ஏமாளிகள் நாங்களா?

ARV Loshan
3 minute read
43
நேற்றைய நாளில் இரவு கொஞ்சம் தாமதமாகத் தான் இணையம் மேய நேரம் கிடைத்தது.
இரண்டு விளையாட்டு செய்திகள் மனத்தைக் கொஞ்சம் சலனப்படுத்தி இருந்தன.

அண்மைக்காலத்தில் மிக ரசித்த இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் கிரிக்கெட் சூதாட்டக்காரர் ஒருவருடன் நெருங்கிய தொடரோபுடைய பெண் ஒருத்திக்கும் இடையில் இருப்பதாக சந்தேகிக்கப்படும் உறவு பற்றிய செய்தி.

பொது நலவாயப் போட்டிகளில் இலங்கைக்குக் குத்துச் சண்டைப் போட்டியில் தங்கம் வென்று தந்த மஞ்சு வன்னியாராச்சி ஊக்க மருந்து உட்கொண்டதாக வெளியான தகவல்.

இவற்றுள் ரெய்னா பற்றிய செய்தி தந்த தாக்கம் அதிகம்.
ரெய்னா இந்திய அணியில் இணைந்துகொண்ட காலம் முதலே ஒரு திறமையான,தேவையற்ற சர்ச்சையில் சிக்காத,துடிப்பான வீரர் என்று எனக்கு மிகப்பிடித்திருந்தது.
எதிர்கால இந்தியாவின் தலைவர் என்று மனசுக்குள் நினைத்து வைத்திருந்தேன்.

ஆனால் வயசுக் கோளாறு போல இருக்கு.

அகப்பட்டுள்ள ஹோட்டல் உள்ளக வீடியோ கமெராவின் பதிவுகளில் சுரேஷ் ரெய்னாவோடு தொடர்ச்சியாக திரிகிற/காணப்படுகிற/பழகிற அழகிய இளம் பெண், ஒரு பிரபல கிரிக்கெட் சூதாடியின் நெருங்கிய சகபாடி எனக் கூறப்படுகிறது.

சரி தெரியாமல் தான் அந்தப் பெண்ணுடன் ரெய்னா பழகினார் என்று வைத்தாலும், வீரர்கள் தாங்கும் அறைக்கு அடிக்கடி அறியாத பெண்கள் வந்துபோவதை எவ்வளவு தூரம் அணி முகாமைத்துவம் அங்கீகரிக்கிறது?

அடுத்து இந்த விவகாரத்தில் சில கேள்விகள்..

ICCயின் ஊழல் ஒழிப்பு பிரிவுக்கு அறிவிக்காமல் ஸ்ரீலங்கா கிரிக்கெட் முதலில் இந்த வீடியோப் பதிவை இந்தியாவின் BCCIக்கு அனுப்பியுள்ளது ஏன்?
அடுத்து BCCIஇன் செயலாளர் ஸ்ரீனிவாசன் (இவர் தான் ரெய்னா விளையாடும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் உரிமையாளர் என்பதும் முக்கிய விடயம்) இந்த விடயத்தைத் தக்கபடி விசாரிக்காமல்/வெளிப்படுத்தாமல் SLC(ஸ்ரீலங்கா கிரிக்கெட்)இடம் இந்த விடயத்தைப் பெரிது படுத்தாமல் விடுமாறு கூறியது ஏன்?

அதற்குப் பிறகு இது ஒரு பெரிய விஷயமே இல்லை என்பது போல ஒரு அறிக்கை இடமிருந்து..
லண்டன் பத்திரிகையொன்று வெளியிட்ட இந்த செய்து முற்று முழுதாகத் தவறென்றும் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அப்படியொரு தகவலைத் தமக்கு அளிக்கவே இல்லையென்றும் ஆனால் ரெய்னாவோடு இருந்த அந்தப் பெண் ரெய்னாவின் முகவர் என்றும் சொல்லியுள்ளது.
அத்துடன் இலங்கை வீரர்கள் சிலருக்கும் அவர் முகவராம்.
ரெய்னாவிடம் சில ஒப்பந்தப் பத்திரங்களில் கையெழுத்து வாங்கவே சில இரவுகளில் ரெய்னாவை சந்தித்தாராம்.

இப்படியான வீரர்களின் தனிப்பட்ட முகவர்களால் தான் அண்மைக் காலத்தில் சூதாட்டங்கள் இடம்பெற்றதாக தெரிவித்திருந்ததும் பாகிஸ்தான் வீரர்கள் மூவருடன் சம்பந்தப்பட்ட மசார் என்ற சந்தேக நபரையும் 'முகவர்' என்றே பாகிஸ்தானிய வீரர்கள் கூறியது ஞாபகம் வருகிறது.

பாகிஸ்தான் வீரர்களின் விடயம் வெளிவந்தபோது பரபர செய்திகளை வெளியிட்ட Cricinfo தளம்,
 இது பற்றி ஒரு செய்தி கூட நேற்று தரவில்லை.

BCCIயின் அளவுகடந்த/வரம்பு மீறிய அதிகாரத்துக்கு இன்னொரு நல்ல உதாரணம் தென் ஆபிரிக்காவின் பலம் வாய்ந்த கிரிக்கெட் சபைத் தலைவர் மயோலாவின் சரணாகதி.

இந்தியாவுக்கெதிரான தென் ஆபிரிக்கத் தொடரின்போது UDRSஐப் பயன்படுத்த இந்தியா விரும்பாவிட்டால் தாங்கள் இந்தியாவுடன் ஒத்துப் போவதாகப் பரிதாபமாக சொல்கிறார் மயோலா.
தென் ஆபிரிக்க வீரர்களுக்கு UDRS பயன்படுத்தி தீர்ப்புக்களை செம்மையாகப் பெறும் ஆசை இருந்தாலும் இந்தியா இதை விரும்பாவிட்டால் என்ன செய்வது என்று கேட்கிறார் மயோலா.

ஆனால் ICCஇன் தகவலின் படி, போட்டிகளை நடத்தும் நாடு இது பற்றிய முடிவை எடுக்கலாம் என்று சொல்கிறது. ஆனால் சுற்றுலா வரும் நாட்டுடன் கலந்துபேசி முடிவெடுப்பதே கனவான் ஆட்டத்தின் கண்ணியம் என்பதால் இலங்கை போலவே தென் ஆபிரிக்காவும் கப் சிப்.

எதிர்பாராத ஒருவர் பற்றிய பரபர வந்து ஓய்வதற்கிடையில் பந்தயக்காரர்கள்,சூதாட்ட சர்ச்சைகளையும் அணி முரண்பாடுகளையும் தத்தெடுத்த நாட்டிலிருந்து மீண்டும் ஒரு புயல்.

பழைய குப்பைகளைக் கிளறி மீண்டும் புதிய நாற்றத்தை அனுப்புகிறார்கள்.

பாகிஸ்தானிய கிரிக்கெட் சபையின் முன்னாள் தலைவர் டாக்கிர் சியா மீண்டும் சந்தேகத்துக்குரிய சிட்னி டெஸ்ட் போட்டி பற்றிய விவகாரத்தைக் கிளறி இருக்கிறார்.
அந்தப் போட்டி முடிவை மாற்ற/மாற்றியதில் ஆறு பாகிஸ்தானிய வீரர்களை சந்தேகிப்பதாக அப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் சபைக்குக் கடிதம் அனுப்பியதாக இப்போது சொல்கிறார் இவர்.

அத்துடன் 2002 ஆம் ஆண்டு காலகட்டத்தில் அப்போது குற்றம் சாட்டுக் களங்கப்பட்டிருந்த  ஒரு பிரபல வீரரை அணியில் எடுக்குமாறு தனக்குப் பலவிதமான அழுத்தங்கள் தரப்பட்டதாகவும் இப்போது மனம் திறந்திருக்கிறார் இவர்.

தாகிர் சியா சொல்லி இருக்கும் அந்த முன்னாள் பிரபல வீரர் பாகிஸ்தானின் முன்னாள் தலைவர் சலீம் மலிக்கைப் பற்றித் தான் என்று சின்னக் குழந்தைக்கும் கூடத் தெரியுமே.

பத்து ஆண்டுகளாகத் தடைக்கு உள்ளாகி இருக்கும் சலீம் மலிக்கும் இன்று தன பங்குக்கு பொங்கி வெடித்துள்ளார்.
தன்னைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்து கிரிக்கெட்டிலிருந்து ஆயுட்காலத் தடை விதித்தபோது சந்தேகத்துக்குரியவர்களாகக் கருதப்பட்ட பலர் தப்பித்திருப்பதாகவும் தான் மட்டுமே பலிக்கடா ஆக்கப்பட்டதாகவும் குமுறியுள்ளார் மலிக்.

அவர் மூவரைப் பெயரிட்டுள்ளார்..
பாகிஸ்தானின் தற்போதைய பயிற்றுவிப்பாளர் வக்கார் யூனுஸ், இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சுப் பயிற்றுவிப்பாளராக இருக்கும் முஷ்டாக் அஹமத், தற்போது உள்ளூர் நடுவராக இருக்கும் அகரம் ரேசா ஆகியோரைப் பார்க்கையில் தனக்குக் கோபம் வருவதாக சொல்கிறார் மலிக்.

உண்மையில் அந்தக் காலகட்டத்தில் சலீம் மாலிக்கின் தலைமையில் பாகிஸ்தானின் பல வீரர்கள் சந்தேகிக்கப்பட்டார்கள். அடா உர் ரஹ்மான் ஆயுட்காலத் தடைக்குள்ளானார்.
ஆனால் பெரிய தலைகள் தப்பிக் கொண்டன என்று பேசப்பட்டன.
இவர்கள் மட்டுமில்லாமல், வசீம் அக்ரம்,ரஷீத் லடிப்,மொயின் கான்,அகீப் ஜாவேத் இன்னும் பலரின் தலைகளும் உருண்டன.

ஆனால் அந்த விசாரணைகளும் பாகிஸ்தானில் இப்போது நடப்பது போல என்ன நடந்தது என்று தெரியாமலே மறக்கப்பட்டு விட்டன.

இந்திய அணி வீரர்களின் ஒற்றுமையோ என்னவோ அசாருதீன் விவகாரத்தில் வேறு யாரின் பெயர்களும் பெரிதாக வெளியே வரவில்லை..
(ஜடேஜா மட்டுமில்லாமல், நயன் மோங்கியா,மனோஜ் பிரபாகர் மீதும் சந்தேகம் இருந்தபோதும்)

அர்ஜுன ரணதுங்க காலத்தில் இலங்கை அணியும் சில போட்டிகளை வேண்டுமென்றே விட்டுக் கொடுத்தது என்று பேச்சு இருந்தது. அர்ஜுன=அரவிந்த இணைந்து அணியைக் கொண்டு சென்றதால் இருவர் மீதும் சந்தேகம் இருந்தாலும் இங்கும் இறுக்கமாக இருந்த அணி ஒற்றுமை தான் விஷயங்களை வெளிவிடாமல் செய்ததோ????

ஆனால் பாகிஸ்தானுக்குள்ளே இருக்கும் உள்ளகக் குளறுபடிகளும் ஒருவரை ஒருவர் காலை வாரிவிடும் குணமும் இன்னும் பல விஷயங்களை வெளியே கொண்டுவரும் என்று எண்ணத் தோன்றுகிறது.

குற்றம் நிரூபிக்கப்படும் வரை நாம் எல்லோரும் நல்லவர்களே என்று நம்பியிருக்க வேண்டியது தான்..

இந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட்டிலும் எல்லோரையும் சந்தேகத்துடனேயே நோக்க வேண்டி இருக்கிறதே..


இன்னும் எத்தனை இடிகளைத் தாங்கிக்கொள்ள கிரிக்கெட் தயாராக வேண்டுமோ?

Post a Comment

43Comments

Please Select Embedded Mode To show the Comment System.*