November 02, 2010

ஹர்ஷுக் குட்டி - என்(ம்) செல்லம்





நேற்று என் செல்ல மகன் ஹர்ஷஹாசனின் மூன்றாவது பிறந்த நாள்.


இந்த ஒரு வருடத்தில் அவனில் எத்தனை எத்தனை மாற்றங்கள்!!
 அழகான மாற்றங்கள்;
ஆச்சரியமான மாற்றங்கள்;
ரசிக்கக்கூடிய மாற்றங்கள்.




இவை பற்றிய பதிவொன்று இட வேண்டும் என மனைவியிடம் சொன்னபோது,நாவூறு/திருஷ்டி பட்டுவிடும் என்று அவர் வேண்டாம் என்றுவிட்டார்.
ஆனால் நான் இந்தப் பதிவு ஹர்ஷுவைப் பற்றி இட்டே ஆகுவேன் என்று உறுதிபட முடிவெடுத்தமைக்கு இரு காரணங்கள்..


1.எனக்கு இந்த நாவூறு/கண் திருஷ்டி மீது நம்பிக்கையின்மை
2.அவனுக்கு இப்போது இந்தப் பதிவு பற்றி எதுவும் தெரியாவிடினும்,ஒரு பதினைந்து ஆண்டுகளுக்குப் பின்னர் அவன் இதை வாசிக்கும்போது,அவனது வளர்ச்சியை நான் எவ்வளவு ரசித்துள்ளேன் என்பதை அறிந்து புளகாங்கிதம் அடைவான். அவனுக்கு அவன் பற்றிய எனது காலப் பதிவாக இருக்கும்.




கடந்த பிறந்த நாளிலிருந்து நேற்று வரையிலான ஒரு வருட காலத்தில் ஹர்ஷுவில் எத்தனை எத்தனை தெளிவான,மகிழ்ச்சியான மாற்றங்கள்..(ஒரு மனிதனின்/குழந்தையின் வளர்ச்சியில் இவை நடந்தேயாகவேண்டும் என இருந்தாலும்,எனக்கு அது தெரிந்தாலும், என் கண் முன்னே என் மகன் நான் பார்க்க வளர்ந்துகொண்டிருக்கிறான் என்பது ஒரு பூரிப்பான ஆச்சரியம்.


நிறையப் பேசுகிறான்..
ஓயாமல் பேசுகிறான்..
தெளிவாகப் பேசுகிறான்..
நிறையக் கேள்விகள் கேட்கிறான்..
(என்ன சொன்னாலும் ஏன்,எங்கே,எப்போது,யார்.. நாமும் பொறுமையுடன் பதில்களை சொல்கிறோம்)


என் மீதும்,அவன் தாயார் மீதும் வைத்துள்ள அன்பு+அக்கறை ஒரு பெரிய பையனுக்குரிய முதிர்ச்சித்தன்மையோடு கூடியதாக இருப்பதாக உணர்கிறேன்.
உதாரணமாக, தாயாருக்கு சமையலில் தனது வயதுக்கேற்ற சிறு உதவிகள் செய்து கொடுப்பது,"அம்மா ஏதாவது ஹெல்ப் வேணுமா?" என்று மழலையில் கேட்பது,"அம்மா ஏன் கோவமா இருக்கிறீங்க?" என்ற கேள்விகள்,தாய்க்கு நான் பேசும்போது என்னைத் தடுத்து "அம்மா பாவம்;பேசாதீங்க"என்று சொல்வது....


"மழை அம்மா.. அப்பா நனைவாரா?"என்ற அக்கறை,வேலையால் நான் வந்ததும் ஆரத் தழுவி வரவேற்றல்,எனக்குத் தேவையான ஆடை தொடக்கம்,பொருட்கள் கொண்டு தருதல்.. இப்படிப் பல..
இவை எவையுமே நாம் சொல்லிக் கொடுத்தவையல்ல.
இந்தக் காலக் குழந்தைகள் தாமாக உணர்ந்து கற்றுக்கொள்பவையும்,சூழலில் இருந்து பார்த்துப் பெற்றுக்கொள்பவையும் அதிகம்.






அவனுக்கு சிறியதாக இருந்த உறவுகளின் வட்டம், அண்மையில் நடந்த என் தம்பியின் திருமணத்தின் பின்னரும்,மலேசிய-சிங்கப்பூர் பயணத்தின் பின்னரும் பெரிதாகி இருக்கிறது.
அத்தனை உறவுகளையும் ஞாபகம் வைத்துப் பெயர் சொல்லி அழைக்கிறான்.
இவர்களில் அவனது சித்தப்பாமாரும்,சின்ன மாமனாரும் நண்பர்கள் போல.. பெயர் சொல்லி அழைப்பது முதல் விளையாட அவர்களை உரிமையோடு உத்தரவிட்டு அழைப்பது என்று ரொம்பவே நெருக்கம்.
தொலைபேசியில் அவர்களுடன் பேசுவதிலும் அலாதி ஆர்வம். அப்பம்மா,அப்பப்பா ஆகியோருடன் தனி உரிமையும் தனியான பாசமும்.எங்கள் இருவரையும்(நான்,மனைவி) அதிக நேரம் அவர்களுடன் இருக்க அவனுக்குப் பிரச்சினையில்லை.
எம்மிடம் கேட்டுக் கிடைக்காத விஷயங்கள் அங்கே கிடைக்கும் என்றும் அவனுக்கு நன்றாகவே தெரியும்.


முன்பெல்லாம் யாருடைய செல்லம் என்று கேட்டால் அப்பப்பாவினுடைய செல்லம் என்றும் சொல்பவன், இப்போ கொஞ்சம் தெளிவாக,சாதுரியமாக என் அம்மாவின் வீட்டில் வைத்து மட்டும் அப்பப்பாவின் செல்லம் என்றும், மற்றும்படி 'அப்பா-அம்மா இருவரின் செல்லம்' என்றும் குறும்பாக சிரித்துக் கொண்டே சொல்கிறான்.


தனக்கான விருப்பத் தெரிவுகளை தெளிவாக சொல்கிறான்..
ஆடைகள்..(கடைகளுக்குப் போனாலும் இந்த நிறம் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்காமல் அன்பாகக் கொஞ்சிக் கெஞ்சி எடுத்துக்கொள்வான்)
நான்.ஏன் மனைவி அணியும் ஆடைகளும் எங்கள் 'பெரியவருக்கு'ப் பிடிக்க வேண்டும் ;)


உணவு..(அவருக்குப் பிடிக்காத உணவு என்றாலும் நாம் கொடுத்தால் உண்பான் எனினும் தனக்குப் பிடித்த உணவுகளைக் கோரிப் பெற்றுக் கொள்வான்.)


செல்ல வேண்டிய இடங்கள்,தொலைகாட்சி அலைவரிசை.. தூங்கும் இடம்..
பிடிவாத குணம் வராதவரை எனக்கு அவனின் தெரிவுகளும்,ரசனையும் பிடித்திருக்கின்றன.மூன்று வயதிலேயே அவன் பக்குவப்படுகின்றான்..


தனக்குப் பிடித்த பாடல்களை நாம் பெரியவர்கள் முணுமுணுப்பதைப் போல தனியாக முணுமுணுப்பது எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்+பரவசம்.
நான் மகான் அல்ல,பானா காத்தாடி,இந்திரன்,சிங்கம் பாடல்கள் அவரது favorites .


வானொலி,தொலைக்காட்சியில் ஏதாவது ஒரு பாடலின் ஆரம்ப இசை ஒரு சில செக்கன்கள் ஒலிக்கின்றபோதே பாடல் என்னவென்று சொல்லிவிடுவான்.. பாடல் ஒன்றை சொன்னால் படப் பெயர்கள் சொல்கிறான்.
அப்பா வழியில் மகன் என்று வீட்டில் உள்ளவர்கள் சொல்கிறார்கள்..(ராசா நீயுமா ஊடகத்தில் வந்து தூக்கம் தொலைக்கப் போகிறாய்?)


சினிமா என்று மட்டுமில்லாமல்,பொருட்கள்,நிறுவனங்களின் brandsஐயும் இலகுவாக இனம் கண்டுகொள்ளும் ஆற்றல் கண்டு வியக்கிறோம்..
வீதியில் பயணிக்கும்போது விளம்பரப் பலகைகள் பார்த்து சரியாக என்னவென்று சொல்வது ஹர்ஷுவின் பொழுதுபோக்கு.




வர்ணங்கள்,இலக்கங்கள்,எழுத்துக்கள்(குறிப்பாக ஆங்கிலம்) அடையாளம் காண்பதிலும்,அவற்றை வாசிப்பதிலும் தானாக அவனுக்கு வந்த ஆர்வம் எங்களுக்கு நிம்மதி.நாம் கஷ்டப்படுத்தி அவனைக் கற்பித்தலில் இறக்கக் கூடாது என்பதில் எம் குடும்பத்தவர் அத்தனைபேருமே மிக உறுதியாக இருக்கிறோம்.
தமிழ் எழுத்துக்களின் நெளிவு சுளிவுகள் அவனை இப்போதைக்கு ஆங்கிலப் பக்கமே இருக்கவைத்தாலும் எம் சூழலில் பழகிவிடுவான்.


இலகுவாக சொற்களைப் பிடித்துக்கொள்கிறான்.ஆங்கிலம்,தமிழ் மட்டுமல்ல, கடைகள் சென்றால் சிங்களமும் தான்.. இதனால் இவன் இருக்கும் இடத்தில் நாம் வார்த்தைகளை மிகப் பக்குவமாகப் பயன்படுத்தவேண்டி இருக்கிறது.






ப்ளீஸ் என்ற வார்த்தையை இவன் கெஞ்சலோடு சொல்லும்போது எதையும் இலேசில் மறுக்க முடியாது.
கண்டிப்பாக,உன்னை/உங்களை சும்மா விட மாட்டேன்,பயமா இருக்கு (இருள்,கரப்பான் தவிர வேறு எதற்கும் இவன் பயப்படுவதில்லை),எனக்கா,மீண்டும் சந்திப்போம்(எனது வானொலித் தாக்கம்??),பேச வேண்டாம், உடம்பு சரியில்லை,தப்பிட்டேன்,அப்பிடி சொல்லாதேங்கோ,பரவாயில்லை போன்றவை எங்கள் தங்கத்தின் Trade mark வார்த்தைகள்.




கதை கேட்பதில் அலாதி விருப்பம்.ஆனால் நவீன தலைமுறைக் குழந்தைகள் எல்லோரையும் போலவே,பாட்டி வடை சுட்ட கதை,நரி-திராட்சை கதையெல்லாம் பிடிக்காமல்,நவீன நடைமுறைக்கேற்ற கதைகளைக் கேட்கிறான்.
 கதையில் டொல்பின்,முன் வீட்டு பப்பி,சிங்கப்பூர் சென்று வந்த பிறகு Merlionஎல்லாம் வரவேண்டும்.
(சிங்கையின் சின்னம் Merlion எமது செந்தோசா விஜயத்தின் பின் இவன் மனதில் நீங்காத இடம்பிடித்துவிட்டது.


அங்கே வாங்கிய Merlion நினைவுச் சின்னங்களை மிகப் பத்திரமாக நேசித்து வைத்திருக்கிறான்.)


கம்பியூட்டர், ரோபோ,கார்கள்,விமானங்கள் எல்லாம் வரவேண்டுமாம்.
அவனுக்கேற்ற மாதிரியாக கதைகளை நாமே உருவாக்கி சொல்ல ஆரம்பித்தால் அதற்குள் ஆயிரம் கேள்விகள் கேட்டு மெகா சீரியல் மாதிரி ஆக்கிவிடுவான்.
ஒரு நாள் ஒரு முயல்-நாய் கதை ஆரம்பித்த நேரம் இரவு 11 .முடித்த நேரம் அதிகாலை இரண்டு மணி.


இன்னொரு நாள் அதிகாலை மூன்று மணி போல தூக்கத்தின் நடுவே விழித்தவன் கதை சொல்லுமாறு கேட்டான்..
சரி இவனுக்குப் பிடித்ததாக முயல் கதையை தூக்கக் கலக்கத்துடன் சொல்ல ஆரம்பித்தேன்.
ஏதோ உளறி முயல் ஒரேஞ் சாப்பிடுவதாகக் கதையில் சொல்லிவிட்டேன்.
அந்த நேரத்திலும் கவனம் சிதறாமல் "அப்பா, ரபிட் கரட் தான் சாப்பிடும்.." என்று அசரவைத்தான்.


தான் பிறந்த கதை,சிறு குழந்தையாக நாம் வளர்த்த கதை கேட்பதில் அதிக விருப்பம்.அதற்கிடையில் தன்னை 'ஹர்ஷுக் குட்டி' என்று தானே சொல்லிக் கொள்வான்.




ஹர்ஷுவில் நான் அவதானித்துப் பெருமைப் பட்ட விஷயங்களில் ஒன்று உண்மையே பேசுவது.
ஏதாவது பொருளை உடைத்தாலோ,தண்ணீர்,பால் போன்றவற்றைத் தவறுதலாக உடைத்தாலோ கேட்டவுடனே தான் தான் செய்தது என்று சொல்லிவிடுவான்.
நான் தாயாருக்காக சமாளித்து அதை ஒரு பூனைக்குட்டி தான் செய்தது என்று வேடிக்கையாக சொன்னாலும் ஹர்ஷு தான் பூனைக்குட்டி என்று சொல்லிவிடும் அப்பாவித்தனம் குழந்தைக்கே ஆனது.
வளரும் போதும் இப்படியே இருக்கவேண்டும்.


ஏதாவது நிலத்தில் தன்னால் சிந்தப்பட்டாலோ,உடைத்தாலோ தானே சுத்தப்படுத்த வேண்டும் என்று நிற்பான்.
தாய் பாவம் என்று அவன் மனதில் ஆழமாய்ப் பதிந்துள்ளது.
"அம்மா நான் மொப் பண்றேன்" என்று மழலையில் சொல்லி கிடைக்கும் துணி,டிஷ்யுவினால் சுத்தம்செய்து "ஓகேயா அம்மா?" என்று கேட்டு நிற்கையில் எங்களுக்குக் கண்கள் பனித்துவிடும்.






 இடது கைப் பழக்கவழக்கம். இதை நாம் எப்போது மாற்ற முயற்சிக்கப் போவதுமில்லை.
எழுதுவது,உண்பது,விளையாடப் பயன்படுத்துவது மட்டுமன்றி,கை கொடுக்கவும் இடது கையையே நீட்டுவான்.
கை கொடுப்பதை மட்டும் சொல்லி,மாறி இருக்கிறான்.


காலிலும் அவனது இடது காலே முந்துவதாக உள்ளது.
படி ஏறுகையில்,பந்தை உதைக்கையில் இப்படி...


கால்பந்து விளையாடுவதிலும்,கார்கள் வைத்து விளையாடுவதிலும் மட்டுமல்லாமல் இப்போது நீந்துவதிலும் தனி விருப்பம்.
"ஸ்விம்மிங் போவமா?" இப்போது எம் வீட்டில் அடிக்கடி கேட்கும் வாசகம்.


சில இடங்கள் வாரத்தில் ஒரு நாள் போயே ஆகவேண்டும்..நீச்சல் குளம்,சூப்பர் மார்க்கெட்,துணிக்கடை,அப்பம்மா வீடு(என் அம்மா வீடு),Majestic City, Pizza Hut, KFC,McDonalds.. Galle Face..etc.






நான் செய்வது போலவே சில வேலைகளை இமிடேட் செய்வது சுவாரஸ்யம்.
குறிப்பாக கணினியில் தட்டச்சு அடிப்பது.
ஹர்ஷுவுக்கு என் தம்பி செந்தூரன் கொண்டுவந்து கொடுத்த குழந்தைகளுக்கான lap topஇல் என்னைப் போலவே தானும் தட்டிக் கொண்டு வேலை செய்வதாக பந்தாவாக சொல்வான்.


நான் இரவில் அடுத்த நாளுக்கான வேலைகள்,மின்னஞ்சல்,வலைப்பதிவு,கும்மி,விளையாட்டுத் தகவல் தேடல் என்று செய்துமுடித்துத் தாமதமாகவே தூங்க செல்வதால் Good nightசொல்லி முத்தமிட்டுத் தான் தூங்க செல்வான்.
முன்பெல்லாம் இரு கன்னத்திலும் முத்தமிடுபவன்,இப்போது நான் அவனுக்கு அலுவலகம் அல்லது வெளியே செல்லும்முன் கொடுப்பது போல நெற்றியிலும் ஆசையாக முத்தமிடுகிறான்.


எங்கள் வீட்டிற்கு வேலைகள் செய்ய வரும் வயதான பெண்மணி மீது இரக்கம் கலந்த பாசம்.அவரைக் கண்டால் குசலம் விசாரிப்பதும் பெயர் சொல்லி நண்பி போல அழைப்பதும் அவருக்கு உணவு கொடுக்க சொல்லி என் மனைவியை நச்சரிப்பதும் ரசிக்கக் கூடிய சில விஷயங்கள்.






தனக்கான உணவுகள்,கார்ட்டூன்கள் போன்றவற்றில் காட்டும் ரசனைகள் வளர வளர மாறினாலும்,(முன்பு Dora,Bumba- இப்போது Winnie the Pooh, Casper, Pop eye,Tom and Jerry, Jackie Chan ) ரசனையில் ஒரு தனித்தன்மை தெரிகிறது.


வருகின்ற ஜனவரியில் தனது ஆரம்ப முன் பள்ளி வாழ்க்கையை ஆரம்பிக்கும்போழுதில் அவன் ரொம்பவே ரசிக்கிற தூக்கத்தின் சுகமான பொழுதுகளையும்,எங்கள் வீட்டிலும் அவன் அப்பம்மா வீட்டிலும் கழிக்கும் இன்பமான நேரங்களையும் இழக்கப் போகிறான் என்பது மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கிறது.


ஆனால் அந்த முன்பள்ளியில் இவனை அனுமதிக்கும் நேர்முகப் பாரீட்சைக்கு அழைத்துச் சென்ற போது அங்கே அவன் அடைந்த மகிழ்ச்சியும் உற்சாகமும் எங்களுக்கு சந்தோஷமான அதிர்ச்சி.
தன் வயதொத்த சிறார்களைப் பார்த்து என்று அவர்களுடனே தன்னை விட்டுச் செல்லக் கெஞ்சுகிறான்.


இப்போதும் ஒவ்வொருன் நாளும் எப்போது தான் பாடசாலை செல்லப்போகிறேன் என்று கேட்பதும் அதற்கான ஆயத்தங்களை செய்வதுமாக மிக்க எதிர்பார்ப்புடன் இருக்கிறான் என்பது மிகவும் மகிழ்ச்சி.


வருவோர்,சந்திப்போர் அனைவரிடமும் தனது முன் பள்ளிப் பெயரை சொல்லி சொல்லிப் பெருமை கொள்வதைப் பார்க்கையில் அட எங்களுக்குப் பிரச்சினை இல்லையே என நிம்மதி வருகிறது.
நேற்று அவனது பிறந்த நாள் கொண்டாட்டம் வீட்டில் சிறியளவில் நாம் இரவு விருந்துடன் கொண்டாடிய நேரம் அவன் அடைந்த உற்சாகம்.. அப்பப்பா..
அதற்கான ஆயத்தங்களை நாம் திட்டமிட்டபோது தானும் ஒரு பெரியவராக வந்து கலந்துகொள்வார்.


தனக்குப் பிறந்தநாள் என்பதும்,இது மூன்றாவது என்பதும்,தனக்குப் பிடித்தவர்கள் வருவார்கள் என்பதும்,பரிசுகள் கிடைக்கும் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரிந்திருந்தன.
ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து ரசித்ததை நாம் ரசித்தோம்.


கிடைத்த பரிசுகளில் ஹர்ஷு மிக ரசித்தது அவனது அப்பம்மா+அப்பப்பா வாங்கிக் கொடுத்த படிக்கும் மேசை+சுழலும் நாற்காலி.
மூன்று வயதுக் கள்ளன் ஏதோ முதுமானிப் பரீட்சைக்குப் படிப்பது போல அதில் அமர்ந்து தன் குட்டிப் புத்தகங்களைப் பெருமையுடன் வாசித்துக் கொண்டிருந்த இன்றைய காட்சிகள் ரசனை.






எனக்கு இதுவரை காலமும் பதிவேற்றியவற்றுள் மிக ரசித்துப் பதிவேற்றும் இப்பதிவு என் ஹர்ஷுவுக்கான இன்னொரு பரிசாகட்டும்..
இதை இன்று எப்படியாவது பதிவேற்றிவிட வேண்டும் என்று தட்டச்சிக் கொண்டிருக்க,என்னிடம் "அப்பா" என்று மழலையுடன் கொஞ்ச வந்தவனைப் பார்த்து, "டேய் செல்லக் கள்ளா உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன்" என்று அவனைப் பார்த்து சொன்னது ஏதோ விளங்கியது மாதிரி "எனக்கா? என்ன?" என்று வழமையான கேள்விகளை ஆரம்பித்து விட்டு, தனக்குப் பிடித்த இரவு உடையுடன்(பிஜாமா) Good night சொல்லி அன்புடன் ஈரமுத்தம் தந்துவிட்டுப் போகிறான் என் ஹர்ஷுக் குட்டி.

48 comments:

Bobby said...

Happy Birthday Loshan Jr.

Loshan,

Probably you've already read this; but in case if you haven't.

Abraham Lincoln's letter to his son's teacher:

http://nyceducator.com/2005/12/abraham-lincolns-letter-to-his-sons.html


Cheers,
Bobby

யோ வொய்ஸ் (யோகா) said...

ஹர்ஷுக் குட்டியை பற்றி எழுதுகையில், உங்களிடம் இதுவரை நான் காணாத தந்தைக்கே உரிய கரிசனம், மகன் மேல் காட்டும் பாசம் என்பன எழுத்தில் தெரிகின்றன.

ரசித்து ரசித்து அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் லோஷன்

Vijayakanth said...

anna ungaluku nambikai illatiyum neenga suththi poda than wenum enenda neenga harshuwai pathi eludiyathai wasikumpodu awanoda kannaththai killonum polawe iruku.
Innum 15 warusham inda blog entha errorum illama irukanum nu pray panren.
Ungaloda inda pathivai harshu wasikumpodu nan potirukum commentaiyum wasipar thane so harshuwuku belated b'day wishes :)

ம.தி.சுதா said...

அண்ணா தங்களைப் போல் தங்கள் மகனும் வாழ்வில் நல்ல நிலை ஒன்றுக்கு வர என் வாழ்த்துக்கள்...

ஃஃஃஃஃநான் அவதானித்துப் பெருமைப் பட்ட விஷயங்களில் ஒன்று உண்மையே பேசுவது.ஃஃஃஃஃ

சிறுவயதிலெயே இந்தப் பழக்கம் இருப்பது மிக முக்கியம்... பின்னர் அவன் வாழ்வில் அடிபடுகையில் தானே உணர்வான் எப்போ உண்மை சொல்லணும் எப்போ பொய் சொல்லணும் என்று....
ஆனால் ஒன்று தங்களைப் போல் வெளிப்படையாகக் கதைக்கும் பழக்கத்தை மட்டும் பழக்க வேண்டாம்... அது நல்லதாக தெரிந்தாலும் சமூகத்தில் அப்படியானவருக்கத் தான் சில ????? வைத்திருக்கிறார்கள்...

Unknown said...

:))

Philosophy Prabhakaran said...

அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு... உங்கள் புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி... லோஷன் என்றால் ஏதோ கல்லூரியில் படிக்கும் பதின்ம வயது பதிவர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்...

வந்தியத்தேவன் said...

அப்பேன்டா

நல்லதொரு தந்தையின் சந்தோஷங்களை இந்தப் பதிவில் காண்கின்றேன். இன்றைய குழந்தைகள் 64 அடி பாய்கின்றார்கள். நாவூற்றில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரு சுத்திப்போடுங்கள்(ஹர்சுவுக்குத் தான் உங்களுக்கில்லை).

கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லவேண்டும் அவர்கள் தான் பிற்காலத்தில் நல்ல அறிவாளிகளாக வருவார்கள் என என் அம்மா அடிக்கடி சொல்வார்.

சூழலும் முக்கியம், இதனை நான் அனுபவரீதியாக பல தடவை உணர்ந்துள்ளேண், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கொழும்பில் வசிக்கும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம், இதேவே இங்கிலாந்தில் என்றால் நிறைய பெரியமனிதத் தன்மையுடனான பச்சிளம் பாலகர்களைக் காணலாம்.

நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த குறும்புகள், குழப்படிகள் கதைகளைச் சொன்னாலே ஒரு வருடத்திற்கான கதை கிடைக்கும், இடையிடையே காவடி, கரகம் சூப்பர் மேன் என போட்டால் நவீன கதை,.

//அப்பம்மா வீடு(என் அம்மா வீடு)//

அண்ணே இந்த இடத்தில் தான் எனக்கு ஒரு சந்தேகம், திமு முன்னர் அது உங்கள் வீடுதானே, இப்ப ஏன் அம்மா வீடு என்ற அடைமொழி.

வந்தியத்தேவன் said...

பொபியின் ஆபிரகாம் லிங்கனின் கடிதம் என் அம்மா எனக்கும் அடிக்கடி வாசிக்கத் தருகின்றவர்

Sujen said...

Bobby thanks for letting me know that awesome link

Loshan you are really inspired by your son.I hope my parents also should have been inspired my childhood.

Happy Birthday Harsha.

Unknown said...

அவன் நன்றாக படித்து உங்களுக்கும் நாட்டுக்கும் பெருமைகளை பெற்றுத்தர எனது வாழ்த்துக்கள்..

இரா பிரஜீவ் said...

தாய்மார் தம் பிள்ளைகள்மேல் வைக்கும் பாசத்தைத்தான் எல்லோரும் சிலாகித்து சொல்லுவார்கள். ஒரு தந்தையின் இப்போதுதான் பார்க்கிறேன்.

பிள்ளைக்கு இதைப்போல் பெரிய பரிசை யாராலும் கொடுக்க முடியாது!

harshu your dad is lucky but you are the luckiest to have such a DAD!

எல் கே said...

உங்கள் செல்ல மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள். சின்ன சின்ன விஷயங்களை எழுதி வைத்தால், நாளை அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு ஒரு பரிசாக இதைத் தரலாம். உங்கள் மனைவி விரும்பாவிட்டால், போட்டோ போடுவதை தவிர்த்துவிடலாம். நானும் என் மகளை பற்றி நிறைய எழுதுகிறேன். போட்டோ போடாமல்

Prapa said...

நிச்சயமாக அண்ணா, ஒரு தந்தையாக உங்கள் பணி நிச்சயமாக எல்லோருக்கும் சந்தோசத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியிருக்கும்... அதேவேளை ஹர்சுக்குட்டியை நான் நேரடியாக கண்டதில்லை,, ஆனால் அந்த சுட்டி பையனின் போட்டோகளை பார்த்து அவனின் சுட்டித்தனங்கள் எப்படி இருக்கும் என்று.. தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்,. பிள்ளைகளோடு நண்பர்கள் போல பழகுவதன் மூலமாகவே அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும், அதனை நீங்கள் அருமையாக செய்து வருகிறீர்கள் போலவே தெரிகின்றது. வாழ்த்துக்கள்.
அத்தோடு நேற்றைய தினம் ஹர்சுக்குட்டியின் பிறந்தநாள் கொண்டாங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தவுடன்( முக நூலில்) எனக்கு ஒரு சந்தேகம் வந்தது , யாருக்கு பிறந்த நாள் என்று!!!! , ஏனென்னா அதிகமான இடங்களில் அண்ணிதான் ( திருமதி லோஷன்) கலக்கி இருக்கிறார்..... ஹா ஹா..
மீண்டும் ஒரு முறை ஹர்சுக்குட்டிக்கு வாழ்த்துக்கள்.

கன்கொன் || Kangon said...

தந்தை லோஷனண்ணா பதிவு முழுக்க பெருமையோடு நிற்கிறார்.
கிரீடம் படத்தில் வரும் கனவெல்லாம் பலிக்குதே பாடல் பின்புலத்தில் தானாக ஒலித்ததை மறுக்க முடியாது.

// கனவெல்லாம் பலிக்குதே.. கண்முன்னே நடக்குதே..
வாழ்க்கைக்கு அர்த்தங்கள் கிடைக்கிறதே
வானவில் நிமிடங்கள் அழைக்கிறதே //

நல்ல சுட்டிப்பையனாக இருக்கிறான்,
அவனுடைய சூழலை நன்றாகப் புரிந்துகொள்கிறான், மற்றையது அவன் வயதிற்குரிய அத்தனை குறும்புகளையும் கொண்டிருக்கிறான்.

எனக்கும் இந்த நாவூறு, திருஷ்டி போன்றவற்றில் துளியும் நம்பிக்கை கிடையாது, எதற்கும் நாவூறு கழித்துவிடுங்கள்.
பதிவு அப்படி இருந்தது.

இது இரசிக்கக்கூடிய பதிவு கிடையாது, உணரக்கூடிய பதிவு.

விஷாலி said...

உங்கள் குட்டீசுக்கு என் வாழ்த்துக்கள்

மாயனின் தொலைந்த ப‌க்கம் said...

ஹர்ஷு குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள்!

அண்ணா உண்ணும் பழக்கம் இடது கையில் என்று கூறியிருக்கிறீர்கள்.அதையும் வலது கைக்கு மாற்றி விடுங்கள்.
காலம் மாறி போச்சு அண்ணே!!!இப்பவுள்ள பிள்ளைகள் படு வேகம்.ஆனால் மழலைகள் ரசிக்கக் கூடியவை.மனைவி சொல் கேட்டிருக்கலாம்.இந்த பதிவை எழுதாமலேயே விட்டிருக்கலாமொ!!!(ஹர்ஷு குட்டிக்கு திருஷ்டி சுத்தி போடுங்கோ அண்ணை!!) வானொலியில் இருந்து உங்களை ரசிப்பதை விட தகப்பனாக இருக்கின்ற உங்களை ரசிக்கிறேன்.

ஹர்ஷுவின் எதிர் காலம் இனியதாய் அமைய வாழ்த்துகிறேன்.!!

Rajasurian said...

அழகான பதிவு.

ஹர்ஷுக்கு ஏன் வாழ்த்துக்கள்

என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் தாங்கள்.தவறாக கருதவில்லை எனில் ஏன் எண்ணமும் குழந்தையின் புகைப்படத்தை(மட்டும்) இணையத்தில் பகிர்வதை தவிர்த்துவிடலாம் என்பதே(கண் திருஷ்டிக்காக அல்ல)

Muruganandan M.K. said...

ஹர்ஷுக் குட்டிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிறப்பான எதிர்காலம் கிட்டவும் வாழ்த்துகிறேன்.

Vijayakanth said...

அண்ணா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....மூச்சுக்கு மூச்சு ஹர்ஷுவை பற்றி அனுபவிச்சு எழுதியிருக்கீங்க...இதைப்பார்த்தா அவனுக்கு ஒரு தம்பியோ தங்கையோ துணைக்கு கொடுக்கிற ஐடியா அறவே இல்லாத மாதிரி இருக்கே....அப்பிடி ஒரு உடன்பிறப்பு வந்தாலும் அதைப்பற்றியும் இன்னொரு பதிவு போட்டாகணுமே...இல்லாட்டி எதிர்காலத்தில சகோதர சண்டை வந்துடுமே...!

நான் ஒரு விஷயத்தில ஹர்ஷுவை பார்த்து பரிதாபப்படுறேன்....அவன் வளர்ந்து பெரியவனாகி எதாவது application form நிரப்பும்போது முழுப்பெயர் ஆங்கிலத்தில எழுத ரொம்ப கஷ்டப்படப்போறான் .... LOSHAN VAMALOSHANAN HARSHAHAASAN
:-)

worldmazz said...

அண்ணா இப்ப இருக்க சின்ன பிள்ளைங்க ரொம்ப குறும்பு அதிலும் உங்க சிங்கமுனா சொல்லவா வேணும்

Vathees Varunan said...

முதலில் உங்கள் செல்லமகனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறன்...

பல அறிவிப்பாளர்களுக்கு வானொலி ஊடகத்துறையில் வரவிரும்புவர்களுக்கு நீங்கள் Inspiration ஒரு ஆக இருக்கிறீர்கள்...இந்தப்பதிவின் மூலம் பல தந்தையருக்கும் இனி தந்தையாக வரவிருப்பவர்களுக்கும்Inspiration ஒரு ஆக இருக்கப்போகிறீர்கள் வாழ்த்துக்கள்...

Vathees Varunan said...

:)

அஜுவத் said...

anna ovvoru thaayuum thanthayum thanathu kulanthayin valarchiyil adaiyum poorippu engume kidaiyathu.........

சம்மாந்துறை செய்திகள் said...

anna i so happy and i forget my all tensions really i so happy

கே.கே.லோகநாதன் - KK Loganathan [B.Com] said...

Hi.......ஹர்ஷுக் குட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ARV Loshan said...

Bobby said...
Happy Birthday Loshan Jr.

Loshan,

Probably you've already read this; but in case if you haven't.//
Thanx Bobby. yes i ve already read that. :)
Anyways tx for sharing again

ARV Loshan said...

யோ வொய்ஸ் (யோகா) said...
ஹர்ஷுக் குட்டியை பற்றி எழுதுகையில், உங்களிடம் இதுவரை நான் காணாத தந்தைக்கே உரிய கரிசனம், மகன் மேல் காட்டும் பாசம் என்பன எழுத்தில் தெரிகின்றன.//

:)

இதுவரை பதிவில் அதைப் பெரிதாகக் காட்டவேண்டி இருக்கவில்லையே :)



================================

Vijayakanth said...
anna ungaluku nambikai illatiyum neenga suththi poda than wenum enenda neenga harshuwai pathi eludiyathai wasikumpodu awanoda kannaththai killonum polawe iruku.//

அதற்கு அனுமதி இல்லை ;)



Innum 15 warusham inda blog entha errorum illama irukanum nu pray panren.//

ஏன்யா? யாரவது ஹக் பண்ணிடுவாங்கன்னு சந்தேகமா? ;)


Ungaloda inda pathivai harshu wasikumpodu nan potirukum commentaiyum wasipar thane so harshuwuku belated b'day wishes :)//

:)

இப்பவே இதையெல்லாம் பார்க்கிறான்.

ARV Loshan said...

கிருத்திகன் said...
:))//

நன்றி கிரு :)

========================

philosophy prabhakaran said...
அருமையான மற்றும் நெகிழ்ச்சியான பதிவு... உங்கள் புகைப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி... லோஷன் என்றால் ஏதோ கல்லூரியில் படிக்கும் பதின்ம வயது பதிவர் என்றே எண்ணிக்கொண்டிருந்தேன்...//

ஆகா.. அப்பிடியே விட்டிருக்கலாமோ?
என் எழுத்துக்கள் பார்த்தால் அப்பிடியா தோணுது? ;)மனசளவில் எப்போதுமே பதினெட்டு தான் ;)

ARV Loshan said...

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃநான் அவதானித்துப் பெருமைப் பட்ட விஷயங்களில் ஒன்று உண்மையே பேசுவது.ஃஃஃஃஃ

சிறுவயதிலெயே இந்தப் பழக்கம் இருப்பது மிக முக்கியம்... பின்னர் அவன் வாழ்வில் அடிபடுகையில் தானே உணர்வான் எப்போ உண்மை சொல்லணும் எப்போ பொய் சொல்லணும் என்று....//

அப்படியே இருந்தாலும் பெரும்பாலான நேரங்களில் உண்மையே பேசட்டும்



ஆனால் ஒன்று தங்களைப் போல் வெளிப்படையாகக் கதைக்கும் பழக்கத்தை மட்டும் பழக்க வேண்டாம்... அது நல்லதாக தெரிந்தாலும் சமூகத்தில் அப்படியானவருக்கத் தான் சில ????? வைத்திருக்கிறார்கள்...//

அதற்கென்ன, மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வது எமக்கும் நல்லது,எம் மனசுக்கும் நல்லது.

ARV Loshan said...

வந்தியத்தேவன் said...
அப்பேன்டா//

நன்றி..மாமா..



நாவூற்றில் நம்பிக்கை இருக்கோ இல்லையோ ஒரு சுத்திப்போடுங்கள்(ஹர்சுவுக்குத் தான் உங்களுக்கில்லை).//

இதுக்குத் தான் மாமா வேண்டும்(அனுபவத்தை சொன்னேன்)



கேள்வி கேட்கும் குழந்தைகளுக்கு சலிக்காமல் பதில் சொல்லவேண்டும் அவர்கள் தான் பிற்காலத்தில் நல்ல அறிவாளிகளாக வருவார்கள் என என் அம்மா அடிக்கடி சொல்வார்.//

உண்மை தான். அதுசரி, நீங்க சின்ன வயசிலேயே இப்படியா? ;)




சூழலும் முக்கியம், இதனை நான் அனுபவரீதியாக பல தடவை உணர்ந்துள்ளேண், யாழ்ப்பாணத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கும் கொழும்பில் வசிக்கும் குழந்தைகளுக்கும் நிறைய வித்தியாசம்,//

உண்மை. வாழும் சூழல் பிள்ளைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது.



இதேவே இங்கிலாந்தில் என்றால் நிறைய பெரியமனிதத் தன்மையுடனான பச்சிளம் பாலகர்களைக் காணலாம்.//

உன்காலியப் போலவா? அல்லது உண்மையான பாலகர்கலையா? ;)



நீங்கள் குழந்தையாக இருக்கும் போது செய்த குறும்புகள், குழப்படிகள் கதைகளைச் சொன்னாலே ஒரு வருடத்திற்கான கதை கிடைக்கும், இடையிடையே காவடி, கரகம் சூப்பர் மேன் என போட்டால் நவீன கதை,.//

சொ.செ.சூ வுக்கு நீங்கள் தயாராகினால் யாரால் என்ன செய்ய முடியும்?

//அப்பம்மா வீடு(என் அம்மா வீடு)//



அண்ணே இந்த இடத்தில் தான் எனக்கு ஒரு சந்தேகம், திமு முன்னர் அது உங்கள் வீடுதானே, இப்ப ஏன் அம்மா வீடு என்ற அடைமொழி.//

இப்போ என் வீடு வேற ஆச்சே.. :)





வந்தியத்தேவன் said...
பொபியின் ஆபிரகாம் லிங்கனின் கடிதம் என் அம்மா எனக்கும் அடிக்கடி வாசிக்கத் தருகின்றவர்//

அருமையான அம்மா..

ARV Loshan said...

Sujen said...

Loshan you are really inspired by your son.I hope my parents also should have been inspired my childhood.//

:)

tx for ur wishes


=================

அஸ்பர்-இ-சீக் said...
அவன் நன்றாக படித்து உங்களுக்கும் நாட்டுக்கும் பெருமைகளை பெற்றுத்தர எனது வாழ்த்துக்கள்..//

அதுக்குள்ளே இவனுக்கு இப்படிப்பட்ட பெரும் பொறுப்புக்கள் வேண்டாமே :

ARV Loshan said...

பிரபா said...
ஆனால் அந்த சுட்டி பையனின் போட்டோகளை பார்த்து அவனின் சுட்டித்தனங்கள் எப்படி இருக்கும் என்று.. தெரிந்து கொண்டேன் வாழ்த்துக்கள்,.//

நன்றிகள் தம்பி

பிள்ளைகளோடு நண்பர்கள் போல பழகுவதன் மூலமாகவே அவர்களை சிறந்த மனிதர்களாக மாற்ற முடியும், அதனை நீங்கள் அருமையாக செய்து வருகிறீர்கள் போலவே தெரிகின்றது. வாழ்த்துக்கள்.//

எனக்கு என் தந்தை வழங்கியதை அதிகமாகவே அவனுக்கு வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன் :)


அத்தோடு நேற்றைய தினம் ஹர்சுக்குட்டியின் பிறந்தநாள் கொண்டாங்களில் எடுக்கப்பட்ட போட்டோக்களை பார்த்தவுடன்( முக நூலில்) எனக்கு ஒரு சந்தேகம் வந்தது , யாருக்கு பிறந்த நாள் என்று!!!! , ஏனென்னா அதிகமான இடங்களில் அண்ணிதான் ( திருமதி லோஷன்) கலக்கி இருக்கிறார்..... ஹா ஹா..//

மகனுக்குப் பிறந்த நாள் என்பது அன்னைக்கு இன்னொரு ஜன்மம் மாதிரித் தானே? எனவே தான் அன்னைக்கும் அந்த நாளில் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது :)

ARV Loshan said...

LOSHAN said...
இரா பிரஜீவ் said...
தாய்மார் தம் பிள்ளைகள்மேல் வைக்கும் பாசத்தைத்தான் எல்லோரும் சிலாகித்து சொல்லுவார்கள். ஒரு தந்தையின் இப்போதுதான் பார்க்கிறேன்.//

:) தந்தைமாருக்குப் பாசம் இல்லை என்று யார் சொன்னது?



harshu your dad is lucky but you are the luckiest to have such a DAD!//
i ve to do more to deserve this honor :)


=================

LK said...
உங்கள் செல்ல மகனுக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

நன்றிகள் நண்பா..



சின்ன சின்ன விஷயங்களை எழுதி வைத்தால், நாளை அவன் வளர்ந்த பிறகு அவனுக்கு ஒரு பரிசாக இதைத் தரலாம்.//

ஆமாம் :)



உங்கள் மனைவி விரும்பாவிட்டால், போட்டோ போடுவதை தவிர்த்துவிடலாம். நானும் என் மகளை பற்றி நிறைய எழுதுகிறேன். போட்டோ போடாமல்//

ம்ம்.. பார்த்தேன்.. :)

ARV Loshan said...

கன்கொன் || Kangon said...
தந்தை லோஷனண்ணா பதிவு முழுக்க பெருமையோடு நிற்கிறார்.
கிரீடம் படத்தில் வரும் கனவெல்லாம் பலிக்குதே பாடல் பின்புலத்தில் தானாக ஒலித்ததை மறுக்க முடியாது.//

எனக்கு அந்தப் பாடல் மிகப் பிடித்ததே :)



நல்ல சுட்டிப்பையனாக இருக்கிறான்,
அவனுடைய சூழலை நன்றாகப் புரிந்துகொள்கிறான், மற்றையது அவன் வயதிற்குரிய அத்தனை குறும்புகளையும் கொண்டிருக்கிறான்.//

உண்மை :) எங்களின் மகிழ்ச்சிக்கான முழுமுதற் காரணி இவன்.


=========================



மனசாட்சியே நண்பன் said...
உங்கள் குட்டீசுக்கு என் வாழ்த்துக்கள்//

நன்றிகள்.


=============

ARV Loshan said...

ரோமியோவின் பக்கம் said...
ஹர்ஷு குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள்!//

நன்றி தம்பி



அண்ணா உண்ணும் பழக்கம் இடது கையில் என்று கூறியிருக்கிறீர்கள்.அதையும் வலது கைக்கு மாற்றி விடுங்கள்.//

இல்லை. வளரும் போது தானாக மாற்றிக் கொள்வான்


மனைவி சொல் கேட்டிருக்கலாம்.இந்த பதிவை எழுதாமலேயே விட்டிருக்கலாமொ!!!(ஹர்ஷு குட்டிக்கு திருஷ்டி சுத்தி போடுங்கோ அண்ணை!!)//

இல்லை :) அவனைப் பற்றி எழுதுவதில் எனக்கு இருக்கும் முழு சந்தோசம் கிடைத்தது.
எத்தனையோ எழுதுகிறேன் இவன் பற்றி எழுதாவிட்டால் எப்படி எல்லாம் பூர்த்திபெறும்?



வானொலியில் இருந்து உங்களை ரசிப்பதை விட தகப்பனாக இருக்கின்ற உங்களை ரசிக்கிறேன்.//

அட :)

===================

Rajasurian said...
அழகான பதிவு.

ஹர்ஷுக்கு ஏன் வாழ்த்துக்கள்//

நந்தி நண்பா..



என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் தாங்கள்.தவறாக கருதவில்லை எனில் ஏன் எண்ணமும் குழந்தையின் புகைப்படத்தை(மட்டும்) இணையத்தில் பகிர்வதை தவிர்த்துவிடலாம் என்பதே(கண் திருஷ்டிக்காக அல்ல)//

நன்றி உங்கள் அன்புக்கும் நல்லெண்ணத்துக்கும். ஆனால் நண்பர்களை நம்புகிறேன்

ARV Loshan said...

Dr.எம்.கே.முருகானந்தன் said...
ஹர்ஷுக் குட்டிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
சிறப்பான எதிர்காலம் கிட்டவும் வாழ்த்துகிறேன்.//

நன்றி டொக்டர்


================

Vijayakanth said...
அண்ணா எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்....//

காலாகாலத்தில் நடப்பவை நன்றாக நடக்கும் :)



நான் ஒரு விஷயத்தில ஹர்ஷுவை பார்த்து பரிதாபப்படுறேன்....அவன் வளர்ந்து பெரியவனாகி எதாவது application form நிரப்பும்போது முழுப்பெயர் ஆங்கிலத்தில எழுத ரொம்ப கஷ்டப்படப்போறான் .... LOSHAN VAMALOSHANAN HARSHAHAASAN //

நான் பெற்ற இன்பம் :)

ARV Loshan said...

SURENTHIRAN said...
அண்ணா இப்ப இருக்க சின்ன பிள்ளைங்க ரொம்ப குறும்பு அதிலும் உங்க சிங்கமுனா சொல்லவா வேணும்//

நன்றி சுரேன்
=====================

வதீஸ்-Vathees said...
முதலில் உங்கள் செல்லமகனுக்கு என்னுடைய பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுகிறன்...//

நன்றி வதீஸ்



பல அறிவிப்பாளர்களுக்கு வானொலி ஊடகத்துறையில் வரவிரும்புவர்களுக்கு நீங்கள் Inspiration ஒரு ஆக இருக்கிறீர்கள்...இந்தப்பதிவின் மூலம் பல தந்தையருக்கும் இனி தந்தையாக வரவிருப்பவர்களுக்கும்Inspiration ஒரு ஆக இருக்கப்போகிறீர்கள் வாழ்த்துக்கள்...//

பெரிய வார்த்தைகள்/வாழ்த்துக்கள்



=============================
அஜுவத் said...
anna ovvoru thaayuum thanthayum thanathu kulanthayin valarchiyil adaiyum poorippu engume kidaiyathu........//

:) நன்றி வருகைக்கு .


=======================

சம்மாந்துறை செய்திகள் said...
anna i so happy and i forget my all tensions really i so happy //

:)

ARV Loshan said...

Loganathan said...
Hi.......ஹர்ஷுக் குட்டி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

நன்றிகள் சகோ..

ஆதிரை said...

ஹர்ஷுவிற்கு என் இனிய வாழ்த்துக்கள்....

amirthan said...

Jr loshan க்கு பிறந்த தின வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃஃஅதற்கென்ன, மனதில் பட்டதைப் பட்டென்று சொல்வது எமக்கும் நல்லது,எம் மனசுக்கும் நல்லது. ஃஃஃஃஃஃ
அது தானே உங்களுடைய... +++++++

மித்ரா said...

Awww...He's so adorable, mashah allah! :)

ஈரோடு கதிர் said...

இன்றுதான் வாசித்தேன் லோஷன்

ஹர்ஷூக்கு வாழ்த்துகள்

காலம் கடந்து நிற்கப்போகும் பதிவு...

பாராட்டுகள் லோஷன்

Subankan said...

வாவ், வித்தியாசமான லோஷன் அண்ணாவைப் பார்க்கக் கிடைக்கிறது பதிவில் :)

செழியன் said...

எனக்கென்னவோ “அபியும் நானும் “ படத்தில் பிரகாஸ்ராஜ் தனது மகளையிட்டு மகிழ்வடைவதைப் போலவே லோஸன் அண்ணாவும் தனது மகனது பிறந்த நாளையிட்டு உருகியிருக்கிறார் தனது பாணியில். அவருக்கு எழுதப் பக்கம் போதவில்லை என்பது தெரிகிறது.ஒரு தந்தையின் பார்வையில் அரு்மையான பதிவு.கொடுத்து வைத்திருக்க வேண்டும்!!!இதற்காகவாவது சுத்திப் போடலாம்.

ஷஹன்ஷா said...

அண்ணா....அருமையான தந்தையின் அற்புதமான பதிவை உணர்வுகளின் மத்தியில் நின்று படித்தேன்.....

ஹர்ஷுவின் எதிர்காலத்தில் எங்களின்(இந்த தலைமுறை) பங்கு மிக முக்கியம்..(அத்திவாரம் பலமாக இருக்க வேண்டும் அல்லவா..)

அண்ணா என் தந்தையும் தங்களை போலவே என் சிறு வயது குறும்புகளை அடிக்கடி ஞாபகப்படுத்துவார்...ஏன் தன் சிறு வயது,இள வயது சுவாரஸ்யங்களையும் இன்றும் பகிர்ந்து கொள்கின்றார்..ஆகவே உங்களின் இந்த பதிவு மிக சரியானதே...எதிர்காலத்தில் உங்கள் மகன் மிகவும் சந்தோசபடுவான்...அதை உங்களோடு சேர்ந்து நாமும் ரசிப்போம்....

பிரணா said...

அண்ணா முதலில் ஹர்ஷூக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள். அண்ணா அருமையான தந்தையின் அற்புதமான பதிவு இது வாழ்த்துக்கள். அண்ணா ஹர்ஷு ஒருநாள் லோஷனின் களம் பார்க்கும் போது நிச்சயம் சந்தோசப்படுவான். அப்பாவின் மீது இருக்கின்ற அன்பு பாசம இன்னும கூடும்.

Athavan said...

. என்னை பாதித்த வரிகள் "டேய் செல்லக் கள்ளா உன்னைப் பற்றித் தான் எழுதுகிறேன்" என்று அவனைப் பார்த்து சொன்னது ஏதோ விளங்கியது மாதிரி "எனக்கா? என்ன?" என்று வழமையான கேள்விகளை ஆரம்பித்து விட்டு, தனக்குப் பிடித்த இரவு உடையுடன்(பிஜாமா) Good night சொல்லி அன்புடன் ஈரமுத்தம் தந்துவிட்டுப் போகிறான் என் ஹர்ஷுக் குட்டி. தூர இருந்து ஆனால் மிகவும் நெருக்கமாக உங்களை ரசிக்கிறேன் உங்கள் எழுத்து எப்போதும் என்னை நிறையவே கவர்ந்துள்ளது அதிலும் இப்பதிவு எனக்கு கண்ணீரையே வரவளைத்துவிட்டது. ஹர்ஷ நீ மிகவும் கொடுத்துவைத்தவன்.

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner