிசனத்தோடு மனுஷன் வச்சிருக்காரு ;))

எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்.

எனது கமல் பைத்தியம் பெயரில் தெரிவதாக மனைவி அடிக்கடி சாடுவதும் உண்டு.. எனினும் இந்தப்பெயரில் ஒளி பொருந்தியவன்,மகிழ்ச்சிப் படுத்துபவன்,சூரியன்,சிவன் என்று பல அர்த்தங்கள் உள்ளன..

வளர்ந்த பிறகு என் மகனும் நீளமான பெயர் வைத்து அவஸ்தை தந்துவிட்டேன் என்று என்னைத் திட்டுவானோ தெரியாது.. விரும்பினால் பின்னாளில் மாற்றிக் கொள்ளும் முழு உரிமையையும் அவனுக்குக் கொடுப்பேன்..

நான் என் அப்பருக்குத் திட்டு வாங்கிக் கொடுத்தது போல அவனும் எனக்கு வாங்கிக் கொடுத்து விடுவானோ என்ற பயமும் உண்டு..

ஆண்களின் பெயர்களைப் பற்றியே இந்தப் பொதுப்படைப் பேச்சு.. பெண்களுக்கு பாவம் திருமணத்துக்கு முன்னர் தந்தையின் பெயர் பின்னால்.. திருமணத்தின் பின் கணவனின் பெயர் பின்னால்..

சில மேலைத்தேயப் பிரபலங்களும், தென் ஆசிய அரசியல் பெண்மணிகளும் அதிக பிரபல்யத்துக்காகவும் ஆதாயங்களுக்காகவும் தந்தை வழிக் குடும்பப் பெயர்களையும் தங்கள் பெயர்களோடு ஒட்டிக் கொள்ளும் நிகழ்வுகளும் வரலாறுகள் கண்டுள்ளன.

லீசா மேரி ப்ரெஸ்லே (எல்விஸ் ப்ரெஸ்லெயின் மகள், மைக்கேல் ஜாக்சனின் முன்னாள் மனைவி)

இந்திரா காந்தி., பெனாசிர் பூட்டோ, சந்திரிக்கா பண்டாரநாயக்கே குமாரணதுங்க..

எனக்கு இருக்கும் இன்னொரு குழப்பம் - ஆண்களின் பெயர்களுக்கு முன்னால் நாம் அப்பாவின் பெயரை எழுதுவது போல, ஏன் பெண்களுக்கும் எழுதக் கூடாது?
எனக்கு நாளை ஒரு மகள் பிறந்தால் நான் அதை செயற்படுத்தும் எண்ணம் வரலாம்.. ;)

(இப்போது எனது மகனுக்கு நான் பதிந்துள்ள பெயரின் படி அவனது தாயாரின் பெயரின் முதல் எழுத்தையும் இனிஷலாக சேர்த்துள்ளேன்.. ஆங்கில எழுத்துப் படி எனது பெயரை இரண்டாக்கினால் வருகின்ற எழுத்துக்களும் V .L என் மனைவியின் பெயரோடு ஒத்திசைவது வாய்ப்பாகிப் போய்விட்டது)


25 comments:

உதய தாரகை said...

//அந்த நாளில் எங்களுக்கு ஆங்கிலப் பாடம் சொல்லித் தரும் எங்கள் மாமா அமர சேனாபதி என்று தொடங்கும் சித்தப்பாவின் பெயரை தவறில்லாமல் ஆங்கிலத்தில் முதலில் எழுதிக் காட்டுபவருக்கு சொக்லட் பரிசாகக் கொடுப்பார்.அடிக்கடி எனக்குத் தான் கிடைக்கும்..(நம்புங்கப்பா)//

நம்பிட்டோம் சார்...

ஆஹா.. இந்தப் பதிவையெழுத ரூம் போட்டு யோசித்திருப்பீங்களோ?? பதிவின் ஒவ்வொரு வசனமும் அடுத்த வசனத்தை வாசிக்கத் தூண்டுமாய்ப் போல் இருந்தது வலிமை. கொண்ட மொழியும் சொன்ன நிலையும் அழகு.

சும்மா சொல்லக்கூடாது. பெயர்கள் சொல்லும் அழகிய நிலையையும் நீண்ட பெயர்கள் சில சமயம் தரும் அவஸ்தைகளையும் அழகுற சொல்லியிருந்தீர்கள். வாழ்த்துக்கள்.

சீனர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்க பாத்திரங்களை தரையில் இட்டு, அதன் மூலம் எழுப்பப்படும் ஒலியை பெயராக வைப்பார்களாம் என்று பலரும் நகைச்சுவையாகச் சொல்வார்கள். இருக்கோட்டும். இருக்கோட்டும்.

பெயர்கள் அழகு.

இனிய புன்னகையுடன்,
உதய தாரகை

கானா பிரபா said...

surname,full name,family name என்று விண்ணப்பப் படிவங்களில் இருக்கும் குழப்பத்தினால் அடிக்கடி எங்களில் அநேகமானோருக்கு அப்பாவின் பெயரே எங்கள் பெயராகிவிடுவதுண்டு.
//
இன்று வரை எனக்கும் தொடர்கிறது ;)

அடேயப்பா பெயர் ஆராய்ச்சியில் பி.எச்.டி அளவுக்கு போயிட்டீங்களே ;)

இரா பிரஜீவ் said...

"எனக்கு வந்த இந்த நீளப் பெயர் ராசி என் மகனுக்கும் தொடர்கிறது.. நியூமறோலோஜியில் நம்பிக்கை உடைய நான் தேடிப் பிடித்து (அம்மா,மனைவி,தம்பியின் உதவியோடு) யாருக்கும் இல்லாத பெயராக வைத்தது தான் இந்த ஹர்ஷஹாசன்."

என்ன தலைவா இவ்வளவு பேரும் இவ்வளவு கடினப்பட்டு தேடியும் ஒரு தமிழ்ப்பேர் கிடைக்கலையா?

நமக்கும் இங்கு வந்த புதிதில் உந்தச்சிக்கல்தான். இப்போது ஓரளவிற்கு மாற்றி விட்டேன் ஆனாலும் ஒரு சில இடங்களில் என் அப்பரின் பெயரில்தான் எல்லமே இருக்கிறது.

மேவி... said...

அட ..... எனக்கும் என் பெயர் தான் பிரச்சனை. யாரும் என்னை முழுமையான என் பெயரை சொல்லி அழைத்து இல்லை ...... என் பெயர் "மேவி காசி விஸ்வநாத தியாகராஜன்" ......


இதனால் பலர் ஒவ்வொரு பெயர் சொல்லி அழைப்பதால் .. அடிக்கடி நான் குழம்பி விடுவேன்

யோ வொய்ஸ் (யோகா) said...

நல்ல பதிவு.. எனக்கும் இந்த பிரச்சினை உண்டு எனது முழுப்பெயரான ”உத்தமகுமாரன் யோகசந்திரன்” என்பதிலிருந்து நண்பர்கள் ஒவ்வொரு பாகங்களை எடுத்து என்னை அழைக்க தொடங்கிவிட்டனர். யோகா, யோ, சந்திரன், சந்ரு, யோக்ஸ், இப்படி பல பெயரால் நான் அழைக்கபடுகிறேன்.

மூஞ்சி புத்தகத்தில் எனது பெயரை யோக சான் (Yoga Chan) என வைத்திருப்பதை பார்த்து உங்களிடம் ஜாக்கி சான் (Jackie Chan), யோக சான் இருவரும் சொந்தகாரர்களா என கேள்வி கேட்டு வரலாம்.

என்றும் அன்புடன் கரன்... said...

பெயரில் இவ்வளவு சிக்கல்கள் உள்ளதா...???... ARV . Loshan பின்னால் ஒரு சரித்திரம்... நீங்க எதாவது Phd க்கு ட்ரை பண்ரீங்களா ?...எது எப்படியோ நீங்க சொன்னது 100% சரி...Blog sooper ...

என்.கே.அஷோக்பரன் said...

இதெல்லாம் ஒரு பிரச்சினையா? இன்றும் எனது சிங்கள நண்பர்கள் சிலர் என்னை நல்லையா என்று தான் அழைக்கின்றார்கள் (இது எனது அப்பப்பாவின் பெயர்) காரணம் நான் எனது பெயரை நல்லையா குமரகுருபரன் அஷோக்பரன் என்று பாவிப்பதுதான். நான் இத்தாலிக்கு உலகப் பாடசாலைகள் மாநாட்டுக்குச் சென்றிருந்த போது கூட இந்தப் பிரச்சினையிருந்தது. மாநாட்டு மண்டபத்தில் ஒவ்வொருவர் இருக்கைக்கு முன்னும் அவர்களது பெயர்கள் இருக்கும் எனது இருக்கைக்கு முன்னால் இருந்த பெயர் “நல்லையா குமரகுருபரன்” - கடைசியில் அவர்களுக்கு தமிழ்ப் பெயர்கள் எழுதும் முறையை விளக்கி எனது பெயர் அஷோக்பரன் என்பதைப் புரியவைத்தேன்.

எனது கொள்கை இதுதான் எல்லோரும் ஆங்கில முறையில் பெயர் எழுதுகிறார்கள் என்பதற்காக நாம் எமது முறையை விடத் தேவையில்லை மாறாக எங்கள் முறை இதுதான் என்று புரியவைப்போம். சீனர்களுக்கும், ஜப்பானியர்களுக்கும் கூட இந்தப் பிரச்சினைகள் இருப்பது உண்டு.

சயந்தன் said...

இது பெரிய குழப்பம்தான். family name தொடர்ச்சியாக மாறாமல் வரவேண்டுமாம். நமக்கு அப்பாவின் பெயர்தானே family name.. அதனால் அடிக்கடி மாறுகிறது.

ஏற்கனவே உங்களுடைய இதையொத்த பதிவில் சொன்னதுதான் . மணமுடித்த பல தமிழ் பெண்களின் அதிகாரபூர்வ பெயராக அவர்களது மாமாவின் பெயர்தான் இங்கே வழக்கில் இருக்கிறது.

வந்தியத்தேவன் said...

என்னுடைய பெயரில் அடையாள அட்டையில் முன்னர் சிக்கல் தமிழில் மயூரன் தான் ஆனால் சிங்களத்தில் மதுரன் இதனால் பொதுப் பரீட்சைகளில் பெயர் வேறைஎன சிங்களம் தெரிந்தவர்கள் சண்டைக்கு வருவார்கள் பின்னர் அவர்களுக்கு தமிழில் பெயர் சரி என்றுவிடுவேன். பாதுகாப்புப் படையினரிடம் இந்த விளக்கங்கள் சொல்லமுடியாது என்பதால் பெயர் கேட்டால்மதுரன் என்றே சொல்லிவிடுவேன். அண்மையில் பெய்ரை மாற்றி புதிய அடையாள அட்டை எடுத்துவிட்டேன்.

என் அப்பாவின் பெயரை உச்சரிக்க அல்லது எழுத பலரும் கஸ்டப்படுவார்கள் பேரின்பநாயகம் என்பது அவரின் பெயர்.

பாடசாலையின் என் பெயர் வேறை. என் பாடசாலை நண்பர்களிடம் மயூரனைத் தெரியுமா எனக்கேட்டால் தெரியாது என்பார்கள். வீட்டில் இன்னொரு பெயர். வலையில் வந்தி. பிரேம்நாத் ஆசிரிய வைத்த பெயர் வேறை,

பெயர்க் குழப்பம் என் சான்றிதழ்களில் அடிக்கடி வரும் என்னுடைய சான்றிதழ்கள் அனைத்தும் எம்.பேரின்பநாயகம் என அப்பாவிற்க்குத் தான் சொந்தம்.

இந்த முறைய மாற்றவேண்டும் யாராவது ஆவண செய்யுங்கள்.

Unknown said...

அண்ணா...
மைக்கல் கிளார்க், ஸ்ருவேட் கிளார்க் விடயத்தில் சிறிய தவறொன்று உள்ளது...
இருவரின் பெயர்களும் வேறு வேறானவை...

Michael Clarke
Stuart Clark

ஆகவே ஆங்கிலப் பெயர் தெரிந்தால் இருவரின் பெயர்களிடையே எந்தப் பிரச்சனையும் வராது.

நான் எனது பெயரை தமிழில் கனகலிங்கம் கோபிகிருஷ்ணா என்றும் ஆங்கிலத்தில், வலைத்தளங்களில் Gopikrishna Kanagalingam என்றும் பயன்படுத்துவதால் எந்தப் பிரச்சினையும் இதுவரை வந்ததில்லை.

இங்கிருந்து வெளிநாடு செல்லும் பலரும் அப்பாமாரின் பெயரை முன்னுக்கு எழுதி நிறைய இடர் படுவதாக அறிந்தேன்...

உங்களுடைய அப்பாவின் சகோதரர்கள் பாவம் தான்... சிறுவயதில் நிறையக் கஷ்ரப் பட்டிருப்பார்கள் தான்...

அஜுவத் said...

அண்ணா சில இஸ்லாமியர்களுக்கு தனது முழுப்பெயரில் இரண்டு முறை ஒரே பெயர் வரும்;.... எனது பெயரும் அவ்வாறுதான் முஹம்மட் அபூபக்கர்(தந்தை) முஹம்மட் அஜுவத்(நான்)

Anonymous said...

Loshan... You already published these informations.... Why did you publish again... I can remember when i reading this,... (If u can check and let me know when didi u publish before)

Anyhow its interesting...

Amritha...

இறக்குவானை நிர்ஷன் said...

ஹர்ஷம் என்ற வடமொழிச் சொல்லுக்கு கமலம் என்றும் பொருளும் உண்டு.

பெயர் தொடர்பில் ஏற்படுகின்ற யதார்த்த சிக்கலைச் சொல்லும் நல்லதொரு பதிவு.

உங்களுடைய பெயர் விபரங்களை (வரலாற்றினை) ஏற்கனவே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள் போல ஞாபகம்.

(தீபாவளிக்கு முதல்நாள் நான் வீடு செல்லும்போது (பஸ் இல் சுமார் மூன்றரை மணிநேர பயணம்) கொழும்பிலிருந்து இறக்குவானை வரை தனது கையடக்கத் தொலைபேசியில் இளைஞர் ஒருவர் வெற்றி டிவி பார்த்துக்கொண்டு வந்தார். வளர்க பணி.)

Subankan said...

அண்மையில் எனது சிங்கள நண்பனை நான் கேட்ட ஒரு கேள்வி - சின்ன வயதில் நீங்களெல்லாம் எப்படி உங்கள் பெயரை ஞாபகம் வைத்துக்கொள்வீர்கள்? அது தொடர்பாக பதிவொன்றும் எழுதவேண்டும் என நினைத்திருந்தேன். முந்திவிட்டீர்கள்.

இது மீள்பதிவுதானே?

புல்லட் said...

அப்பப்பா வளர்த்த நாய்க்குட்டிக்கு என்ன பெயர்?
ஜிம்மிய சீச பப்பிய பதீ டம்மிய ஸ்ரீ டைகர் தானே?

பெயரை கூப்பிட்டு முடிக்க முன்னம் நாய் வளர்ந்து ரெண்டு குட்டியும் பொட்டிருக்கும்...

தர்ஷன் said...

ஏற்கனவே படித்த ஞாபகம் மீள் பதிவுதானே

தங்க முகுந்தன் said...

நீர் லோஷன்! எந்த - ஷ - ச - ஸ - பாவிக்கிறீங்கள்? நான் முகுந்தன்! எங்கள் குடும்பத்தில் சில - ன் - இல் முடியும் பெயர்கள் - கணேசானந்தன், கோபாலச்சந்திரன், காண்டீபன், பகீரதன், அன்பழகன், சுகந்தன், முத்தழகன், அகிலன், பிரதீபன், சயந்தன், குமணன், சசீதரன், அரவிந்தன், லம்போதரன், ஸ்ரீலவன், இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம்!
அதுசரி இங்கே - அப்பா பெயர்தான்! பமிலியன் நாமே(Familien Name) என்று டொச்சில் சொல்லி அழைக்கிறார்கள்.
ஏதோ நண்பர்கள் தெரிந்தவர்கள் என பலர் இங்கிருப்பதாலும் - தொலைபேசியில் எம்மவர்களுடன் பேசுவதாலும் ஏதோ எம் பெயர்நினைவில் இருக்கிறது!

அமுதன் said...

எல்லாம் சரி உங்களுக்கு ஏன் இந்த வடமொழி பற்று(வெறி).தங்கள் குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் வைத்திருக்க கூடாதா?

என்ன கொடும சார் said...

பேரரசு / ஹரி இன் படம் பார்த்த திருப்ப்தி.. முந்தி வாசித்தௌ எல்லாம் இன்னொரு வடிவத்தில் அப்படியே இருக்கு

Jackiesekar said...

இதுல இவ்வளவு பிரச்சனையா? நல்ல பதிவு...

கிழட்டுப்பூசாரி said...

வணக்கம் அண்ணா,
நான் தான் கிழட்டுப்பூசாரி.
நல்ல ஆராய்ச்சி தான். இண்டைக்கும் நான் இந்த விடயங்களில் பிழை விடுறது தவிர்க்க முடியாதது தான்.

உங்கட அப்பாவின் பெயர்
ரகுபதிபாலஸ்ரீதரன் அல்லது
இரகுபதி பால ஸ்ரீதரன்

நீங்கள் இருவாறாக உங்கள் தகப்பனாரின் பெயரை எழுதியிருந்தீர்கள். ஆனால் அவை உச்சரிப்பில் ஒன்றாய் இருந்தாலும் நியுமராலயி முறையின் படி பிழைக்கப்போகுதே

திருத்துங்கோ

sanjeevan said...

face book இல பெரிய பெயருடைய user நீங்களாமே உண்மையா.....

Nimalesh said...

yenna innum officela Appa payar soli thaa kupiduvaga.. yenna kodum sir ithu.......coz offcial Email, Nmalesh.parmasivam yendru thaa start pannum bt most ppl called me as paramasivam.. kodumai kodumai

Nimalesh said...

yenna innum officela Appa payar soli thaa kupiduvaga.. yenna kodum sir ithu.......coz offcial Email, Nmalesh.parmasivam yendru thaa start pannum bt most ppl called me as paramasivam.. kodumai kodumai

Nimalesh said...

yenna innum officela Appa payar soli thaa kupiduvaga.. yenna kodum sir ithu.......coz offcial Email, Nmalesh.parmasivam yendru thaa start pannum bt most ppl called me as paramasivam.. kodumai kodumai

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner