July 07, 2011

பேராசிரியர் ஐயா - பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்களின் நினைவுகள்


பேராசிரியர் சிவத்தம்பி ஐயா காலமானார் என்ற செய்தியை தம்பி ரெஷாங்கன் நேற்று தொலைபேசியில் இரவு சொன்னபோது பெரிதாக அதிர்ச்சி இருக்கவில்லை; ஆனால் மனதில் பெரியதொரு கவலை.

இறுதியாக அன்றொருநாள் விடியல் நிகழ்ச்சி செய்துகொண்டிருந்தவேளையில் ஐயாவிடம் தொலைபேசி மூலமாக "கலைச்சொற்களின் பாவனை" பற்றிய சந்தேகத்தைக் கேட்டபோது, "நேரம் இருந்தால் வீட்டுப் பக்கம் வா அப்பன்.. கொஞ்சம் பேசலாம்" என்று அவர் விடுத்த அழைப்பை ஏற்கமுடியாமல் போன கவலை தான் மனதில்.

அவரது பிறந்தநாளன்று (மே 10 )வானொலியில் வாழ்த்து சொல்லிவிட்டு அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்தியபோது "வயசு போன கட்டையளையும் வானொலியில் வாழ்த்துறீங்கள்.. தனியே நடிக, நடிகையரை மட்டும் தான் சிலபேர் வாழ்த்துரான்கள்" என்று சிரித்தவர், கொஞ்சம் சமகால நடப்பு, அரசியலும் பேசித்தான் முடித்தார்.

எனது தாத்தாவுடன் (சானா - சண்முகநாதன்) அவரது வானொலிக்கால நட்பு, எனது பாட்டனாருடனான (பண்டிதர்.சபா ஆனந்தர்) இலக்கிய நட்பு, பின்னர் அப்பா,அம்மாவுடன் தொடர்ந்து, நானும் அய்யாவுடன் பழகும் வரை நீடித்தது பாக்கியம் தான்.

அவரது பன்மொழி, பல்துறை ஆற்றல் பற்றி உலகமே அறிந்ததே.. ஆனாலும் இந்த முதிய பருவத்தில், அவர் இறுதிக்காலத்தில் எழுந்து நடக்கவே சிரமப்படவேளையிலும், வானொலி செய்திகள் அத்தனையும் கேட்பதும், சமகால அரசியல், நாட்டுநடப்பு போன்ற சகலவிஷயங்களையும் விரல் நுனியில் வைத்திருந்த அவரது சுறுசுறுப்பும், தேடலின் மீதான ஆர்வம் தொடர்ந்ததும் என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு ஆச்சரியம் தான்.

அவரது உடல்நிலை சரியாக இருக்கும் நேரங்களில்,அவருக்கென்று இருந்த CDMA தொலைபேசியில் எந்தவேளையில் அழைத்தாலும் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும்.
 சகல விஷயங்களுக்கும் ஒரு அகராதி போல, ஆதியோடந்தமாக விளக்கம் தருவதில் ஐயாவை யாரும் அடிக்க முடியாது.

அறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மாபெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது. அவரது அறையிலே பல வேளை நாம் சந்திக்கும்போழுதுகளில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் தான் மட்டும் பேசாமல் எம்மையும் பேசவிட்டு, எமது கருத்துக்களையும் கேட்டறிவதும், சின்ன சின்ன புதிய விஷயங்கள் இருந்தாலும் அதை நுணுக்கமாகக் கேட்டறிவதும் எங்களுக்குப் பெரிய ஆச்சரியத்தை ஆரம்பத்தில் தந்தாலும் அவரது பெருந்தன்மை, தன்னடக்கம், இன்னமுமே கற்கும் ஆர்வம் ஆகியன எல்லாமே எங்களுக்குத் தந்த பாடங்கள் வாழ்நாளில் வேறெங்கும் வகுப்பு போட்டும் கற்க முடியாதவை.

இது மட்டுமல்லாமல், எங்கள் தாத்தாவுக்கு ஒரு நினைவு நூல் வெளியிட்டவேளையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய நண்பர் என்ற அடிப்படையில் பேராசிரியர் ஐயாவிடமும் ஒரு ஞாபகக் கட்டுரை பெறுவது என்று நானும் அம்மாவும் அவரிடம் சென்றோம்.
தனக்கு இருக்கும் நோயுடன் எழுதித் தரமுடியாது என்றும் ஆனாலும் தான் சொல்வதை அப்படியே ஒலிப்பதிவு செய்யுமாறும் சொல்லி இருந்தார்.தயாராக சென்றிருந்த எமக்கு அவரது தங்கு தடையின்றிய அவரது ஞாபகப் பகிர்வுகள் ஆச்சரியம்.
ஒவ்வொரு நிகழ்வையும் ஒவ்வொருவர் பற்றிய தகவல்களையும், ஒவ்வொருவருடைய பெயரையும் அவர் கோர்வையாக சொன்னது எங்களுக்கு அவர் மேல் மேலும் மேலும் மரியாதையை ஏற்றியது.

அடுத்து அவர் சொன்னது தான் ஐயா இவ்வளவு எல்லோராலும் மிக்க மதிக்கப்படுவதன் இன்னொரு காரணத்தைக் காட்டியது...

"தம்பி, இப்ப நீ ரெக்கோர்ட் பண்ணின எல்லாத்தையும் அப்பிடியே எழுதியோ, டைப் பண்ணியோ என்னிடம் கொண்டு வா.. வந்து வாசித்துக் காட்டு.. சரி பிழை பார்த்துத் தான் ப்ரிண்டுக்குக் குடுக்க வேணும். சரியோ? பிறகு நான் சொன்னது தவறாகவோ, சொல்லாதது பிழையாகவோ வந்திடப்படாது பார்"

இது தான் அவர் எல்லா இடங்களிலும் காட்டும் நேர்த்தி.

அவர் பற்றிய விமர்சனங்களிற்கும் அவர் பதில் கொடுப்பதையும் காலாகாலமாகப் பார்த்துள்ளேன்..
வானொலியில் சில தரம் பேட்டி கண்டபோது கேட்டும் இருக்கிறேன்.

ஒரு கல்வியாளராக மட்டுமன்றி, கலைஞராகவும் திறனாய்வாளராகவும் பேராசிரியரின் பணிகள் பற்றி சொல்வதற்கு எனக்கு அனுபவமும் கிடையாது அருகதையும் கிடையாது.

ஒரு தடவை வலதுசாரி - இடதுசாரி பற்றிய சந்தேகம் நேயர் ஒருவரால் என்னிடம் கேட்கப்பட்டபோது, ஐயாவை நேரடியாகத் தொடர்புகொண்டு வானலையில் இணைத்தேன்.. ஒரு நிமிடத் தயாரிப்பும் இல்லாமல் ஐயா பதிலளித்தவிதம் வார்த்திகளால் பாராட்டப்பட முடியாதது.
அதற்கிடையில் தனது கொள்கை மாற்றம் பற்றிய விஷயமும் சொன்னார்.

ஒரு தடவை அப்போது வெளிவந்துகொண்டிருந்த 'ஜே' சஞ்சிகைக்காக நானும், சக ஊடக நண்பர்கள் கஜமுகன், பிரதீப் க்ரூஸ் ஆகியோருடன் பேராசிரியரைப் பேட்டி காணும் வாய்ப்பை நண்பர் மதன் தந்திருந்தார். அந்தப் பேட்டியின் ஸ்கான் பிரதியை இங்கே இணைத்துள்ளேன்.

வாசிக்க சிறியதாக இருந்தால் தரவிறக்கி வாசியுங்கள்.





சாகும்வரை பேராசிரியர் என்று அழைக்கப்படக் கூடிய தகுதி இந்தத் தகைசார் பேராசிரியருக்கு மட்டுமே இருந்தது என்பது அவருக்கல்ல அவர் பிறந்த அதே தமிழ் பேசும் சமூகத்தில் பிறந்த எமக்குரியது என்பதைப் பெருமையுடன் அவரை ஞாபகித்து பகிர்ந்துகொள்கிறேன்.

இன்னும் சிலகாலம் தமிழுக்குத் தரவேண்டியவற்றை அவரின் இறப்பும் அதற்கு முதல் கடந்த ஏழு வருடகாலம் அவரை நடமாட விடாது செய்த நோயும் ஏற்படுத்தியிருந்தன.


இறக்கும்வரை எங்களுக்கு கற்பித்துக்கொண்டே இருந்த தகைசார் பேராசான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களுக்கு எனதும் எனது குடும்பத்தினதும் அஞ்சலிகள்.


##### அன்னாரின் பூதவுடல் இன்று மாலை ஆறு மணிமுதல் கொழும்பு, தெகிவளை, வண்டேவர்ட் பிளேசில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, காந்யிறு மாலை இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என்று குடும்பத்தார் தெரிவிக்கிறார்கள்.

8 comments:

நிரூபன் said...

வணக்கம் சகோ,

பேராசிரியரின் மறைவு மனதைக் கனக்கச் செய்ய,
மறு புறம் அவரின் தமிழ் உலக வாழ்வினையும் மீட்டிப் பதிவாகத் தந்து மேலும் மேலும் எம் மனங்கள் அவர் இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கலாமே என ஆதங்கப்பட வைத்திருக்கிறீங்க.

பகிர்விற்கு நன்றி.

நிரூபன் said...

பேராசிரியரின் ஞாபக சக்திக்கும், கேட்டவுடன் மறுப்பேதும் சொல்லாது பேட்டி என்றாலோ, இலக்கியப் பகிர்வு என்றாலோ நேரம் ஒதுக்கி வழங்கும் அவரது செயல்களுக்கும் அவருக்கு நிகர் அவரே தான்.

தமிழ் நல்லுலகைத் தவிக்க விட்டுச் சென்ற அவரது மறைவு தான் இன்று இதயத்தை வாட்டுகிறது.

யோ வொய்ஸ் (யோகா) said...

R.I.P

வடலியூரான் said...

//அறுபது ஆண்டுகால இலக்கிய நண்பர்களிடம் காட்டும் அதே அன்பையும் உரிமையும் எங்களைப் போன்றவர்களிடமும் காட்டுவதும், எம் போன்ற இளைய ஒலிபரப்பாளரையும் கூட அன்புகாட்டி அங்கீகரிப்பதையும் கூட நாம் வேறு எந்த மாபெரும் கல்வியாளரிடமும் எதிர்பார்க்க முடியாது


பேராசிரியருக்கு அஞ்சலிகள்

Mathuran said...

தமிழ் அன்னை ஒரு மிகப்பெரிய சேவையாளனை இழந்துவிட்டாள்....

பேராசிரியருக்கு அஞ்சலிகள்

வந்தியத்தேவன் said...

ஓரிருமுறை அப்பாவுடன் சில முறைசித்தப்பாவுடன் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர்து பேச்சுப் பாணி ரொம்பவே பிடிக்கும். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

maruthamooran said...

பொஸ்.....!

நல்ல ஞாபகப் பகிர்வு. பேராசானின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது.

அதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா? இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.

ARV Loshan said...

நிரூபன்
யோ வொய்ஸ் (யோகா)
வடலியூரான்
மதுரன்
வந்தியத்தேவன்
மருதமூரான்

வருகைக்கு நன்றி + துக்கத்திலே இணைந்து கொண்டமைக்கும் நன்றிகள்..



அதுசரி, சண் அங்கிள் உங்களின் தத்தாவா? இவ்வளவு காலமும் எனக்குத் தெரியாது.//

எந்த சண் அங்கிளை நீங்கள் கொள்கிறீர்கள் என்று தெரியாது..

ஆனது தாத்தா சானா என்ற புனைபெயரைக் கொண்ட இலங்கையின் முதலாவது தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளர் சண்முகநாதன்.

எனக்கு ஒரு வயதாக முன்னரே காலமாகிவிட்டார்

ரசிக்க,சுவைக்க,சிரிக்க - கிளிக்குங்க..


View My Stats

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner