August 31, 2010

இலங்கைக்கு விடைகள்,இந்தியாவுக்கு வினாக்கள் - முக்கோணத் தொடர்

சனிக்கிழமை - இலங்கையில் நடைபெற்ற முக்கோணத் தொடரின் இறுதிப் போட்டி.
இத் தொடர் ஆரம்பிக்கும்போதே அதிக பலமுள்ள அணியாகத் தெரிந்த இலங்கை அணி மிகப் பொருத்தமாக வெற்றி ஈட்டிக் கொண்டது.




எதிர்பார்த்ததை விட இலகுவான வெற்றி.
இறுதிப் போட்டியொன்றில் ஒரு அணி 74 ஓட்டங்களால் தோற்கிறது என்று பார்த்தால் வென்ற அணியின் திறமையை விட தோற்றுப் போன அணியின் பலவீனங்களே பெரிதாகத் தெரியும்.
இங்கும் அதுவே உண்மையாகிறது.


இரு அணிகளுக்கிடையிலும் தொடர் முழுவதும்,இறுதிப் போட்டியிலும் தெரிந்த வித்தியாசங்கள்..


அனுபவம்..
இந்திய தங்கள் முக்கியமான நான்கு வீரர்கள் இன்மையை அதிகமாக உணர்ந்திருக்கும்.


இணைப்பாட்டத்தின் முக்கியத்துவம்.
சேவாக்கை மட்டுமே இந்தியா நம்பியிருக்க மற்றவர்கள் கை விரித்திருந்தார்கள்.
இலங்கையின் சிரேஷ்ட வீரர்கள் முக்கியமான தருணங்களில் இணைப்பாட்டங்களை உருவாக்குவதில் அக்கறை எடுத்தார்கள்.


ஆரம்பப் பந்துவீச்சாளர்களுக்குத் துணையாக இன்னொரு விக்கெட்டுக்களை வீழ்த்தக் கூடிய வேகப் பந்துவீச்சாளர்.
இலங்கை அணிக்கு திசர பெரேரா தொடர் முழுவதிலும் ஒரு ஹீரோ.,அதிலும் இந்திய அணிக்கெதிராக மட்டும் அவர் காட்டும் அசகாய சூரத்தனம் வியப்பாக இருக்கிறது.
இறுதிப் போட்டியிலும் திசர கைப்பற்றிய மூன்று விக்கெட்டுக்கள் முக்கியமானவை.


இந்திய அணி முனாப் படேலை தாமதமாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.. நியூசீலாந்துடன் முனாப்பின் பந்துவீச்சு பெரிதும் கை கொடுத்தது.ஆனாலும் நெஹ்ராவும்,பிரவீன் குமாரும் இலங்கையுடன் சோபிக்கவில்லை.


ஒரு அணியின் ஆட்டப் போக்கைத் தீர்மானிக்கும் முக்கிய ஏழாம் இலக்கத் துடுப்பாட்ட வீரர் இந்தியாவைப் பொறுத்தவரை இம்முறை ஏழரை சனியன் ஆனது.
ரவீந்திர ஜடேஜாவை நான்கு போட்டிகளில் நம்பி நாசமாப் போய்,அவரிலும் மோசமான போர்மில் இருந்த ரோகித் ஷர்மாவை இறக்கி மேலும் மோசம் போனதே மிச்சம்.


இலங்கை அணியோ அந்த ஏழாம் இலக்கத்தை சுழற்சி முறையில் கையாண்டது.
இறுதிப் போட்டியில் சாமர சில்வா தேவையான முக்கியமான ஓட்டங்களை எடுத்ததும் அதே இலக்கத்தில் தான்.


இருந்துபாருங்கள் உலகக் கிண்ணத்தில் இம்முறை தாக்கம் செலுத்தப் போகும் ஒரு முக்கிய காரணி இந்த ஏழாம் இலக்கத் துடுப்பாட்டம்.


தோற்கும் அணியெல்லாம் படுதோல்வி அடைந்ததாகவும்,நெருக்கமான போட்டிகள் அற்ற தொடராகவும் அமைந்த இந்தப் போட்டியில் இறுதியில் இலங்கை வென்றதிலிருந்து இலங்கை அணி தான் இம்மூன்று அணிகளில் பலமானது என்று நாம் கருத முடியாது.
காரணம் எல்லா அணிகளும் இன்னொரு அணியிடம் தோற்றன.தோற்கும்போதும் மிக மோசமாகத் தொற்றிருந்தன.
ஆனால் அணியின் கட்டமைப்பிலும்,அனுபவ ஆழத்திலும்,பந்துவீச்சு வரிசையிலும் இலங்கை அணி முந்திக்கொள்கிறது.


இந்தியாவின் ஒவ்வொரு வெற்றியிலும் செவாக்கே தெரிந்தார்.


இறுதிப் போட்டியில் இவை நன்றாகவே தெரிந்தது.


தேவையான முக்கியமான நேரத்தில் இலங்கையின் டில்ஷான்,மஹேல ஜெயவர்த்தன,சங்கக்கார ஆகிய மூன்று சிரேஷ்டர்களின் துடுப்பாட்டம் துணை வந்தது.


மஹெலவை ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக மீண்டும் அனுப்பிய முடிவை நான் கடந்த பதிவொன்றில் சிலாகித்து எழுதியிருந்தது ஞாபகமிருக்கும்.
இறுதிப் போட்டியில் மஹேல-டில்ஷான் இணைப்பாட்டம் தான் இலங்கையின் முதல் துருப்புச் சீட்டு.
20 ஓவர்களுக்குள் 121 ஓட்டங்கள்.. இதில் மஹேல 39ஓட்டங்கள் மட்டுமே. ஆனால் கிட்டத்தட்ட அரைவாசிப் பந்துகளை எதிர்கொண்டு.
மறுபக்கம் டில்ஷான் அதிரடி..
இது தான் ஒரு இணக்கமான இணைப்பாட்டத்துக்கு அடிப்படை.


 மீண்டும் ஒரு முக்கிய இணைப்பாட்டம் சங்கக்கார-டில்ஷான்.
85 ஓட்டங்கள் 16 ஓவர்களில்.
இந்தியாவிடமிருந்து முற்று முழுதாகக் கிண்ணத்தை இலங்கை பறித்துக் கொண்டது இந்த இணைப்பாட்டத்தின்போது தான்.
டில்ஷானிடமிருந்து அதிரடியை எடுத்துக்கொண்டார் சங்கா.
டில்ஷான் வேகமாக சதமடிக்க சங்காவின் அரைச் சதம் அதை விடக் கொஞ்சம் வேகமாக வந்தது.
இதில் இன்னொரு முக்கியவிடயம், இலங்கை,இந்திய வீரர்களைப் பொதுவாக எல்லா விமர்சகர்களுமே சொந்தநாட்டில் மட்டும் சோபிப்பவர்களாக விமர்சிப்பதுண்டு.


ஆனால் டில்ஷான் ஒரு நாள் போட்டிகளில் இதற்கு முன் ஏழு சதங்களைப் பெற்றிருந்தாலும் அவர் இலங்கையில் பெற்ற முதல் சதம் இது.
இப்போது என்ன சொல்வார்கள்?


கடைசிப் பத்து ஓவர்கள் தோனிக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தைத் தந்ததாக இருந்திருக்கவேண்டும்.
காரணம் மிக மெதுவாகவே பந்துவீச்சாளர்களையும்,களத்தடுப்பாளரின் நிலையையும் மாற்றிக் கொண்டார்.
இதானால் பின்னர் ஊதியத் தொகையில் கணிசமான தொகையையும் தோனி+குழுவினர் இழந்தார்கள்.


ஜடேஜாவை விட்டுவிட்டு மேலதிகத் துடுப்பாட்ட வீரரை இறுதிப் போட்டிக்காக எடுத்தது எவ்வளவு பயனைக் கொடுத்தது என்று தெரியவில்லை.
காரணம் பகுதி நேர சுழல் பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களை ஓரளவு கட்டுப்படுத்தினாலும் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே எடுத்தனர்.


இலங்கை அணி பெற்ற மொத்த ஓட்ட எண்ணிக்கை (299 ) இத் தொடரில் அதிகூடியது என்பதுடன் தம்புள்ளை மைதானத்தில் பெறப்பட்ட மூன்றாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையுமாகும்.


இந்திய அணியின் துடுப்பாட்டம் இந்தத் தொடரில் இந்தப் பெரிய எண்ணிக்கையைத் துரத்திப் பிடிக்கும் அளவுக்கு வலிமையானதாக இருந்ததில்லை.
கார்த்திக் தவறான நடுவரின் தீர்ப்புக்கு இலக்காக, சேவாக்கும் கொஞ்ச நேரத்தில் விடைபெற இந்தியாகொஞ்சம் கொஞ்சமாகப் பின் தங்க ஆரம்பித்தது. ஓரளவு வேகமாக ஆட முனைந்த யுவராஜ் சிங்கின் ஆட்டமிழப்பின் பின் நத்தையோட்டுக்குள் சுருண்டு கொண்டது.
தலைவர் தோனி மட்டும் தனியாக நின்று மானம் காக்கும் நோக்கோடு இறுதிவரை ஆடிக் கொண்டிருந்தார்.இத்தொடரில் தோனியின் ஒரே அரைச் சதம் இதுவே.


பந்துவீச்சாளர்கள் ஓட்டங்களைக் கட்டுப்படுத்தி ஏற்படுத்திய அழுத்தம் பல விக்கெட்டுக்களைப் பெற்றுக் கொடுத்தது.
இந்தியா சுழல் பந்துவீச்சாளர் ஒருவரையும் நிறுத்திவிட்டு விளையாட இலங்கையின் சுராஜ் ரண்டீவ் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இருந்தார்.


நடுவர்களால் இந்திய அணிக்கு பாதிப்பு என்று எழுந்த குரல்கள் எல்லாம் இறுதிப் போட்டியில் மௌனமாகிப் போயின.
கார்த்திக்கை வீட்டுக்கு அனுப்பியது அசாத் ரௌப்.
அதன் பின்னர் அசோகா டீ சில்வா இந்தியத் துடுப்பாட்ட வீரர்களைப் பல முறை காப்பாற்றிவிட்டார்.


 அதிலும் யுவராஜ் நிச்சயம் அசோகா டீ சில்வாவுக்கு நன்றி தெரிவித்துத் தோப்புக்கரணம் போட்டாலும் பதிவு போட்டாலும் கூடத் தகும்.துடுப்பில் பட்டு சென்ற பந்தையே கவனிக்காதவராக நடுவர் தப்ப விட்டார்.
யுவி ஒன்றும் கில்க்ரிச்டோ,அரவிந்த டீ சில்வாவோ ஏன் குறைந்தபட்சம் சங்கக்காரவோ இல்லையே.
தப்பித்தோம் என்று நின்று விட்டார்.


ஆனால் UDRS என்று சொல்லப்படும் தொலைகாட்சி நடுவரிடம் மேன் முறையீடு செய்து செப்பனான முடிவைப் பெறும் நடைமுறையை இனி எல்லா அணிகளுக்கும் கட்டாயமாக்குவது அத்தியாவசியம்.
எல்லா நாடுகளும் பயன்படுத்துகையில் இந்தியாவுக்கு மட்டும் என் முடியாது? இதை ICCயும் கண்டிக்காதாம்.


ஆஸ்திரேலியா இந்தியா வருகையிலும் இதை இந்தியா வேண்டாம் என்று விட்டது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் UDRS பயன்படுத்தப்பட இருக்கையில் ஏன் ICC இப்போதே எல்லாப் போட்டிகளுக்கும் இதைக் கட்டாயமாக்கக் கூடாது?


தொடர் முழுவதும் தனித்து தெரிந்த சேவாக் தொடர் நாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.
அவர் பெற்ற மொத்த ஓட்டங்களை (268 ) விட இறுதியின் நாயகன் டில்ஷான் 29 ஓட்டங்களே குறைவாகப் பெற்றார்.
வேறு எவருமே 200 ஓட்டங்களைக் கடக்கவில்லை.
இலங்கை அணித்தலைவர் சங்கக்காரவும் எல்லாப் போட்டிகளிலும் சராசரியாக ஓட்டங்கள் பெற்றிருந்தவர்.


பிரவீன் குமார் தன்னை மீளவும் நிறுவிய தொடர் இது.ஒன்பது விக்கெட்டுக்களை அவர் வீழ்த்தியிருந்தார்.
கைல் மில்ல்ஸ்,நெஹ்ரா ஆகியோரும் திசர பெரேராவும் தலா எட்டு விக்கெட்டுக்கள்.
எனினும் திசர கொடுத்தது வெறும் 64 ஓட்டங்கள் மட்டுமே.
இந்தியா அணிக்கெதிராக மட்டும் அவரை ஆயுதமாகப் பயன்படுத்தாமல் ஏனைய அணிகளுக்கு எதிராகவும் பயன்படுத்தும் நேரம் வந்தாச்சு.




இந்தத் தொடர் மூலமாக மீண்டும் அணிக்குள் இடம் பிடிக்க முனைந்த ஒருவர் முனாப் படேல்.இப்படியான ஆடுகளங்களுக்கு(மட்டும்) உகந்தவர் முனாப்.


இலங்கை அணியின் சாமர சில்வாவும் தனக்கான துண்டை விரித்து அணிக்குள் இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டார்.
பாவம் சமரவீர.. வயதும் அவருக்கு சதிசெய்யலாம்.
கபுகேடரவும் கவனமாக இருக்கவேண்டி வரும்.வருகிறார்கள் சந்திமால் மற்றும் ஜீவன் மென்டிஸ்.


இந்தியா அணியின் ரோகித் ஷர்மாவும்,ரவீந்திர ஜடேஜாவும் வீடு செல்லத் தயாராகிறார்கள் எனத் தெரிகிறது.
ஆனால் அடுத்து இந்தியாவின் ஏழாம் இலக்கம்?அல்லது சகலதுறை வீரர் யார்?


இறுதிப் போட்டியில் ரோகித்தை எடுத்ததற்குப் பதிலாக சௌரப் திவாரிக்கு ஒரு வாய்ப்பை வழங்கி இருக்கலாம். ஒரு ஐந்து ஓட்டங்களாவது கூட எடுத்திருப்பார்.

இந்த முக்கோணத் தொடர் கிரிக்கெட்டில் தந்த நன்மைகள் எவையுமில்லை.
மற்றுமொரு போட்டி - விளம்பரதாரர்களுக்காக..
இறுதிப் போட்டியில் மைதானத்தை ரசிகர்கள் நிறைத்தாலும் ஏனைய போட்டிகள் பலவற்றில் ரசிகர்கள்(தொலைகாட்சி ரசிகர்களும் கூட) ஈடுபாடு காட்டவில்லை என்பது கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.


இந்தியா அணிக்கு ICC தரப்படுத்தலில் இலங்கையால் நெருக்கடி கொடுக்கப்பட்டதையும் (ஆஸ்திரேலியா -1 ,இந்தியா,இலங்கை,தென் ஆபிரிக்கா சமபுள்ளிகளோடு இருந்தாலும் தசம புள்ளிகளால் இரண்டாம் இடம்) தோனி ஒரு நாள் தரப்படுத்தலில் தன முதல் இடத்தை இழந்ததையும் இத் தொடரின் முக்கிய விளைவுகளாக வேண்டுமானால் கொள்ளலாம்.


இலங்கை அணிக்கு விடைகளையும் இந்தியா அணிக்கும் தேர்வாளருக்கும் கேள்விகளையும் எழுப்பிவிட்டுப் போயுள்ளது இந்த முக்கோணத் தொடர்.

17 comments:

கன்கொன் || Kangon said...

நல்ல அலசல்....

இலங்கைக்கு நிறைய நன்மைகளைக் கொடுத்திருக்கிறது என்று நினைக்கிறேன்...

அதுசரி...
மூன்றாவது நாடா நியூசிலாந்து நியூசிலாந்து எண்டொரு அணி விளையாடிச்சே, அதுக்கு என்ன ஆச்சு? ;-)

நல்ல அலசல் அண்ணா.... :-)

வந்தியத்தேவன் said...

டேய் கங்கோன் பதிவு லோஷனின் ட்ராப்டில் இருக்கும் போதே பின்னூட்டிவிடுகின்றாயா? என்ன வேகம், பதிவை வாசித்துவிட்டு வருகின்றேன்.

ARV Loshan said...

நன்றி பாராட்டுக்கு :)

//அதுசரி...
மூன்றாவது நாடா நியூசிலாந்து நியூசிலாந்து எண்டொரு அணி விளையாடிச்சே, அதுக்கு என்ன ஆச்சு? ;-)//


அட ஆமா இல்ல..
அதைப் பற்றி என்ன சொல்வது?
சொன்னால் பழசாயிடும்..
விரும்பினால் கேன சாரி.. கேன் வில்லியம்சன் அடுத்தடுத்து டக் அவுட் ஆகித் தவழ்ந்ததை சொல்லலாம்.. ;)

கன்கொன் || Kangon said...

// அனுபவம்..
இந்திய தங்கள் முக்கியமான நான்கு வீரர்கள் இன்மையை அதிகமாக உணர்ந்திருக்கும். //

அதுசரி...
இந்த 4 பேரில ஷகீர் கானுமா?
ஷகீர் கான் கடந்த ஒருவருட காலத்தில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 13 போட்டிகளில் பங்குபற்றி 16 விக்கற்றுகளை 38.56 என்ற சராசரியில் 5.63 என்ற economy இல், 41 என்ற strike rate இல் பெற்றிருக்கிறார்.
ஷகீர் கானை விட இசாந் சர்மா குறித்த காலப்பகுதியில் (தரவுகள் படி) நன்றாகப் பந்துவீசியிருக்கிறார்.... ;-)

எனக்குத் தெரிந்து ஷகீர் கான் இன்றி இந்தியா விளையாடப்பழக வேண்டிய காலகட்டம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
ஷகீர்கான் நிறையக்காலம் விளையாடப் போவதில்லை...

Unknown said...

அலசல் அருமை!

//இலங்கை அணிக்கு விடைகளையும் இந்தியா அணிக்கும் தேர்வாளருக்கும் கேள்விகளையும் எழுப்பிவிட்டுப் போயுள்ளது //

இந்திய அணிக்கு மட்டுமல்ல,இலங்கை அணித் தேர்வாளர்களுக்கும் உலகக்கிண்ண அணித்தேர்வு பற்றிய குழப்பத்தையே விட்டுச்சென்றுள்ளது லோஷன் அண்ணா !

மென்டிஸ்'ஆ அல்லது ரண்டிவ்'ஆ?இருவருமா?
இரண்டு சகலதுறை ஆட்டக்காரர் போதுமா அல்லது ஜீவன் மென்டிஸ்'ஐயும் உள்ளே சேர்ப்பதா?
கப்புகெதர'வா அல்லது சமரவீரவா??
டில்ஷானுடன் மகேலவையே தொடர்ந்து களமிறக்குவதா அல்லது தரங்க'வா?

Unknown said...

அன்பிற்கினிய லோஷன் அண்ணா...,

நல்ல அலசல்....

/ /..இந்திய தங்கள் முக்கியமான நான்கு வீரர்கள் இன்மையை அதிகமாக உணர்ந்திருக்கும்../ /

சச்சின் மட்டும்தான்.

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..
அன்புடன்.ச.ரமேஷ்.

KUMS said...

//முக்கியமான விடயம் - இதுவரை தோனியின் தலைமையில் இந்தியா இலங்கையில் வைத்து எந்தவொரு கிண்ணத்தையும் தோற்கவில்லை.
இறுதியாக ஆசியக் கிண்ணத்தையும் எடுத்து சென்றது ஞாபகமிருக்குத் தானே?//


"இது, அவுட்டும் டவுட்டும் - எதிர்வுகூறல்களும் எனது பார்வையும்"

என்ற பதிவில் நீங்கள் கூறியது..
ஆனால் முதல் தடவையாக இலங்கையில் தோணி தலைமையிலான இந்திய அணி கிண்ணத்தை தவற விட்டது.

அடுத்து,
//சாதனை மன்னர் சச்சின் இலங்கையில் வைத்து 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இன்னும் டெஸ்ட் சதத்தை பெறவில்லை.
ஏன் ஒரு அரைச் சதம் கூட இல்லை.
கடந்த பத்து ஆண்டுகளில் இலங்கையில் அவரது டெஸ்ட் சராசரி அண்ணளவாக 15 //

இது, நீங்கள் "இலங்கை இலங்கை + முரளி" என்ற பதிவில் கூறியது..

ஆனால் அந்த தொடரில் சச்சின் இரட்டைச்சதம் அடித்து தூள் கிளப்பியிருந்தார்.

எனவே அடுத்த முறை இலங்கை அணி விளையாடும் போது " இந்த மைதானத்தில் இலங்கை இன்னும் ஒரு கிண்ணம் கூட வெற்றி பெற்றதில்லை," அல்லது "சங்கக்கார தலைமயில் இலங்கை இந்த கிண்ணம் வென்றதில்லை" என்று பதிவிடுங்கள்.இலங்கை அணி நிச்சயமாக வெற்றி பெரும்.. மறந்தும் கூட வேறு எந்த அணிகள் பற்றியும் கூறிவிடாதீர்கள் குறிப்பாக இந்தியா பற்றி.

(நீங்கள், இந்த பின்னூட்டத்தை serious ஆக எடுத்துக்கொண்டு இதற்கு பல பந்திகளில் பதிலளித்து விடப்போகிறீர்கள். எனது பின்னோட்டம் முற்றிலும் நகைச்சுவைக்கே.)

Bavan said...

ஆமாம் இலங்கை அணி இப்போது மிகவும் பலமாக உள்ளது. இதுவும் நான் முன்பிருந்து ரசித்த வீரர் சாமர சில்வா, அவர் அணிக்குள் வந்தது மட்டுமல்லாமல் பிரகாசித்தது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

இந்திய அணியில் இன்னும் ஏன் நெஹ்ரா இருக்கிறார்? #சந்தேகம்

உங்கள் ஆரூடம் பலிக்க ஆரம்பித்த முதல் போட்டி இந்த இறுதிப்போட்டி..ஹிஹி

நல்ல அலசல் அண்ணா..;)

Bavan said...

//மென்டிஸ்'ஆ அல்லது ரண்டிவ்'ஆ?இருவருமா?//

ஆங் மென்டிஸ் பந்து வீச்சாளர் மட்டும், ஆனால் ரன்டிவ் சகலதுறை வீரர். திறமையான பீல்டரும் கூட. எனவே ரன்டிவுக்குத்தான் இடம்.

//இரண்டு சகலதுறை ஆட்டக்காரர் போதுமா அல்லது ஜீவன் மென்டிஸ்'ஐயும் உள்ளே சேர்ப்பதா?//

ரன்டிவ், திஸார பெரேரா,மத்தியூஸ் மொத்தம் மூன்று சகலதுறை ஏற்கனவே..;)

கன்கொன் || Kangon said...

நெஹ்ராவைப் பற்றி அவதூறு தெரிவித்த பவனுக்கு அகில இலங்கை நெஹ்ரா இரசிகர் மன்றத்தின் கொழும்புக்கிளை சார்பாகக் கண்டனங்கள்.

கடந்த 12 மாதங்களாக இந்தியாவின் சிறந்த ஒருநாள் பந்துவீச்சாளர் நெஹ்ரா தான்.
31 போட்டிகளில் 46 விக்கற்றுகள்.
சராசரி 30.97, strike rate 31.7.

இரண்டாமிடத்திலுள்ள ஹர்பஜன் சிங்கை விட இது பெரியவில் முன்னேற்றமானது.
ஹர்பஜன்: 23 போட்டிகள் - 32 விக்கற்றுகள் - சராசரி -31.40 - strike rate -39.5.

யோ வொய்ஸ் (யோகா) said...

NICE ANALYSIS...

I'LL COMMENT LATER

Unknown said...

//இரண்டு சகலதுறை ஆட்டக்காரர் போதுமா அல்லது ஜீவன் மென்டிஸ்'ஐயும் உள்ளே சேர்ப்பதா?//

ரன்டிவ், திஸார பெரேரா,மத்தியூஸ் மொத்தம் மூன்று சகலதுறை ஏற்கனவே..;//

ஆனால் ரந்திவ் ஒரு நாள் போட்டிகளில் இன்னும் துடுப்பாட்டத்தில் பெரிதாக சாதிக்கவில்லையே!ஜீவன் மென்டிஸ்,திஸ்ஸர பெரேரா போன்றோர் மீது கொண்டுள்ள துடுப்பாட்ட நம்பிக்கையை ரந்திவ் மேல் வைக்க முடியவில்லை பவன்!

Anonymous said...

Why no post for asia cup final, where india won.you have no neutral views.

Unknown said...

அண்ணன்..
2011 உலகக்கோப்பையோடு சச்சின் கழண்டதும் இந்தியா udrs க்கு ஒப்புக்கொள்ள வாய்ப்புகள் இருக்கின்றது. என்ன இந்தியாவில் எல்லோருக்கும் referral இருந்தாத்தான் ஒப்புக்கொள்ளுவாங்கள் போல கிடக்கு. இரண்டு referral யானைப் பசிக்கு சோழப்பொரியாக்கும்.

Unknown said...

யோவ் காங்கோன்.... நீர் ஆரும் broadcasters ஐ தேடி statistician ஆக வேலை செய்யய்யா. உனக்கு புண்ணியமாப் போகும். :D

anuthinan said...

நல்ல அலசல் லோஷன் அண்ணா!!

//இருந்துபாருங்கள் உலகக் கிண்ணத்தில் இம்முறை தாக்கம் செலுத்தப் போகும் ஒரு முக்கிய காரணி இந்த ஏழாம் இலக்கத் துடுப்பாட்டம்.//

பார்ப்போம்!!!

//ஆனால் டில்ஷான் ஒரு நாள் போட்டிகளில் இதற்கு முன் ஏழு சதங்களைப் பெற்றிருந்தாலும் அவர் இலங்கையில் பெற்ற முதல் சதம் இது.
இப்போது என்ன சொல்வார்கள்?//

விடுங்க அண்ணே!!!! எதுவுமே சொல்ல முடியாது என்பது வந்திருக்கும் குறைவான பின்னூட்டங்களை வைத்து தெரிந்து கொள்ள வேண்டியதுதான்

//யுவி ஒன்றும் கில்க்ரிச்டோ,அரவிந்த டீ சில்வாவோ ஏன் குறைந்தபட்சம் சங்கக்காரவோ இல்லையே.
தப்பித்தோம் என்று நின்று விட்டார்.//

இதற்க்கு என்ன சொல்லுவது??

//ஆஸ்திரேலியா இந்தியா வருகையிலும் இதை இந்தியா வேண்டாம் என்று விட்டது.//

கழுதைக்கு எப்போதுமே கற்பூர வாசனை தெரியாது என்பது உண்மை போல!!!

//இலங்கை அணியின் சாமர சில்வாவும் தனக்கான துண்டை விரித்து அணிக்குள் இடத்தை உறுதிப் படுத்திக் கொண்டார்.//

இவரது வரவு எனக்கும் மகிழ்ச்சியை தந்து இருக்கிறது. தன்னை நிருபிக்க கடுமையாக போராட வேண்டி இருக்கும் என்று நினைக்கிறேன்

//இறுதிப் போட்டியில் மைதானத்தை ரசிகர்கள் நிறைத்தாலும் ஏனைய போட்டிகள் பலவற்றில் ரசிகர்கள்(தொலைகாட்சி ரசிகர்களும் கூட) ஈடுபாடு காட்டவில்லை என்பது கிரிக்கெட்டுக்கு ஆரோக்கியமானதல்ல.//

உண்மைதான் அண்ணா! இறுதி போட்டியை நேரில் பார்த்தவன் என்ற முறையில் சொல்லுகிறேன். இறுதி போட்டி போல் வேறு போட்டிகள் அமையாதது குறையே !!!

Mohamed Faaique said...

சூப்பர் அண்ணா.... கிரிக்கெட் பதிவு நீங்க எழுதினா மாத்திரம் ஒரு சுவாரசியம் இருக்கு அண்ணா....

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner