உலகக் கிண்ணம் இந்தியாவுக்கு சொந்தமாகி 6 நாட்களாகின்றன.
கடந்த உலகக் கிண்ணங்கள் போலவே இம்முறையும் பொருத்தமான ஒரு அணியையே உலகக்கிண்ணம் போய்ச் சேர்ந்துள்ளது. Worthy winners..
இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி ஒரு ரசிகனாக எனக்குக் கவலை தந்தாலும் பொருத்தமான ஒரு அணி வெற்றியீட்டியுள்ளது என்பதால் இந்தியாவை மனமார வாழ்த்தி இருந்தேன்.
உலகக்கிண்ணம் ஆரம்பமாவதற்கு முன்பே உலகின் அத்தனை விமர்சகர்களும் எதிர்வுகூறியது போலவே இந்தியா கிண்ணத்தை வென்றெடுத்துள்ளது.
போட்டிகளை நடாத்தும் இரு நாடுகளுக்கும் ஏனைய அணிகளை விட வாய்ப்புக்கள் அதிகம் என்று கருத்துக்கள் வெளியாகி இருந்தன. ஆடுகள, காலநிலை சாதகங்கள் போலவே அணிகளும் பலமாகவும் சமநிலையுடனும் இருந்தன.
இதனால் தான் உலகக் கிண்ணம் ஆரம்பிக்குமுன் Feb 18ஆம் திகதி இட்ட முன்னோட்டப் பதிவிலும் இலங்கை - இந்திய இறுதிப் போட்டி இடம்பெறும் என்று உறுதியாக எதிர்வுகூறியிருந்தேன்.
இந்தியா, இலங்கை இரு அணிகளுமே இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் என்பது அனைவரும் எதிர்பார்த்த விடயமே ஆயினும் இரு அணிகளுமே முதல் சுற்றில் சிற்சில சிக்கல்களை எதிர்கொண்டே கால் இறுதிக்குள் நுழைந்திருந்தன.
ஒப்பீட்டளவில் இலங்கைக்கு பாகிஸ்தானுடனான தோல்வியும் ஆஸ்திரேலியாவுடனான மழை கழுவிய போட்டியில் குறைந்த ஒரு புள்ளியும் வழங்கிய தலையிடியை விட, இந்தியாவுக்கு முதல் சுற்றில் இருந்த சிக்கல்கள் பாரியவை.
favorites என்ற பெருமையை இல்லாமல் செய்துவிடக் கூடியதாக இங்கிலாந்துடனான சமநிலையும் தென் ஆபிரிக்காவுக்கேதிரான அதிர்ச்சித் தோல்வியும் அமைந்தன. பலம் குறைந்த அணிகள் என்று சொல்லப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள், நெதர்லாந்து, அயர்லாந்து அணிகளை வெல்லவும் இந்தியா கொஞ்சமாவது சிரமப்பட்டிருந்தது.
ஆனால் சச்சின் டெண்டுல்கர் உலகக்கிண்ண வெற்றியின் பின்னர் சொன்னது போல இந்த முதல் சுற்றின் சிரமங்களும் தடுமாற்றங்களும் தான் அடுத்த மூன்று முக்கிய போட்டிகளையும் மூன்று பலம் பொருந்திய அணிகளை வீழ்த்த உதவியது.
இந்த உலகக் கிண்ணத்தில் குழுவில் அடங்கியிருந்த பதினைந்து வீரர்களையும் பயன்படுத்திய ஒரே முக்கிய அணி இந்தியா மட்டுமே. இது இந்தியா சரியான அணியைத் தெரிவு செய்யத் தடுமாறுகிறது என்ற ஐயத்தைத் தோற்றுவித்திருந்தாலும் இறுதியில் அனைத்தும் நன்மைக்கேயாக முடிந்தது.
ஒவ்வொரு அணிக்கும் எதிராக அந்த அணிகளின் பலம், பலவீனத்துகேர்பவும் ஆடுகளத்தன்மைக்கு ஏற்பவும் அணியைத் தேர்வு செய்யக் கூடிய நம்பிக்கையை தலைவர் தோனிக்கும் பயிற்றுவிப்பாளர் கேர்ஸ்டனுக்கும் இது வழங்கியிருந்தது.
இறுதிப் போட்டிக்கு வந்த அணிகளில் இலங்கையின் பாதை ஓரளவு இலகுவானது. இங்கிலாந்து, நியூ ஸீலாந்து ஆகிய இரு அணிகளையும் இலங்கையின் சுழல்பந்துவீச்சுக் கோட்டையான பிரேமதாஸ மைதானத்தில் வைத்து வீழ்த்துவது என்பது ஒன்றும் பெரிய கஷ்டமான வேலையில்லை.
ஆனால் இந்தியாவுக்கு காலிறுதியில் நடப்பு உலக சாம்பியன் ஆஸ்திரேலியா..
அரையிறுதியில் முதல் சுற்றுக்களில் விஸ்வரூபம் காட்டி நின்ற மற்றொரு அணியான பாகிஸ்தான்.
எவ்வளவு தான் இந்தியாவில் எல்லோரும் வாய்ப்புள்ள அணியாக ஏற்றுக்கொண்டாலும் இவ்விரு அணிகளும் இந்தியாவில் எந்த சூழ்நிலையிலும் வீழ்த்தலாம் என்ற ஊகங்களும் வெளிப்பட்டிருந்தன. அதுமட்டுமன்றி
இந்தியா முக்கிய போட்டிகளை விளையாடிய அஹ்மேதாபாத், மொஹாலி ஆகிய இரு மைதானங்களுமே இந்தியாவுக்கு வரலாற்று ரீதியாக இலங்கைக்கு சாதகத்தன்மை வழங்கியவை அல்ல.. டோனி அடிக்கடி சொல்லி வருவதும் இந்தியா அண்மைக்காலத்தில் நிரூபித்துவருவதும் இதையே.. சாத்தியப்படாதவற்றை சாத்தியப்படுத்துவது.
ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை தோற்கடித்ததன் மூலம் இந்தியா தன சுய பலத்தை எடை போட்டு அறிந்தது.
இந்த இரு வெற்றிகளும் உண்மையில் உலகக் கிண்ணங்கள் இரண்டை வென்ற திருப்தியை இந்தியாவுக்குத் தந்திருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
எனினும் இறுதிப் போட்டியை நாங்கள் நான்கு கால் பாதிகளாக எடுத்துக் கொண்டால், முதல் இருபத்தைந்து ஓவர்களும் , இறுதி இருபத்தைந்து ஓவர்களும் இந்தியா வசமாகியது.. இந்த இறுதிக்கட்டம் தான் தீர்க்கமானது.
இலங்கை அணியின் இருபத்தாறாம் ஓவரில் இருந்து ஐம்பதாவது ஓவர் வரையும் அதன் பின் சச்சின், செவாகை ஆட்டமிழக்கச் செய்து இன்னும் சில ஓவர்கள் வரையும் இலங்கையின் கையில் இருந்த போட்டியை கம்பீர், கொஹ்லி, தோனி ஆகியோர் லாவகமாக தம் வசப்படுத்தியத்தை சொல்கிறேன்.
கிட்டத்தட்ட ஒரே விதமாக நோக்கப்பட்டு வந்த ஒரே விதமான குணாம்சங்கள் கொண்ட அணித்தலைவர்களான சங்கக்காரவும் தொனியும் வேறுபட்டுத் தெரிந்த ஒரு முக்கிய போட்டி இது.
தோணி தனது நுண்ணிய நுட்பங்களைப் பயன்படுத்தியதும், சங்கக்கார பயன்படுத்தவேண்டிய நுணுக்கங்களைப் பயன்படுத்தாமல் போனதும் இந்த இறுதிப் போட்டியின் முடிவுகளாக அமைந்தன.
சங்கா முதல் இரு விக்கெட்டுக்களை மிக விரைவாக வீழ்த்தியபின் கிடைத்த அருமையான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்தியா மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கத் தவறி இருந்தார். இந்தத் தொடர் முழுவ்பதும் ஓட்டங்களைப் பெரிதாகக் குவித்திராத தோனி ஒவ்வொரு ஓட்டங்கலாகப் பெறுவதைத் தடுத்து அவரைத் திக்கு முக்காட வைத்திருக்கலாம்.
மாலிங்கவை (இவர் மட்டுமே இறுதிப் போட்டியில் இந்தியாவை அச்சுறுத்திய ஒரேயொரு இலங்கைப் பந்துவீச்சாளர்) இடையிடையே பயன்படுத்தி ஏதாவது வித்தியாசமாக செய்யவும் முயலவில்லை.
முரளியின் இரண்டு முக்கிய ஓவர்கள் இறுதிவரை பயன்படுத்தாமல் விடப்பட்டதும் ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
சந்காவின் பிழைகள் இவை என்றால் அணியில் செய்யப்பட நான்கு மாற்றங்களுமே சொதப்பியது சோகக் கதை.
அத்துடன் வழமையாக மிக சிறப்பாக செயற்படும் இலங்கையின் களத்தடுப்பு கடைசி இரு போட்டிகளிலும் படுமோசமாக இருந்ததும், இந்தியா மிகச் சிறப்பாகக் களத்தடுப்பில் இலங்கையை ஓரங்கட்டியதும் முக்கியமானது.
களத்தடுப்பு வியூகங்கள்(ஒவ்வொரு வீரர்களின் பலம்,பலவீனங்களைக் கணித்து அமைக்கப்பட்ட வியூகங்கள்), சாகிர் கானையும், யுவராஜையும் பந்துவீச்சில் பக்குவமாகப் பயன்படுத்தியது, கம்பீர்-கொஹ்லியின் இணைப்பாட்டதுக்குப் பின ஐந்தாம் இலக்கத்தில் (யுவராஜை முந்தி) வந்து போட்டியை முழுவதுமாகத் தன கையகப்படுத்தியதாகட்டும்... தோனி அன்றைய தினம் நிஜமான கதாநாயகன் தான்.
அதிலும் வென்றவுடன் ரவி சாஸ்திரியுடனான உரையாடலில் தோனி கம்பீரத்துடன் சொன்ன சில வார்த்தைகள் அப்படியே மனதைத் தொட்டன..
"இன்று நாம் தோற்றிருந்தால் அஷ்வினுக்குப் பதில் ஸ்ரீசாந்தை சேர்த்தது பற்றியும், யுவராஜுக்குப் பதில் நான் ஐந்தாம் இலக்கத்தில் ஆடியது பற்றியும் கேள்விகள் வந்திருக்கும்.. இவையெல்லாம் சேர்ந்து தான் இன்றைய வெற்றிக்கு என்னை உத்வேகப்படுத்தியிருந்தன"
இது தான் தலைமைத்துவம். என்ன தான் சில முடக்கல்கள், முடமாக்கும் விமர்சனங்கள் இருந்தாலும் உடைத்துப் போட்டு தோனி இந்தியாவுக்கு வேறு எந்தத் தலைவர்களும் பெற்றுத் தராத இமாலய வெற்றிகளைப் பெற்றுத் தர இந்த உறுதியும் , கொஞ்சம் கர்வமும் தான் காரணம்.
மஹேலவின் அபார சதம் அநியாயமாகப் போனது கவலை என்றால்.. முரளிதரனின் விடைபெறும் போட்டி வீணாய்ப் போனது சோகம்..
மஹேலவின் அந்த சதம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பெறப்பட்ட தலை சிறந்த சத்தங்களில் ஒன்று.
இதுவரையும் மஹேல பெற்ற சதங்களில் எவையும் தோல்வியில் முடிந்ததும் இல்லை;
உலகக் கிண்ணத்தில் சத்தங்கள் பெற்ற வீரர்கள் தோல்வியுற்ற அணியில் இருந்ததும் இல்லை.
மஹேல சிறப்பாக ஆடி, அபாரமாக ஓட்டங்கள் சேர்த்து இலங்கையை 274 என்ற பெரிய இலக்கைப் பெற்றுக் கொடுத்தும் தோல்வியிலே முடிந்தது தான் மன வேதனை+ஏமாற்றம்.
தோல்வியைப் பரிசாகப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒரு சதமல்ல மஹேலவின் சதம்.
இந்தியா வென்றபின் நான் ரசித்து நெகிழ்ந்த ஒரு சில விஷயங்கள்....
ஹர்பஜன், யுவராஜின் ஆனந்தக் கண்ணீரும்.. சச்சினின் பிரகாசமான முகமும்
தோனி காட்டிய அடக்கத்தை மீறிய குழந்தைத்தனமான மகிழ்ச்சி
முன்னாள் வீரர்கள் பலரின் முகத்தில் தெரிந்த 'அப்பாடா' என்ற திருப்தி
எம் ஊடகவியலாளர் அறையில் இந்திய ஊடகவியளாள நண்பர்களின் ஆனந்தமும் கண்ணீரும் எம்முடன் அவர்கள் பகிர்ந்த மகிழ்ச்சியும்
கொஹ்லி,அஷ்வின் போன்ற இளம் வீரர்கள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி+நெகிழ்ச்சி
சச்சினைக் காவிக் கொடுத்த அதே கௌரவத்தை கேர்ஸ்டனைக் காவியும் கொடுத்தது
யுவராஜிடம் சில காலமுன் பார்க்காத அந்த நிதானம்
என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் இந்த வெற்றியின் மூலம் உலகக் கிண்ணம் மிகப் பொருத்தமான வெற்றியாளரைப் போய்ச் சேர்ந்துள்ளது.
இந்தக் கிண்ணம் சச்சினின் கரங்களை அலங்கரித்திருப்பதும் சச்சின் டெண்டுல்கருக்குக் கிடைக்கவேண்டிய கிரிக்கெட்டின் இறுதி கௌரவமாக அமைகிறது.
அதே போல தற்போதைய கிரிக்கெட் உலகின் மிகச் சிறந்த தலைவராகப் பலரும் ஆமோதித்துள்ள தோனியினால் இந்தக் கிண்ணம் வெல்லப்பட்டிருப்பதும் காலத்துக்கு மிகப் பொருத்தமாகவே அமைகிறது.
இம்முறை இந்தியாவின் இந்த வெற்றியானது கிரிக்கெட் உலகுக்குத் தரப்போகும் செய்தி என்னவென்பது அடுத்த ஆண்டில் இலங்கையில் இடம்பெறும் World T20இல் தெரியவரும்.
ஆஸ்திரேலியாவின் வீழ்ச்சியும் இந்த கிரிக்கெட் சக்திப் பரம்பலில் முக்கிய இடம்பெறப் போகிறது.
சர்வதேசக் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் உடைக்கப்பட்ட பின்னர் இப்ப்போது இந்தியாவின் இந்த உலகக் கிண்ண வெற்றியானது அடுத்த கிரிக்கெட்டின் முன்னெடுப்பின் முக்கியமான கட்டமாகிறது.
1983இல் இந்தியா உலகக் கிண்ணம் வென்றது முதல் ஒவ்வொரு தடவை ஆசிய அணியொன்று உலகக் கிண்ணம் வென்றதும் கிரிக்கெட்டின் பரம்பலுக்கும் ஆசியாவின் ஆதிக்கத்துக்கும் கிரிக்கெட்டின் வர்த்தக ரீதியான வெற்றிக்கும் முக்கியமானதாக அமைந்திருக்கிறது.
ஆனால் இந்தியாவினதும் ரசிகர்களினதும் துரதிர்ஷ்டமோ என்னவோ, உலகக் கிண்ண வெற்றியின் உன்னதத்தை நீண்ட நாட்கள் கொண்டாட முடியாமல் ஒரு வாரத்துக்குள்ளேயே வந்து சேர்கிறது நவீன கிரிக்கெட்டின் பணக்கார கிரிக்கெட் கேளிக்கைத் திருவிழாவான IPL.
அதுவும் அதே இந்தியாவில்.
இந்த IPL அலையில் உலகக் கிண்ணத்தில் ஒன்றுபட்ட இந்திய ரசிகர்களின் ஆதரவு அலைகள் தமக்குப் பிடித்த வீரர்கள், அணிகள் பால் பிரிவடையப் போகின்றன.
இது நவீன கிரிக்கெட்டின் ஒரு வித சாபம் தான்..
ஒரு வாரத்தின் முன்னர் சேர்ந்தவர்கள் எதிரணிகளில் முட்டி மோதுவதும், மோதிக் கொண்டவர்கள் முறைத்துக் கொள்வதும் சகஜமாகிவிடும்..
ஆனால் புதிய இரு IPL அணிகளின் வருகையும், அநேகமான வீரர்கள்,ஏன் தலைவர்களே இடம்மாறி இருப்பதுவும் இம்முறை IPLஐ ரசிக்க விடுவதில் கொஞ்சம் தயக்கத்தைத் தருகின்றன. ஓரிரு நாட்கள் பார்க்க சரியாகிவிடும்..
ஆனாலும் உலகக் கிண்ணத்தொடு ஓடித் திரிந்ததும் பறந்து திரிந்ததும் கிரிக்கெட் என்றாலே கொஞ்சம் தள்ளி இருக்கலாமோ என்ற உணர்வை ஒருபக்கம் தந்தாலும் IPL தரும் ஒரு வித பரபர, கிளு கிளு கவர்ச்சி எப்படியும் ஒட்ட வைத்துவிடும்..
பற்றியும் அதை விட முக்கியமான இலங்கை கிரிக்கெட் அணியின் அண்மைய நம்ப முடியாத குழப்பங்கள் பற்றியும் விளக்கமான பதிவொன்றை இந்த வார இறுதி நாட்களுக்குள் தர முயல்கிறேன்...
சில குறிப்புக்கள் - இந்தியா வென்றதால் உடன் பதிவிடவில்லை என்ற நண்பர்களின் ஆதங்கங்களுக்கும், இலங்கை தோற்றதனால் பதிவே தரமாட்டீர்களா என்றவர்களுக்கும் இந்தப் பதிவு பதில் அல்ல..
அந்தத் தோல்வியின் களைப்பு (கவலை அல்ல) தந்த அலுப்பும், பயண விடுமுறையின் காரணமாக பாக்கியிருந்த வேலைகளும் மேலும் சில குடும்பப் பளுக்களும் தான் இந்தப் பதிவையே மூன்று நாட்களாக இழுபறித்தன என்பதே அந்த நண்பர்களுக்கான பதில்.
வெற்றியும் தோல்வியும் வீரனுக்கே. :)
மற்றொரு முக்கிய குறிப்பு - இந்த இறுதிப் போட்டியில் இலங்கை பணம் வாங்கிக் கொண்டு தோற்றது.. வீரர்கள் பணத்துக்க் அடிமையாகி போட்டியை விட்டுக் கொடுத்தார்கள் என்றெல்லாம் பரவலாக வதந்திகள் பரவுகின்றன..
எலும்பில்லாத நாவுகள் எப்படியும் புரண்டு பேசும்..
ஆனால் இப்படியான பேச்சுக்கள் இந்தியாவின் வெற்றியின் மகத்துவத்தையும் கேள்விக்குறியாக்கி,கேவலப்படுத்திவிடும் என்பதையும் நாம் உணரவேண்டும்..
இம்முறை எந்த IPL அணிக்கு ஆதரவு என்று கேட்கும் நண்பர்களுக்கு......
கடந்த மூன்று முறையும் என் முதல் ஆதரவு சென்னை சூப்பர் கிங்க்ச்சுக்கே..
பஞ்சாபும் ராஜஸ்தானும் கொஞ்சம் பிடித்தே இருந்தன..இம்முறை??? அடுத்த பதிவுக்கு முதல் ஊகியுங்களேன்...
சரியாக ஊகிப்போர் பெயர்கள் அடுத்த பதிவில் இடம்பெறும்...